குன்றக் குறவன்

என் வணக்கம். நான் சென்ற மூன்று மாதங்களாக 'செந்தமிழ்' இதழ் வாசித்து வருகிறேன். திசம்பர் 2011 இதழில் கட்டுரைகள் அனைத்துமே அருமை. புதுக்கவிதைகளில் பெண்ணுரிமையும் மீறலும், கூறியது கூறல், குறுந்தொகையில் ஒக்கூர் மாசாத்தியாரின் தலைவி கூற்றுப் பாடல்கள், உரைவேந்தரும் உரை மரபுகளும் குறிப்பிடத் தக்கவைகளாகும்.

'குன்றக் குறவன்' எனத் தொடங்கும் ஐங்குறு நூற்றுப் பாடலில் 'செய்ய வாயினள் மார்பினள் சுணங்கே' என்ற அடியில் 'சுணங்கு' என்ற சொல்லுக்கு 'மார்பின்கண் பரந்து தோன்றும் தேமல்' என்கின்றார் உரைவேந்தர். மருத்துவ அளவில் சிந்திக்கும் போது 'தலைவனை பிரிந்த தலைவி சரியாக உண்ணாமல் சத்துக் குறைவாலும் (Nutritional deficiency), இரத்த சோகையாலும் (Anemia) அவள் முகத்திலும், உடல் தோலிலும் ஏற்படும் மாற்றமே சுணங்கு' எனக் கொள்ளலாம்.

'சுணங்கு' என்ற சொல் சிலப்பதிகாரம் புகார்க் காண்டம் 'கானல் வரி'யில் கவலைக்கு மருந்து என்ற பகுதியிலும் வருகிறது.

'நிறைமதி வாள்முகத்து நேர்கயல் கண்செய்த
உறைமலி உய்யா நோய்ஊர் சுணங்கு
மென்முலையே தீர்க்கும் போலும்’

என்பதிலிருந்து தேமல், நெஞ்சு மற்றும் மார்புப் பகுதியிலும் காணப்படும் என்பது தெளிவு.

இத்தேமல் Tinea (Ringworm) Versicolor என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு வகையான Fungus பாதிப்பாக கருதப்படுகிறது. இதை அழகுத் தேமல் என்று சொல்ல முடியாது. மருத்துவத்தின் வாயிலாக குணப்படுத்த முடியும்.

(மதுரை தமிழ்ச் சங்க வெளியீடு செந்தமிழ் பிப்ரவரி 2012 இதழ் 'வாசகர் வாசகம்' பகுதியில் வெளியிடப்பட்ட என் கருத்து)

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Mar-12, 9:50 am)
பார்வை : 331

மேலே