இது கதையல்ல..! பொள்ளாச்சி அபி



ஒரு சிறந்த மருத்துவனாக வேண்டும் என்ற அவனது கனவு,காலம் செய்த சூழ்ச்சியினால் பலிக்காமலே போயிற்று.ஆனால் மனிதர்களுக்கான சேவையும், தேவைப்படும் அறுவை சிகிச்சையும் அவனது கனவாகவே இருந்தது.
காலம் தன்னை உருட்டிக்கொண்டே நகர்ந்து கொண்டிருக்கும்போது,ஒரு அற்புதமான தருணமும் அவனுக்கு வாய்த்தது.தொழுநோயாளிகள் நிறைந்த ஒரு மண்டபத்தை அவன் கண்டான்.மனம் தாளவில்லை.அதனை கண்டுகொள்ளாமல் தாண்டிச்செல்லவும் அவனுக்கு மனமில்லை.விநாடிகூட யோசிக்காமல்,அவர்களுக்கான சேவையை தொடர்வதன்மூலம்,தனது மருத்துவசேவையின் ஒருபகுதியை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்றே அவனுக்குள் ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டது.
அங்கே தன்னை பதிப்பித்துக் கொண்டான்.நாளும் புதுப்பித்தும் கொண்டான்.
‘சித்திரச் சோலைகளே உம்மைநம்பி சிரத்தையாய் பாரினிலே,முன்பு எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ உங்கள் வேரினிலே..’என்று மனம் கசிந்த பாரதிதாசனாகவும், ‘எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் என்பதற்காக,அறிவால் உலகைத்திருத்தவும்,அறுவை சிகிச்சை நடத்தவும்’,ஆசைப்பட்ட கண்ணதாசனாகவும்,‘பட்டுவேட்டியைப் பற்றிக் கனா கண்டுகொண்டிருந்தபோது, கட்டியிருந்த கோவணமும் களவாடப்பட்டதில் கவலையோடிருந்தவர்களை’ தேற்றவந்த ஒரு வைரமுத்தாகவும் தன்னை நினைத்துக் கொண்டான்.அந்த மண்டபத்திலேயே அவனது நாட்கள் தொடர்ந்தது.
அதற்காக அவனுக்கு பாராட்டுகளும் குவிந்தன.நீங்கள் ஒரு வழிகாட்டியாய் இருக்கிறீர்கள்,அதுவும் எங்களுக்கு பாடமாயிருக்கிறது என்று,ஓரளவு குணமான நிலையை எட்டியவர்கள் தெரிவித்தபோது அவனுக்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது.அதுவே அவனுக்கு ஊக்கமளித்து இன்னும் வேகமான செயல்பாட்டுக்கு உதவியாய் இருந்தது.பாரதிதாசன்,கண்ணதாசன்,வைரமுத்துவைப் போல ஆவதற்கு ஆசைப்படுவது யாருக்கும் இயல்பு.அதில் தவறென்ன..?
ஆனால்,இதுவே அவனுக்கு மற்றவர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வதாகவும்,தனது செயல்பாடுகளால் அங்கிருந்தவர்களை எங்கோ அழைத்துச் சென்றுவிட திட்டமிடுவதாகவும்,தவறான முன்னுதாரணமாக இருப்பதாகவும்,ஒன்றாக இருப்பவர்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்திட முயற்சிப்பதாகவும், எப்படியோ சிலருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அது குறித்து அவர்கள் ஒருமுறை கூட அவனிடம் எதுவும் கேட்கவில்லை. ஆனால் தங்களது சந்தேகத்திற்கு சாட்சியாகவே அவனது ஒவ்வொரு செயலும் பார்க்கப்பட்டது.முடிவில் ஒருநாள் புரூட்டஸிடம் சிக்கிய சீசர் போல அவனுக்கும் ஒருநிலை ஏற்பட்டது.
அது கொலையாக இருந்திருந்தால் ஒருநாள் துயரத்துடன் முடிந்திருக்கும். ஆனால் அவனது கைகளை முறித்துப்போட்டு,அவனுக்கு நன்றாக இருந்த ஒரேஒரு காலையும் உடைத்துப்போட்டு, மின்இணைப்பால் அவனது மனதையும் ரணப்படுத்தினார்கள்.மூர்ச்சித்து விழுந்தவன் இருநாட்கள் எழுந்திருக்கவில்லை..!
துயரங்கள் எப்போதும் எதிரிகளின் வடிவத்தில் மட்டுமே வருவதில்லையென அவனுக்கு புதுஅனுபவமும் கிடைத்தது.
இதற்கு முன்பே,ஒரு தொழிற்சாலையில் கொல்வதற்கு,முயன்ற முதலாளியின் பிடியிலிருந்து,மனசாட்சியே இல்லாத லாரி ஏற்படுத்தவிருந்த விபத்திலிருந்து, அப்பாவி ஒருவனைக் காப்பாற்றச் சென்று,வயிற்றில் வாங்கிய கத்திக் குத்திலிருந்து,கள்ளச்சாராயம் விற்றவனை எச்சரித்து, துரத்தச்சென்றபோது, அவர்கள் குழுவாக இணைந்து அவனைப் பட்டையைக் கிளப்பியதிலிருந்து, நியாயவிலைக்கடையில் அநியாயம் நடப்பதைத் தடடிக்கேட்டபோது, ஆளுங்கட்சியினரால் புகார் கொடுக்கப்பட்டு போலீசாரால்,விடிய,விடிய அடிபட்டதிலிருந்து..,தப்பியது என ,பிறப்புமுதல் இதுவரை சந்தித்த அனைத்துமே, உலகசாலையில் கற்றுக்கொண்ட பாடம்தானே என்று அவன் தெளிந்தான். இதைவிட கொடிய சூழ்நிலைகளில்கூட “தனிமையிலும் நேர்மை” என்ற ஒரே பலத்தால் அவன் உயிர் பிழைத்தே வந்தான்.அவற்றையெல்லாம் பார்க்கும்போது இதுஎன்ன பிரமாதம்..? என்றே தோன்றியது.வெளியே சொன்னால் தற்பெருமை போலிருக்கும் என்று மற்றவர்கள் நினைப்பார்கள் என்பதற்காக எனது வாழ்க்கையனுபவங்களை நான் யாருக்காக மறைக்கவேண்டும்.? எதற்காக மறைக்க வேண்டும்.?.எல்லாவற்றையும் எழுத்தாகப் பதிந்துவைப்பது, என்னைமட்டுமேவா வெளிப்படுத்தும்.அது பதிவு செய்யப்பட்ட காலத்தில் இருந்த அரசியல் முதல் அன்றாடங்காய்ச்சிகள் வரையான வாழ்க்கை முறையை அல்லவா சொல்லும்.?. போகட்டும் விடு..

பிறையாய் தெரிவதால்
நிலவில் குறையிருக்காது.!

மனதில் மெய்யில்லாவிடில்
எழுத்தில் சத்தியம் மிளிராது..

கயமை மிக்க மனதில்
கவிதை பிறக்காது..!

காலத்தை கிரகிக்காமல்
சரித்திரம் பிறக்காது.!

அந்தக்கூடத்தில், கானலைப்பார்த்தே இதுவரை ஏமாந்தவர்கள்,உண்மையில் தங்கள் முன்பு இருந்த தண்ணீரையும் சந்தேகத்தினால் விட்டு விலகினார்கள்.
அவர்களைக் குறித்து இப்போது என்ன முடிவு எடுப்பது.? என்று அவன் மனதில் எழுந்த கேள்விக்கு,அங்கிருந்தே குரல்கேட்டது,அந்தக்கவலை உனக்கெதற்கு.?
நீ போகும் பாதையில் கிடக்கும் முட்களை சுத்தப்படுத்திவிட்டுப்போ..பின் வருபவர்கள் உன்னைத் தொடர்கிறார்களா என்று பார்க்காதே..! உனக்கு இன்னும் பணி இருக்கிறது.கனியை உண்பவர்கள் குறித்த கணக்கெதெற்கு.மரத்தை நட்டுவிட்டுப்போ.உனது தேவை எங்கோ ஒரு இடத்தில் இருக்கிறது.ஒரே இடத்தில் முடங்கிவிட நீ சாக்கடையல்ல,காட்டாற்று வெள்ளம்.உன்னோடு இணைந்து வருவதை நீ உருட்டிக் கொண்டு போ..எதிர்ப்பதையும்..சேர்த்து.!
தனக்குள் பேசிய மனசாட்சியை மதித்து,மீண்டும் அவன் தெருவில் இறங்கி தட்டுத்தடுமாறி நடக்கிறான்.அவனது சூம்பிப் போன காலுக்கு துணையாய் இருந்த ஊன்றுகோலையும் பறித்துக் கொண்டவர்களை வாழ்த்தியபடி..!
“ஒவ்வொரு பூக்களுமே..சொல்கிறதே..
வாழ்வென்றா..ல் போராடும் போர்க்களமே...!”

எழுதியவர் : பொள்ளாச்சி அபி (3-Mar-12, 12:52 am)
பார்வை : 651

மேலே