மனம்


பாறையில் மோதும் மேகங்கள்
நீர்த்துளியைச் சிதறி,
சூன்யத்திற்குள் பயனிக்கும்
மழைக் குடில் ஒன்றில்
சீடர்கள் மூவர்
குருவிடம் கேட்டனர்;
"கடவுளுக்கு அருகில்
செல்வது எப்படி?"

உள்ளிழுத்த காற்றை
லயமாக வழியனுப்பி
சீடர்களின் கேள்விக்கு
குரு பதில் சொன்னார்
"உங்கள் மனதின் எண்ணங்களை
ஒரு சில நொடிகள் உற்றுப் பார்த்து
தோன்றியவற்றை
எழுதிக் கொண்டு வாருங்கள்"

நொடிகள் கடந்தன..
முதல் சீடன் எழுதினான்;
"பலா மரத்திலிருந்து
உதிரும் இலைகள்..
வருத்தம் எதுவுமில்லை"

இரண்டாம் சீடன் எழுதினான்;
"கதவு திறந்த பின்
அறையின் இருட்டிடம்
வெளிச்சம் பேசும் ஓசை"

மூன்றாம் சீடன் எழுதினான்;
"குளிர், தேநீர், எதிர் வீட்டுப் பெண்,
எப்போதோ குடித்த மது, தற்கொலை,
மலைப்பாதை நாய்,
குருவுக்கு ஒற்றைக்கண்,
கூர் தீட்டாத பென்சில்."

மூன்றையும் படித்த குரு
புன்னகையுடன் சொன்னார்;
"முதலிரண்டு சீடர்களுடையது
ஒழுங்கு படுத்தப் பட்டதாய்
காட்டிக் கொள்ளும் மனம்"

'நான்' என்னும் அடையாளம்
அதில் இன்னும் அழியவில்லை!

மூன்றாம் சீடனின் மனமே
கடவுளின் பாதைக்கு ஏற்றது.

'மனம்' என்பது
பைத்திய எண்ணங்களின் தொகுப்பு!
காற்றில் மிதக்கும் தூசிகளுக்கு
திசை என்பது இல்லை..

எழுதியவர் : நா. முத்துக்குமார் (3-Jan-10, 10:31 am)
சேர்த்தது : Devaraj N
பார்வை : 851

மேலே