5.எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வோம்.!.-பொள்ளாச்சி abi

காதலைத் தவிர வேறு பெரிதான விஷயம் என்று எதுவுமே இல்லை என்று,இளைஞர்களுக்கு எதற்காக கற்பிக்கவேண்டும்.?.காதலுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து,படைப்புகளின் திசைவழியை ஏன் திருப்பவேண்டும்.?
அப்போதுதானே நண்பா,நீ அரசிடமோ,அவர்களின் பிரதிநிதிகளிடமோ உனக்கான வாழ்வியல் உரிமைகளைக் கேட்கமாட்டாய்.! மனிதனாகப் பிறந்துவிட்டோம்.எனக்கான வசதிகளைச் செய்துகொடு என்று கேட்கமாட்டாய்.!
கேட்காமலிருந்தால்தானே அவர்களது சொத்துக்கள் அப்படியே இருக்கும் அல்லது புதிதாய் சேர்க்கமுடியும்.

நீங்கள் காதலைப்பற்றி மட்டுமே,கவிதைகள் எழுதுவதும்,படைப்புகளை வெளியிடுவதும் உங்கள் விருப்பமாகத் தோன்றலாம்.ஆனால் அதுதான் உங்கள் விருப்பமாக அமைவதற்கு,உங்களை பழக்கப்படுத்திவிட்டோம்.அதைத் தவிர வேறு எதுவும் பெரிதில்லை என்று,ஒரு ஹிப்னாட்டிசம் போல அடிமையாக்கி விட்டோம் என்பதுதான் உண்மை.
ஆனால்,நீங்கள் அவ்வாறு படைக்கும்போது,உங்களுக்கே தெரியாமல்,யாருக்கோ துணைபோகிறீர்கள் என்பதே அர்த்தம்.!

காதல் கவிதைகளே எழுதக்கூடாது என்கிறீர்களா..? என்று நீங்கள் கேட்டால்,
அப்படியல்ல..
கம்பன்,இளங்கோ,பாரதி,காளிதாசன்,ஷெல்லி,கீட்ஸ்,பைரன்,உமர்கயாம்,கண்ணதாசன் ஆகியோர் சொல்லாத காதலா.? உவமைகளா.,? கருப்பொருளா..? எதை நீங்கள் புதிதாக சொல்லிவிடமுடியும்.
மலரிலிருந்த தேனைப் பருக வண்டு வந்தது.என்ற செயலை,நீங்கள் எத்தனை விதமான வார்த்தைகளில் சொன்னாலும்,அந்தக்கரு குறித்து முன்பே சொல்லப்பட்டிருக்கிறது.நிலா,தென்றல்,குழல்,உதடு,காதலியின் அங்கம் என எதை நீங்கள் வர்ணித்தாலும் அது முன்பே சொல்லப்பட்டிருக்கிறது.
பிறகு எதற்கு நீங்களும் அதையே சொல்லவேண்டும்.

காதலைக்குறித்துப் பாடும்போது,ஒரு ஆண்,ஒரு பெண் இருவரும் மனதால் இணைகின்ற,மனிதன் தோன்றிய காலம்தொட்டு நடைபெறுகிற ஒரு விஷயம்தானே.!

ஆனால் நீங்கள் சொல்வதற்கு புதிதான விஷயங்கள்,கருப்பொருள்கள் இங்கே இருக்கின்றன.கம்பனுக்கும்,பாரதிக்கும் தெரியாத விஷயங்கள் உங்களுக்கு தெரிந்திருக்கிறது.அவர்களுக்கு இல்லாத வசதிகள் உங்களுக்கு இருக்கிறது.
அதுதான் சமகாலத்துப் பிரச்சினைகளும்,எதிர்காலம் குறித்த கற்பனைகளும்..
பிறகென்ன.? காதலே என்றாலும்,சொல் புதிதாய்,பொருள் புதிதாய் படைப்போமே..!

காதலி சீதாவை
கடல்கடந்து
கடத்திச்சென்றால் என்ன.?.
தூது செல்ல சூடாமணி
தேவையில்லை..,
நவீன ராமனுக்கு
வெப் கேமிரா இருக்கிறது.!

பிரிவும்,பிரிவுமற்ற நிலையில்,காதல் கவிதையை இப்படியும் சொல்லலாமே..!

இது உங்களுக்கு இராமாயணத்தை நினைவூட்டினாலும்,அதை குறிப்பிடவில்லை.
சீதா என்ற பெயருள்ள காதலியை,தன்னிடமிருந்து பிரித்துச் சென்றதால்,ராமன் என்ற காதலன் வருத்தப்படவில்லை. என்பதே இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது.
ஆனால்,ஒரு கவிதையை அல்லது படைப்பை எழுதும்போது,நேரடியான ஒருவிஷயத்தைக் குறிப்பிடுவதோடு,மறைமுகமாகவும் மேலும் சிலவிஷயங்களைக் குறிப்பிடும்படியாக எழுதுவது,வாசகனை இன்னும் உற்சாகப்படுத்துமே.!அவனது சிந்தனையோட்டத்தை புதியவழியில் செலுத்துமே.! அதை ஏன் நாம் செய்யக்கூடாது.?.
இது சாதாரணமாக,காதலைப் பற்றி மட்டுமே சொல்லக்கூடிய படைப்பாக இருக்கிறது.

-உன் அழகு என்னைக்
கட்டிப்போடுகிறது..,
உன் நினைவுகளால் நான்
மூச்சுத் திணறுகிறேன்..,

விலைவாசிப் புயலுக்குள் சிக்கிய
குடும்பத் தலைவனைப்போல..!-

காதலிப்பவர்,தனது காதலை இப்படிச்சொன்னால் அதிலென்ன தவறு.?.முதல் இரண்டுவரிகளையும்,எல்லோரும் வேறு ஏதாவது வார்த்தைகளைப் போட்டுச் சொல்லித்தானிருப்பார்கள்.ஆனால்,கடைசி இரண்டுவரிகளாக,காதலின் வீரியத்தை,விலைவாசியுடன் ஒப்பிடும்போதும்,அதனை ஈடுகட்ட முடியாமல் விழிபிதுங்கும் குடும்பத்தலைவனின் நெருக்கடியான நிலையையும் சொல்லும்போது,கவிதை அழகு பெறாதா..?.புதிய அர்த்தம் தராதா.?.
இதேபோல்,

விண்ணில் ஏவும் ராக்கெட்டின்
வேகத்தை அதிகப்படுத்த
விஞ்ஞானிகள் ஆலோசனை..,
அதனால்
விலைவாசியின் வேகத்தைக்
குறித்து ஆராய்ச்சி..!

இப்படிச் சொல்லும்போது படிப்பவனின் ரசனைக்கு,நல்ல தீனியாக அது இருக்காதா.?.அவனையும் புதிதாக சிந்திக்கவைக்காதா.?.
மேலும் ஒரு படைப்பாளி என்பவன்,சமூகத்தோடு ஒன்றிணைந்து இருப்பதையும் இதுகாட்டவில்லையா..?.
இதனைத்தான் முன்பே குறிப்பிட்டேன்.கம்பனுக்கும்,பாரதிக்கும் தெரியாத,அவர்களது காலத்தில் இல்லாத, எத்தனையோ விஷயங்கள்
உங்களுக்கு தெரிந்திருக்கிறது.ஏன் அவற்றையெல்லாம் மையப்படுத்தி,உங்கள் படைப்புகள் வெளிப்படக்கூடாது.?

படைப்பு என்பதில் எத்தனைவிஷயங்கள் உள்ளது.கவிதை எனது கைவாள் என்று ஒரு கவிஞர் கம்பீரமாக பாடுகிறார் எனில்,மனதிகுலத்துக்கு எதிராக எவையெல்லாம் இருக்கிறதொ,அவற்றை வெட்டிச் சாய்க்கப் புறப்பட்டுவிட்டார் என்று அர்த்தம்.
எதற்காக வெட்டிச் சாய்க்க வேண்டும்.?.

இங்கே மீண்டும் மூன்றாவது அத்தியாயத்தை நினைவூட்ட விரும்புகிறேன்.

- சொத்துக்கள் இல்லாவிட்டாலும்,அடிப்படையான வசதிகளோடு யாரும் தங்கள் இயல்பான வாழ்க்கையை வாழமுடியும் என்ற உத்தரவாதம் கிடைத்துவிட்டால்…,
சற்றே யோசித்துப் பாருங்கள்..!.

நமது குழந்தைகளின் விருப்பத்திற்கேற்ற படிப்பு,படிப்புக்கேற்ற,அல்லது சக்திக்கேற்ற வேலை.., குடும்பத்தின் தேவைக்கேற்ற சம்பளம்.அடிப்படை வசதிகளுக்கு குறைவில்லாத வகையில் ஒருவீடு.அன்றாட தேவைகளாய் இருக்கின்ற போக்குவரத்து, மருத்துவம்,இன்னும் குடும்பத்தின் தேவைக்கேற்ற எல்லாமே நிறைவேற்றும் நமக்கான ஒரு அரசு...என்று இருந்தால்..! .. உங்களுக்கு எதற்கு சொத்து..?-

இந்த நாட்டின் சகலவிதமான சீர்கேடுகளுக்கும் காரணமாய் இருக்கும் தனிச்சொத்துரிமையைப் போக்கவும்,நமது எதிர்கால சந்ததிகள் எவ்வித அச்சமும் இல்லாமல் வாழவும்,காதலையும் எழுத்துக்கான,படைப்புக்கான ஒரு ஆயுதமாய் சிந்தியுங்கள்.
மேலும்,நமது கனவான எதிர்கால வாழ்க்கை நலமாக அமைய,இடையூறாக இருக்கும் அத்தனை விஷயங்களையும் உங்கள் பாடுபொருள்கள்,படைப்புகள் மூலம் அம்பலப்படுத்துங்கள்.எதுவெல்லாம் தனிமனிதனின்,சமூகத்தின் அமைதியைக் கெடுப்பதின் மூலம்,எதைப்பாதுகாத்துக் கொள்ள முயல்கின்றன என்று சிந்தியுங்கள்.காரணம் இல்லாமல் காரியம் இல்லை.எந்த விளைவுக்கும் எதிர்விளைவுண்டு என்று மெய்ப்பியுங்கள்.அளவு மாறுபாடே,குணமாறுபாட்டை தோற்றுவிக்கும்.இவையெல்லாம் விஞ்ஞானத்தின் மெய்ப்பிக்கப்பட்ட,மெய்யாகிவருகிற,மெய்யாகவே இருக்கப்போகிற உண்மைகள்.இது குறித்தும் ஆலோசனை செய்யுங்கள்.

ஏனெனில்,நாம் சந்தித்த சமீபத்திய உதாரணமாய் நமது நாட்டில்,நமக்கு பாரதியார்தான் இருக்கிறார்.அவனது பாடல்கள்,படைப்புகள் மூலம் ஆங்கில ஏகாதிபத்தியமே நடுங்கியது.
நடுங்கியது என்றால் பாரதியின் எழுத்துக்களை மட்டும் பார்த்து அல்ல.அந்த எழுத்துக்கள் ஏற்படுத்திய கிளர்ச்சிகள்.அதன் விளைவாய் விளைந்த சமூக ஒற்றுமை.அதன் தொடர்ச்சியாய் ஏற்பட்ட போராட்டங்கள்,அப்போராட்டங்களினால், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு ஏற்பட்ட நட்டங்கள்.அச்சங்கள்.இதற்காகத்தான் நடுங்கியது.
இதேபோல்,காந்தி,பாலகங்காதர திலகர்,பகத்சிங்.சந்திரசேகர ஆசாத்,என எத்தனையோ பேரைக் குறிப்பிடலாம்.அவர்களின் எழுத்துக்கள் ஒரு சுதந்திரப்போரையே நிகழ்த்தியது.

நமது எழுத்துக்கள் என்ன செய்யப்போகிறது.!

-இதுவரை தொடர்ந்து பின்னூட்டங்கள் மூலம் என்னோடு இணைந்து,இதனை செம்மையாக்க உதவிய படைப்பாளிகளுக்கும்,தொடர்ந்து வாசித்த நண்பர்களுக்கும்,தனிப்பட்ட விடுகையில் ஏராளமான சந்தேகங்களைக் கேட்டு,அளித்த பதிலில் திருப்தியுற்றவர்களுக்கும்… நன்றி.!

இதனைப் பொறுத்தவைரை இத்துடன் முடிக்கிறேன்.!

இன்னொருமுறை மீண்டும் கைகோர்ப்போம்.!
-அன்புடன் பொள்ளாச்சி அபி.

எழுதியவர் : பொள்ளாச்சி அபி (8-Jan-12, 9:39 am)
பார்வை : 838

மேலே