சிதறுண்ட பொழுதுகள்

1
கோடைகாலம் ,காலை,நான்

அந்த அதிகாலை வேளையில் காலணிகளின் ஓசை அத்தனை துல்லியமாக கேட்டது.ஹிருதயம் திடும்மென்று அதிர்ந்தது.லயித்திருந்த பூரணி என்னை விலக்கி சேலையை சரி செய்து கொண்டாள். முகம் வேர்த்துவிட்டது. பின்கதவை திறந்து வேட்டியை மடித்தபடியே வேப்பங்குச்சி ஒன்றை அவசரமாக ஒடித்தேன்.பாதி பிய்ந்து கையில் அசூயையை உருவாக்கியது. மேடேறி பின் குதித்து செடிகளை நசுக்கியபடி அவசரமாக கிட்டத்தட்ட ஓடிக்கொண்டிருந்தேன்.முகத்தில் படர்ந்திருந்த வேர்வையை துண்டால்...., ச்சே துண்டை அவளது வீட்டில் விட்டுவிட்டேன்,சட்டையில் ஒற்றிக் கொண்டேன். தோட்டத்தை கடந்து குளக்கரை நெருங்கியவுடன் நிதானமாக நடக்க ஆரம்பித்தேன்.கூர்மையான கற்கள் பாதத்தை இடறி சங்கடத்தை உண்டு பண்ணின.துண்டையும் செருப்பையும் பூரணி கவனித்திருக்க வேண்டும். பத்திரப்படுத்த அவகாசம் கிடைக்குமா? சதாசிவம் மிகவும் சாந்தமான மனிதர். இரைந்து பேசிக்கூட கேட்டதில்லை.ஆனால் தன்னுடைய பெண் வேலையில்லாத ஒரு ஆடவனிடம் உறவு வைத்திருக்கிறாள் என அறிந்தால் நிச்சயம் அவருடைய சமநிலை கெடும். அரிவாள் வெட்டு என் தோள் பட்டைக்கு உண்டு.

நான்கு தெருக்களை கடந்து வேண்டுமென்றே பயத்திலும் பதட்டத்திலும் தேவையில்லாமல் சில சந்துகளுக்குள் நுழைந்து வீட்டை அடைந்தேன். வெளிக்கு போனவனுக்கு இவ்ளோ நேரமா என அம்மா கேட்டாள். அவளுக்கு பதில் தர விரும்பாமல் சட்டையை உதறி கம்பியில் போட்டு, விட்டத்தை இன்னதென்று காரணமின்றி வெறித்துக் பார்த்து பின் உதறிய சட்டையை எடுத்துக் கொண்டு கவனமில்லாமல் வாளியில் நீரை நிரப்பி சட்டையையும் உள்ளாடைகளையும் ஊற வைத்து துவைக்க ஆரம்பித்தேன்.அம்மா கதவை தட்டினாள்.

செருப்பெங்கடா?

என்னது?

செருப்புடா..கதவ தொரடா

நான் திறக்காமல்,வர வழியில சுப்புவ பாத்தேன்..அவன் கேட்டான்னு கொடுத்தேன், என்றேன்.

ஏன் அந்த மூதேவிக்கு செருப்புகூட வாங்க துப்பில்லையாமா?

எரிச்சலை அடக்கிக் கொண்டு தப் தப்பென்று வேண்டுமென்றே சத்தமாக துவைக்க ஆரம்பித்தேன். அம்மாவுக்கு தெரிந்தால் என்ன ஆகும்? விஷயத்தை அமுக்காமல் இவளே தெருவெங்கும் நாறடித்து விடுவாள். திருப்பதிக்கு இப்படித் தான் நடந்தது. பெண் அவனுடைய சாதி இல்லை.ஊரை விட்டு ஓடிப் போகவிருந்த திட்டம் படுதோல்வியில் முடிந்தது.செருப்படி எல்லாம் வாங்கினான்.கொஞ்சம் கூட கண்ணீர் சிந்தவில்லை. இன்றுவரை ஊர் திரும்பவும் இல்லை. ஈரம் பிழிந்து கொடிகளில் காய வைத்தேன். குளித்துவிட்டு சாப்பிட அமர்ந்த போது, சதாசிவம் அழைப்பதாக பூரணியின் தம்பி வந்து அழைத்தான்.

சாப்டுட்டு வரேன்னு சொல்லு

எதுக்குடா அவர் ஒன்ன கூப்புடுறாரு?

நான் என்ன ஜோசியமா பாத்தேன்

தேவைக்கு அதிகமாக இரைவதாக பட்டது.விஷயம் தெரிந்த பின் இதற்கும் சேர்த்து பேச்சு கேட்கக் கூடும்.தோசை தொண்டையில் இறங்கவில்லை. அதிகமாக தண்ணீர் குடித்தேன். வேஷ்டியை தவிர்த்து பான்ட் அணிந்து கொண்டேன். விழுந்தடித்து ஓடி வர நேரலாம்.செருப்பு வேறில்லை.அதிகம் போனால் ஊரார் வசவு. அம்மாவிடம் பிணக்கு.போலீசெல்லாம் வந்து பிடிப்பதாக அசட்டுத்தனமாக எண்ணிக் கொண்டே நடந்தேன். இது இருவரின் விருப்பத்தின் பேரில் நிகழ்ந்த சம்பவம்.சம்பவமா? ஐயோ..

குளக்கரையை ஒட்டியே நடந்து வந்தேன். நேர்ப்பாதை அது.ஒரே மூச்சில் ஓடிவிடலாம். இதோ இந்த தோட்டத்தில் சதாசிவத்தின் ஆட்கள் ஒளிந்திருக்கிறார்கள்.உஷார்! மறைந்திருந்து கோழிக் குஞ்சை அமுக்குவது போல சாக்குத் துணியால் போர்த்தி கட்டையால் அடிக்கக் கூடும்.தோப்பில் காற்றுகூட பதுங்கி பதுங்கி உளவாளியை போல வீசுவோமா வேண்டாமா என்று யோசிப்பதாக பட்டது.ஊரே அமைதியில் தோய்ந்து இருப்பது போன்ற பிரமை உண்டாகியது.ஏதோ துக்கம் நிகழ்ந்துவிட்டதை போல. இல்லையில்லை,இனிமேல்தான் நிகழப் போகிறது. இது போன்ற மன உளைச்சலுக்கு நான் ஆளாகியதே இல்லை. என் கவனம் பிசகிவிட்டது. வீட்டின் பின்பக்க கதவை தட்டபோனேன்.நல்ல வேளை,சுதாரித்துக் கொண்டேன். வீட்டை ஏதோ கோவிலை சுற்றுவதுபோல ஒரு சுற்று சுற்றி கதவை தட்ட நினைத்தேன். கதவு திறந்திருந்தது. சதாசிவம் தரையில் அமர்ந்திருந்தார்.

மூன்று அறைகள் கொண்ட சிறிய வீடு.முன்கதவு முன் நின்ற போதே பின்கதவு தாழ்பாள் போட்டு இருப்பது தெரிந்தது.வந்தவாசல் வழியாக தப்பிப்பதே ஒரே வழி.வீட்டுக்குள் பூரணி இல்லை.அவரை தவிர யாருமே இல்லை என உறுதி செய்து கொண்டேன்.என்னை அவரருகில் அமரச் சொன்னார். அவர் முகத்தை வைத்து ஒன்றும் சொல்ல முடியவில்லை.

தம்பி வேலைக்கு ஏதும் முயற்சி எடுத்தீங்களா?

பெண் தர முடிவெடுத்து விட்டாரா?நம்ம பய என நினைத்திருக்கலாம்.

அரசாங்க உத்தியோகம்தான்..பரிச்ச எழுதி இருக்கேன்.இந்த தடவ தேறிடுவேன்.

அப்படியா என்பது போல தலையாட்டினார்.புயலுக்கு முன் அமைதி.

இந்த தோப்பு நம்மளது தான்.ஓடைக்கு அந்தபக்கதுல இருக்கறது உங்க அப்பாவோடது தான?

ஆமாங்க..

என்ன போட்ருகீங்க?

போன வருஷம் விளைச்சல் பெருசா ஒண்ணுமில்ல. இந்த வருஷம் சும்மாதான் கெடக்கு.கூலி கட்டுப்படி ஆவறதில்ல.

உங்களுக்கு இஷ்டம்னா நான் அத விலைக்கு வாங்கிக்குறேன்..

அப்பாடா..தப்பித்தேன்.இவருக்கு விஷயம் தெரியவில்லை.பூரணி புத்திசாலி. எப்படியோ சமாளித்துக் கொண்டுவிட்டாள்.இப்போதே அவளை பார்க்க வேண்டுமென்பது போல ஹிருதயம் பரபரத்தது.

யோசிக்காதீங்க.நீங்க எதிர்பாக்கற தொகைய தரேன்.இன்னிக்கு நிலைமைக்கு என்ன விலையோ அதையே பேசிக்கலாம்.

அம்மாகிட்ட ஒரு வார்த்த கேட்டுக்குறேன்.

கொஞ்ச சீக்கிரம் சொன்னா நல்லது.

சரி.

விடைபெற்றுக் கொண்டு கொஞ்சம் கம்பீரமாகவே நடந்தேன். நிம்மதியாக இருந்தது. இவரால் என்னதான் செய்திருக்க முடியும்? நோஞ்சான்.ஒரு அடிக்கு தாங்கமாட்டார். மெலிதாக சீட்டி அடித்து கொண்டே உற்சாகமாகனேன்.பூரணி குடத்துடன் எதிரில் வந்தாள்.

நீங்க அவ்ளோ அவசரமா போயிருக்க வேண்டாம்.

தெரியும் என்றேன். இப்போதுதான் குளித்திருக்கிறாள். என் செருப்பை அணிந்திருந்தாள் .கழற்றி தந்தாள்.நான் அணிந்துகொண்டேன். இரு கைகளாலும் அவளை அள்ளிக் கொள்ள வேண்டும் போல இருந்தது.

வந்தது என் தம்பிதான்.வெளிய வெளையாடிட்டு இருந்தவன் வீட்டுக்குள்ளயும் வரல என்றாள்.

பூரணியின் தம்பிக்கு ஐந்து வயதாகிறது.


2 குளிர்காலம் ,அந்தி,துரோகி

பயணிகளை வழியனுப்ப வந்தவர்களுக்கு போக்கு காட்டியபடி மேலே மெல்ல எழும்புவதும் குளிர் தாங்காமல் தரையிரங்குவதுமாக விமானம் மிகுந்த எரிச்சலை உண்டாக்கியது.நம்முடைய சிக்கலான தருணத்தில் பிறர் புன்னகை செய்யும் போது அவர்கள் மீதும் சீறி அடங்கும் துவேஷம் அதி உன்னதமான உணர்வு. ஏர் ஹோஸ்டசை அவள் வெண் கழுத்தை நெரிக்க வேண்டும்போல இருந்தது.என் அகம் என் ஊருக்கு எப்போதோ சென்று விட்டது. இருப்பது உடல்தான்.நான் பிணம்.மீண்டும் உண்மையானது. நிரூபிக்க அவசியமற்றது.விமானத்தின் உட்புறமும் நடுநடுங்கிக் கொண்டிருந்தது. ஆலோசனைக் கூட்டம் மட்டும் கொஞ்சம் தள்ளிப் போயிருந்தால் மனைவி,குழந்தைகள்,கார் சகிதம் ஜம்மென்று ஊரில் இறங்கி இருக்கலாம். ஒத்திப் போடப்படுமென்று எதிர்பார்த்தேன். என்றைக்கும் இல்லாத திருநாளாக சரியான நேரத்தில் தொடங்கி தாமதமாக முடிக்கப்பட்டது. திரிவேதி 'யூ ஆர் ரெஸ்ட்லஸ்' என்றார்.சிரித்து வைத்தேன்.தவறான புள்ளி விபரங்களை அளித்தேன்.அடிக்கடி மேஜை விரிப்பின் மீதிருந்த கண்ணாடி குடுவையை வலம் இடமாக திருப்பி அதன் மேலுடம்பில் நரம்புகளாக வார்க்கப்பட்டிருந்த சட்டகங்களை தடவிக்கொண்டிருந்தேன்.விமானம் அன்னப்பறவையின் லாவகத்துடன் சாம்பல் வானத்தில் சிகப்பு பச்சை நிறங்களை அதன் வாலில் இந்நேரம் ஒளிர விட்டிருக்கும்.அப்பாவின் மரணத்திற்கு பிறகு ஊர்ப்பக்கம் போகவில்லை. எட்டு வருடங்களாகிறது.

விமான நிலையத்தில் தர்ஷினி காத்திருந்தாள்.'தனியா வரக்கூடாதுன்னு சொல்லி இருக்கேன்ல'. அவள் அதைப் பற்றி கவலைப்படவில்லை.மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.இன்னும் ஸ்டீரிங் அவள் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.பின்புறம் ஏறி அமர்ந்தாள்.கதவை அறைந்து சாத்தினாள். 'சிதம்பரம் எங்க போனான்?' என்றேன். 'வீடு ரொம்ப தூசி படிஞ்சிருந்தது. யாரவது ஆள விட்டு சுத்தம் செய்ய சொல்லி இருக்கேன். சுந்தரத்த யாரு பாத்துக்கறது?" எதற்கும் பதில் வைத்திருப்பாள். அதற்கு பின் நான் வாய் திறக்க முடியாது. காற்றுக்கும் வலிக்கும் என்பதுபோல கதவை திறந்தேன். நான் நிதானம் இழக்கவில்லை என காட்ட விரும்பினேன். ஆனால் தீப் பிழம்பாக எரிந்து கொண்டிருந்தது வானம். ஆங்காங்கே கத்தியால் கிழிக்கப்பட்ட கரத்திலிருந்து குருதி கொட்டுவது போல தீற்றல்கள் என் மனதை கொந்தளிக்கச் செய்தன.நான் எரிய ஆரம்பித்தேன்.

சீராக போய்க் கொண்டிருந்த சாலையின் இடுப்பை வெட்டி வலதுபுறம் ஸ்டீரிங்கை ஒடித்தேன்.எனது இளமைக்காலத்தில் குண்டும் குழியுமாக சீக்கில் நொடித்து போயிருந்த சாலை இன்னும் குணமாகவில்லை.அதிகம் போனால் முப்பதிலேயே வாகனம் தள்ளாடியது.சூரியகாந்தி மலர்கள் தலைகவிழ்ந்து இருபுறமும் நிறைந்திருந்தன.கரிய சாம்பல் என் கார் கண்ணாடிகளில் அப்பிக்கொண்டதை போன்று பிரமை.பூகம்பம் ஏற்பட்டதை போல பேரிரைச்சலுடன் இடி வானை துண்டாக்கியது.மழை.இருள் முற்றிலும் சூழ முகப்புவெளிச்சம் ஒவ்வொரு பள்ளத்திலும் ஒளியை நிரப்பி நீருடன் கலந்து தவிர்க்கவே முடியாத இடங்களில் சக்கரங்கள் சேறாகி அடர்ந்த மரங்கள் அதில் அண்டியிருந்த பறவைகள் எல்லாம் சலசலப்பிற்கு திடீர் வெளிச்சத்தில் அஞ்சி கிடுகிடுத்தன.ஒரு குட்டி பாலத்தை கடந்து வலதுபக்கம் திரும்புகையில் சிமென்ட் பூசிய சாலையோர திண்ணை ஒன்றை உரசுவதிலிருந்து மயிரிழையில் தப்பி,நான் இருபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்த எனது பால்யத்தின் ருசியை அறிந்த என் துக்கத்தை கோபத்தை ஆனந்தத்தை அழுகையை இம்மி பிசகாமல் பதிவு செய்த வீட்டை அடைய மாலை ஏழானது.

பழகிய தெருக்கள் எல்லாம் மணம் மாறிவிட்டன.சென்றமுறை துக்கத்தில் ஒன்றும் ஆழ்ந்து கவனிக்கவில்லை.இந்த ஆலமரம் என் அப்பாவின் அப்பா சிறுவயதாக இருக்கும் போது யாரோ நட்டது.தளம் அமைத்து அதன் மேலே பிள்ளையார் சிலை ஒன்று.மாலைகள் காய்ந்து போயிருந்தன.'யாரு?' என்ற குரல் கேட்டு திரும்பினேன்.ராஜூ மாமா.'நான் சுப்புராஜ்' என்றேன்.

அட எப்ப வந்த?

இப்பதான்,பத்து இருபது நிமிஷம் இருக்கும்.

எல்லாம் சௌக்கியமா?தனியாவா வந்த?

புள்ளைங்களுக்கு லீவு. எல்லாரும் வந்திருக்கோம்.

ஒரு போனு கீனு பண்ணிட்டு வந்திருக்கப்புடாது? வா அப்படியே நடந்துகிட்டே பேசுவோம்.வேலையெல்லாம் நல்லா போவுதா?

பரவாயில்ல.திடீர்னு போவோம்னு முடிவு பண்ணது.இந்த வருஷம் என்ன போட்ருக்கீங்க?

வரவழியில பாத்திருப்ப.பூவா இருக்குதேயா

அதெல்லாம் நம்ம திருப்பதியோட அப்பாவுதுல்ல?

ரெண்டு வருஷம் முன்னைக்க வாங்கி போட்டுட்டேன்.

என்ன மாமா தனியா பேசிட்டு வரீங்க?

இருட்டில் நான் இருப்பது தெரியவில்லை.நான் மாமாவுடன் ஒட்டி வந்தேன். மாநிறத்தில் ஒரு உருவம் நெருங்கி வந்தது.'அடையாளம் தெரியுதா நம்ம கமளியக்கா மவன்' என்றார். 'மணிகண்டனா?' தலையாட்டினார்.நான் என்னை அவனுக்கு நினைவுவூட்டினேன்.ஒரு கணம் என் கண்களை உற்று நோக்கினான். மங்கலாக இருந்தது.என் வீட்டை சொன்னேன்.மெலிதாக புன்னகைத்தான். வீட்டுக்கு கண்டிப்பா வரணும் என்றான்.'சரி' என்றேன். உறவுகள் மீண்டும் துளிர் விடுகையில் மெல்லிய பரவசம் உடலெங்கும் பரவி நம்மை கனமாக்குகிறது.பழைய பகைகள் பெரும்பாலும் ஞாபக இடுக்குகளில் இருந்து நசிந்துவிடுகின்றன.

என் உறவினர் மகளை ஏமாற்றி ஊரைவிட்டு ஓடி பின் திரும்பி வந்த திருப்பதி, வரப்பு தகராறில் கொலை என் அப்பாவை கொலை செய்துவிடுவதாக மிரட்டிய சேகரன், பணம் வாங்கிக் கொண்டு கண்ணிலேயே படாத என் பெரியப்பாக்கள், தெருவே வேடிக்கை பார்க்க என் சட்டையை பிடித்து சண்டை போட்டு பின் என் முகத்திலேயே முழிக்க மாட்டேன் என சபதம் செய்த மணிகண்டன்,உதவி செய்ய வசதிகள் இருந்தும் படிப்புக்காக எனக்கு உதவாத இதோ இப்போது அன்னியோன்யமாக விசாரிக்கும் ராஜூ மாமா என இவர்களில் யாரென தெரியவில்லை.

நான் எனது மகனுக்கு என் பால்ய சுவாரஸ்யங்களை சொல்லிக் கொண்டிருந்தேன். பெருஞ் சப்தம். என் கார் கதவின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்தன.வன்மம் உன்னதமானது.


3
மழைக்காலம்,நண்பகல்,மூவர்

இந்தா,சீக்கிரம் தின்னுட்டு கிளம்பப்பாரு

ஏன் பறக்குற? எப்படியும் பதினோரு மணிக்கு மேலதான் வருவாரு.

அதுக்காக டான்னு பதினோரு மணிக்குதான் போவியோ?வீட்ல சும்மா கெடக்கறதுக்கு அங்க போய் உக்காந்திருக்கறது.

பெனாத்தாத.இந்தா கிளம்பிட்டேன்.

சருகுகளை பொருக்கி கூடையில் போட்டுக்கொண்டிருந்தாள். வெயில் தலையில் தெறித்து 'விண் விண்' என்று வலித்தது.இந்த முறை எப்படியும் இவனுக்கு வேலை கிடைத்துவிடும்.சிமன்ட் திட்டில் பாலு அமர்ந்திருந்தான். 'செல்லையாபுரம் பஸ் போயிடுச்சா?' என்றேன்.'இப்பதான் மேக்கால போயிருக்கு'.அவன் பக்கத்திலேயே அமர்ந்து கொண்டேன்.'மணி என்னாவுது?'. 'ஒம்போதே கால்'. பத்து மணிக்கெல்லாம் போய்விடலாம்.பார்த்து பேசி வேலை முடிய பதினொன்றரை பனிரெண்டு ஆனாலும் கூட இதே பஸ்ஸை பிடித்துவிடலாம்.இல்லாவிட்டால்,மெய்ன்ரோட்டில் இறங்கி மூன்று மைல்கள் நடக்கவேண்டும்.தூரத்தில் ஹாரன் ஒலி கேட்டது.ஜன்னல் ஓரமே இருக்கை கிடைத்தது.

பொறம்போக்கு நிலமெங்கும் போர்ட் மாட்டி இருக்கிறார்கள். இடம் விற்பனைக்கு. இன்னும் உருவாகாத,மக்கள் புழங்காத இடங்களை அதற்குள் பெயர்கள் ஆக்கிரமித்து இருக்கின்றன.வசந்தம் நகர்,எம்.ஜி.ஆர்.நகர், முல்லை கார்டன்ஸ்.சில வருடங்களில் விவாசய நிலங்களிலும் இப்படி போர்டுகள் தொங்கும். இனி இங்கு என்னை போன்றவர்களுக்கு வேலை இல்லை. மகனுக்காவது அரசாங்க உத்தியோகம் அமைத்து கொடுக்க வேண்டும். இறங்கி ஒரு மர நிழலில் அமர்ந்துகொண்டேன்.வேலைகள் மெத்தனமாக நடந்து கொண்டிருந்தன. உள்ளே சென்று விசாரித்தேன்.

'ஐயா எம்.பி.வராருள்ள இன்னிக்கு?'

நேரமாகும்யா.மனுவா?

இல்லீங்க.வேறொரு காரியமா வந்தேன்.

நேரமாகவில்லை.வெளியே சலசலப்பு பெருகி ஓய்ந்தது.எம்.பி.வந்துவிட்டார்.
கூட்டம் கூடி அவரை மொயத்துவிட்டது.நான் எந்த முயற்சியும் எடுக்காமலேயே கூட்டமே என்னை அவரிடம் நெருக்கி சேர்ப்பித்தது. என்னை அவருக்கு ஞாபகம் இருந்திருக்க வேண்டும். கவனித்துவிட்டார்.

வணக்கமுங்க.

ஐயா, நீங்க அடிக்கடி இப்படி வரவேண்டியதில்ல.உங்க விசயம் எனக்கு நினவிருக்கு.கவலைப்படாம இருங்க.ஏன் இப்படி கஷ்டப்பட்டு வரீங்க?

'அதுக்கில்லங்க.உங்களுக்கு ஆயிரம் வேல இருக்கும்.நமக்கென்ன அப்படியா?
அதான் ஒரு எட்டு பாத்துடலாம்னுட்டு...பேரு சுப்புராசுங்க,இதுல அவன் நெம்பர் இருக்குதுங்க.'அந்த துண்டு சீட்டை வாங்கி அவரருகில் இருந்தவரிடம் கொடுத்தார்.'சரி' என்றார்.நம்பிக்கையாகத்தான் இருந்தது.அலுவலகத்தின் எதிர்சாரியில் இருந்த சர்பத் குடித்துவிட்டு மீண்டும் அலுவலகம் வந்து ஒருமுறை மெல்ல அதை சுற்றிவிட்டு பஸ் ஸ்டாண்ட் வருவதற்குள் நான் ஏற வேண்டிய பஸ் போய் விட்டிருந்தது.அடுத்தது மாலை ஆறு மணிக்கு.வேறு பஸ்ஸில் ஏறி மெய்ன் ரோட்டில் இறங்கிக் கொண்டேன். இங்கிருந்து மூன்று மைல்கள்! ஊருக்குள் செல்பவர்கள் யாராவது வண்டியில் அல்லது ட்ராக்டரில் வரக்கூடும்.கால்மணிநேரம் சென்றிருக்கும். சதாசிவம் அவனுடைய மொபெட்டில் வந்தான். கையசைத்தேன். பின்பக்கம் அமர்ந்து பெருமூச்சுவிட்டேன்.

என்ன நாயக்கரே,எங்க போயிட்டு வராப்பல?

எம்.பி.வந்திருந்தாரு.அதான் அவர பாத்துபுட்டு பையன் வேல விசயமா பேசிட்டு வரேன்.

என்ன எதிர்பாக்குராறு?

அதெல்லாம் ஒண்ணுமில்ல.

நீ கொடுத்தாலும் சொல்ல மாட்டியே.ஊமை குசும்பனாச்சே நீ.

இதுல என்ன இருக்கப்போவுது..பாத்து.பாத்து..பள்ளத்துல பாத்து விடுயா. விழுந்து கிழுந்து தொலைக்க போறேன்.நீ எங்க இந்நேரத்துக்கு?

உன் வீட்டு எதிர்த்தாப்பல தான் ஒரு ராங்கிகாரி இருக்காள்ள..அந்த சீக்கி முண்ட கிட்ட நிலத்த கொஞ்ச நாளைக்கு முன்னைக்க கேட்டன்..பெருசா பீத்திகிட்டா..அதான் இப்ப இன்னொருத்தர பாத்துட்டு நிலத்துக்கு அட்வான்ஸ் கொடுத்துட்டு வரேன்..

பொண்ணுக்கு நகை நட்டு சேத்து வைய்யா..

இருக்கறதே போதும்.அது போக்கும் பிடிபட மாட்டேங்குது.

இந்தா இப்படி நிறுத்து.நான் அப்படியே காட்டு பக்கம் போயிட்டு வரேன்..பாப்போம் என்ன?

சரி.

ஓய்..நில்லுப்பா.

இன்ஜினை அணைத்துவிட்டு சதாசிவம் திரும்பிப்பார்த்தார்.விநாயகம் சின்னபிள்ளை போல தூரத்தில் இருந்து ஓடிவருவது தெரிந்தது.'என்ன' என்றார்.'வீட்டுக்குத்தான போற?' 'ஆமா'..

வா சேந்தே போவோம்.

வண்டியில ஏறுங்க.

இத்துனூண்டு தொலவுக்கு வண்டியா?வா அப்படியே நடந்து போவோம்.

சதாசிவத்திற்கு மீண்டும் திரும்பி செல்ல வேண்டிய ஜோலி இருந்தது.ஊர் பெரிய மனிதரை சங்கடப் படுத்தவும் முடியாது.எரிச்சலை அடக்கிக் கொண்டே அவர் கேட்பதற்கெல்லாம் பதில் சொல்லியபடி இரண்டு நிமிடங்களில் வந்திருக்க வேண்டிய வீட்டிற்கு பத்து நிமிடங்கள்.அவருக்கே தெரிந்த பதில்கள்.வீட்டருகே நிறுத்தாமல் தள்ளி மர நிழலில் நிறுத்திவிட்டு துண்டால் அரும்பிய வேர்வையை துடைத்தபடியே வீட்டுக்குள் நுழைந்த போது பூரணி மணிகண்டனின் புகைப்படத்தை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்ததை சதாசிவம் பார்த்தார்.

4
இலையுதிர் காலம்,இரவு,மீண்டும் நான்

இதே போன்றதொரு இரவில்தான் என் தலைமீது வானமே இடிந்து விழுந்தது போல உணர்ந்தேன்.முக்கால் நிலவு மேகங்களுக்கு இடையில் பதுங்கி இருந்தது.நிலமும் கடலும் தத்தம் எல்லைகளை மீறி இடம் மாறியது போல வானில் கரிய நீர்ப்பரப்பில் நீந்தும் மீன்கள் போல நட்சத்திரங்கள் மிதந்து கொண்டிருந்தன.இப்படியொரு துரோகத்தை சுப்பு செய்வான் என கனவிலும் எதிர்ப்பார்க்கவில்லை.என்னிடமும் சொல்லி இருக்கலாம்.நானும் ஏதேனும் ஏற்பாடு செய்திருப்பேன்.இன்று இப்படி சர்ப்பங்கள் நெளியும் தோட்டத்தின் நடுவே கயிற்றுக் கட்டிலில் காமம் அலைக்கழிக்க புரண்டுகொண்டு இருக்கமாட்டேன்.என் அம்மா செய்த ஒரே உருப்படியான காரியம் இந்த தோட்டத்தை விற்காமல் இருந்தது.இப்போது என் வாழ்வின் ஒரே பிடிப்பு.பத்து ஆண்டுகள் இருக்குமா?இல்லை,எட்டு.அன்று மழை பெய்திருந்தது.

அவர்களை அந்த பேய் மழையிலும் தொடர்ந்து வந்திருந்தேன்.கன்னியின் உடலில் நம்முடைய முதல் ஸ்பரிசம் போல பட்டும் படாமலும் பெய்ய ஆரம்பித்த மழை பெரும் சீற்றம் கொண்ட யானை போல எங்கும் கருமையை வாரி இறைத்திருந்தது.பெட்ரோல் சிந்திய தடயங்கள் சாலையில் வண்ணக் கோலங்களை கொட்டி இருந்தன.நான் மெல்ல மெல்ல சிதைவின் பக்கங்களின் அழிக்கவே முடியாத கருப்பு மசியால் நிரப்பப்பட்ட குழப்பத்தோடு மத்திய பேருந்து நிலையத்தில் மகனை வழியனுப்பி விட்டு துண்டை தலைக்கு போர்த்தியிருந்த கொண்டை நாயக்கரை பாதம் பட்டு நீர்த் திவலைகள் கூட தெறித்து ஒலி எழுப்பா வண்ணம் பின்தொடர்ந்தேன். சாத்தான் என்னை ஆக்கிரமித்திருக்க வேண்டும்.நடுநிசியில் நிலவுகூட தயங்கிய படிதான் வெளிவருவதும் பின் பதுங்குவதுமாக இருந்தது. கணமேனும் சிந்திக்கவில்லை.அப்போது செய்யப்போவதை பற்றியும்.அதன் விளைவுகள் பற்றியும்.என் அகம் சிதறுண்டு போய்விட்டது.மூடப்படாத ஆழமான கிணறுகள் எங்கள் ஊரில் அதிகம்.அதில் ஒன்றில் நாயக்கருக்கு அடைக்கலம் கொடுத்தேன்.

பெருமூச்செறிந்தேன்.போன வேகத்திலேயே சுப்பு வருவான் என எதிர்பார்த்தேன்.அது நடக்கவில்லை.இரண்டு நாட்கள் போராடிய பிறகுதான் பிணம் நிலம் பார்த்தது.தந்தி கிடைத்து அவன் வந்து சேர்வதற்குள் பிணம் அழுகிவிடக் கூடுமென சீக்கிரமே எரித்து விட்டார்கள்.இப்போது வந்திருக்கிறான்.எங்கோ தூரத்தில் நாய் அமானுஷ்யமாக ஊளையிட்டது. இரண்டு குழந்தைகள் போலிருக்கிறது.நிதானமாக ஆனால் விரைவாக செயல்படுத்த வேண்டும்.இதை என்னும் போதே இதயம் வேகமாக அடித்துக் கொண்டது.எழுந்து அமர்ந்து கொண்டு பீடியை பற்றவைத்தேன்.நிதானமாக. மிக நிதானமாக நெஞ்சின் ஆழம் வரை புகையை நிரப்பி வெளியேற்றினேன். நெகிழ்ந்திருந்த வீதியை முழுவதும் அவிழ்த்து இறுக்கி முடிச்சிட்டேன். தீர்க்கமாகத் தான் இருந்தேன்.தெளிவாக.குழப்பமில்லாமல்.உலகின் மாபெரும் சிக்கல்களிலிருந்தும் தவிப்புகளில் இருந்தும் மற்றுமொரு துரோகியை விடுவிக்கப் புறப்பட்டுவிட்டேன். இன்றிரவு நான் நிம்மதியாக உறங்கக்கூடும். ஆனால் அது நடக்கவில்லை.

எழுதியவர் : Gokulprasad (13-Jul-12, 2:48 pm)
சேர்த்தது : p.gokulprasad
பார்வை : 392

மேலே