ஊடகங்களின் கதாநாயகன்

அரசாங்கத்தில் ஊழல் பெருகும் போது, சட்டங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. - டாசிடஸ் (ரோம வரலாற்றாசிரியர்)
ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கம் என்ற மாபெரும் நாடகம் இப்போது அரங்கேறிக் கொண்டிருக்கிறது. பல நகைச்சுவைக் காட்சிகளைக் கொண்டது இந்நாடகம்.
ராலேகான சித்தி என்ற கிராமத்தைச் சேர்ந்த அன்னா ஹசாரேவும், (இந்திய நிர்வாகத்தின் அழுகிப் போன புண்களை நோண்டிப் புகழ்பெற்றவர்) இந்திய நிர்வாகத்தின் பழைய அங்கங்களான அவரது தோழர்களும் இந்நாடகத்தின் முக்கிய மாந்தர்கள்.
முதல் காட்சி - அன்னா ஹசாரே லோக்பால் மசோதாவை சட்டமாக்கக் கோரி உண்ணாவிரதம் தொடங்குகிறார். அரசாங்கம் அவரை அமைதிப்படுத்த சில நடவடிக்கைகள் எடுக்கிறது. தனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மீண்டும் உண்ணாவிரதம் இருக்க நேரிடும் என்று அன்னா மிரட்டுகிறார்.
இரண்டாம் காட்சி - கோடீஸ்வர யோகா குருவான பாபா ராம்தேவ் தில்லியில் ஒரு ஐந்து நட்சத்திர உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றுகிறார். அரசாங்கம் அவருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கிறது. போலீசார் கைது செய்ய வரும்போது சல்வார் கமீஸ் அணிந்து கொண்டு தலைமறைவாகிறார்.
மூன்றாவது காட்சி - அரசாங்கம் "மக்கள் சமூக"த்தின் எதிர்ப்புகளுக்கிடையே வலுவற்ற லோக்பால் மசோதாவை வடிவமைக்கிறது.
நாடகத்தின் உச்சகட்டம் - ஊழலில் இருந்து இந்தியாவைக் காக்கும் இரட்சகரான அன்னா ஹசாரே மேடையில் தோன்றுகிறார். தனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக மிரட்டுகிறார். அரசாங்கம் அன்னாவின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்கிறது. அவர் உண்ணாவிரதத்தை நிறுத்திக் கொள்கிறார்.
எதிர் உச்சகட்டக் காட்சிகள் இப்போதும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அரசாங்கம் பாராளுமன்றத்தில் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்தது, அதிகமாகக் கவனிக்கப்படாத அன்னா ஹசாரேவின் இப்போதைய உண்ணாவிரதங்கள் என்று...
ஆனாலும் எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை. நமக்கு ஏன் லோக்பால் தேவைப்படுகிறது? இந்தியாவில் ஊழலை ஒழிக்க எத்தனையோ அமைப்புகள் உள்ளன. அவற்றால் ஊழலை ஒழிக்க முடியவில்லையெனில் லோக்பாலால் மட்டும் எப்படி முடியும்? சிலர் லோக்பாலில் உள்ள வெளிப்படைத் தன்மை ஊழலை ஒழிக்க உதவும் எனலாம். அப்படியானால் அந்த வெளிப்படைத் தன்மையை அனைத்து அரசாங்க அங்கங்களிலும் அறிமுகப்படுத்தினால் என்ன? லோக்பால் ஊழல் அமைப்பாக மாறிப் போனால் அடுத்து என்ன செய்வீர்கள்? லோக்லோக்பால் என்பீர்களா? இந்தியாவில் ஊழல் செய்ய ஏராளமான வழிகள் உள்ளன.
இந்த அமைப்புக்கு இளைஞர்கள் ஆதரவு கிடைத்ததில் ஆச்சரியமில்லை. இளைஞர்கள் கும்பல் மனப்பான்மையால் பீடிக்கப்பட்டவர்கள்; ஊடகங்கள் காட்டும் வழியில் செல்பவர்கள்; அழைத்தவர் பின்னே ஆட்டு மந்தை போல் ஓடுபவர்கள். அவர்களைப் பொறுத்தவரை லோக்பால் ஆதரவு போராட்டம் அப்படியொன்றும் சிரமமானது அல்ல. ஒரு மெழுகுவர்த்தியை பிடித்துக் கொண்டு நிற்பதோ, ஒருநாள் உண்ணாவிரதமிருப்பதோ அத்தனை சிரமமான விஷயங்கள் அல்ல.
எனக்கு சொல்வதற்கு இன்னும் சில விஷயங்கள் உண்டு. கங்கை நதியின் தூய்மையைக் காப்பதற்காக உண்ணாவிரதமிருந்து உயிர்விட்ட சுவாமி நிகமானந்தரை எத்தனை பேருக்கு நினைவிருக்கிறது? மணிப்புரி பெண்கள் மீதான இந்திய ராணுவத்தின் அடக்குமுறைகளைக் கண்டித்து போராடி வரும் ஐரோம் ஷர்மிளாவைப் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்?
காஷமீரில் அநாமதேயக் கல்லறைகள் ஆயிரக்கணக்கில் கண்டுபிடிக்கப்பட்டதைப் பற்றி அன்னாவின் "மக்கள் சமூகம்" வாய் திறக்கவில்லை.
ஆனாலும் ஊடக வெளிச்சம் ஆட்சி செய்யும் நாட்டில் அன்னா ஹசாரேவின் குளுக்கோஸ் அருந்தும் உண்ணாவிரதம் கொண்டாடப்படுகிறது. (14 நாட்கள் நீர்கூட அருந்தாமல் உண்ணாவிரதமிருந்து உயிர் விட்ட தமிழனை இன்றைய இளைஞர்கள் அறிவார்களா?)

எழுதியவர் : (8-Jan-12, 8:32 am)
பார்வை : 594

சிறந்த கட்டுரைகள்

மேலே