சிலந்தி வலைகள்

"உண்மையான கதைகளை எழுதாதீர்கள்,யாரும் நம்ப மாட்டார்கள். உண்மைத் தன்மை உடைய கதைகளை எழுதுங்கள்."
-- கீத் மில்லர்.


இண்டும் நியாபகம் இருக்கு..இதோ இந்த படத்தில் உள்ளது போல.புலிகளுக்கு ஒரே குழப்பம்.அவன்களுக்கு சிந்திக்க தெரியல.இதிலே ஒரு பக்கம் சொர்க்கம். இன்னொரு பக்கம் நரகம். ஆனா அப்போ எங்களுக்கு ரெண்டும் நரகமாய் போயிட்டு.

சோபாவின் மடியில் புதைந்தபடி அவரது தலைக்கு மேல் கத்தி போல் தொங்கி கொண்டிருந்த Last Judgement படத்தை சுட்டிக் காட்டி கையை கத்தி போல வீசி பேசிக் கொண்டிருந்தார். இன்றோடு இவர் என் வீட்டுக்கு வந்து மூன்று நாட்கள் ஆகிறது. இன்று தான் இவர் கொழும்புவிற்கு புறப்பட போவதாக பரமு சொல்லி இருந்தான். சேவியருக்கு மூன்று பிள்ளைகள். மனைவி பிள்ளைகள் வீடு என அனைத்தையும் யுத்தம் காவு வாங்கி இருந்தது. இவரது அம்மா உயிருடன் இருப்பதாக தகவல். பிரான்சிலிருந்து அதற்காகத் தான் கள்ளத் தனமாக இந்தியாவிற்குள் நுழைந்திருக்கிறார். மீண்டும் இன்று இலங்கை பயணம்.

முடி கொட்டி போயிருந்தது. தோல் செதில்கள். பிரெஞ்சு தாடி.மூக்கால் பேசுகிறாரா தொண்டையிலிருந்தா நெஞ்சுக் கூட்டிலிருந்தா என்பதை அறிந்து கொள்வது கடினமாக இருந்தது. மின்சாரம் துண்டிக்க பட்டிருந்தது. ஜன்னல் திரை சீலைகளை விலக்கியதில் மெல்லிய மாலை வெளிச்சம் ஒரு உளவாளி போல பதுங்கி ஊடுருவ மிகவும் சிரமப்பட்டது. தேநீர்க் குடுவைகளை கவிழ்த்தி கோப்பைகளின் வயிற்றை நிரப்பினேன். ஆவி பறப்பதையே சில கணங்கள் வெற்று பார்வை பார்த்துவிட்டு தொண்டையை செருமிக் கொண்டார்.

இனக் கலப்பு நடந்துட்டு. இப்போ எங்கட பாஷையும் மாறிப் போய் உங்க தமிழும் எங்க தமிழும் கலந்து வித்யாசமாய் ஒலிக்கு. சமயத்துல யாருகிட்ட எந்த பாஷை பேசறதுன்னு குழப்பம் ஏறிப் போயிட்டு.

டீ குடிங்க.

மையமாய் தலையாட்டி விட்டு கோப்பையை கைகளுக்குள் அடைக்கலமாக்கினார். ஒரு மிடறு பருகி வேஷ்டியில் வாயை அழுந்தத் துடைத்துக் கொண்டார்.

பரமுவோட எப்படி பழக்கம்?

இக்கேள்விக்கு பதில் சொல்ல வேண்டுமா என்பதுபோல ஒரு பார்வை. இரண்டு நாட்களுக்கு பிறகு இப்போதுதான் சகஜமாக பேசுகிறார்.

நானும் கொஞ்ச நாள் இயக்கத்துல இருந்தனன். பின்பு அவனுகண்ட காரியம் சரிப்பட்டு வராமல் விலகிட்டன். இன்னும் என்னை ரா லிஸ்டுல வச்சிருக்கு.

எப்படி தப்பிச்சீங்க? கொன்றுப்பான்களே

பணம் இருந்தா ஆரும் எங்கவேணா தப்பிக்கலாம். பிள்ளை பிஞ்சுகளை பிணைக்கைதியா புலிகளே பிடிச்சு வச்சுடானுகள். ஆமிக்காரன் நாலா பக்கமும் சுத்தி நிக்கும் பொழுது, அப்பாவி மக்கள் தங்களுக்கு பாதுகாப்பா இருப்பாங்கன்னு தப்பு கணக்கு போட்டுட்டாங்கள். பெண்டுகள், பிள்ளைகள் என ஆரையும் நகர விடல. மக்களுக்கு கிலி பிடிச்சு போச்சு. ஆமிக் காரன்கிட்ட சரணடயறதே மேலுன்னு தப்பிச்சு போக முற்பட்ட பொழுது புலிகளே, ஆருக்காக சண்ட போடறதா சொன்னனுகளோ, உரிமைய காப்பாத்தறதுக்காகன்னு சொன்னானுகளோ அவன்களே சொந்த இனத்தை சுட்டாணுங்கள்.

அவங்களுக்கு அவ்ளோதான் தெரியும். எந்த ஒரு அதிகார அமைப்பும் இப்படித் தான் இருக்கும். இத்தன நாளா மேலிடம் எனன சொன்னாங்களோ அதை அப்டியே தான் செஞ்சு பழக்கப்பட்டவங்க. துப்பாக்கி கொடுத்தாங்க. கன்னி வெடிகள் கொடுத்தாங்க சுடறது எப்படின்னு சொன்னாங்க. ஆனா, தலைமை தப்பு செஞ்சா அதை எதிர்க்கறதுக்கு சொல்லிக் கொடுக்கல. அது என்ன சொல்லுச்சோ அதையே அடியொற்றி பின்பற்றுனவங்கள திடீர்னு சுயமா யோசிக்க சொன்னா இப்படித் தான் நடக்கும். தலைமை இருக்கா இல்லையானு தெரியாதப்போ இப்படி நடக்காட்டிதான் ஆச்சரியம்.

சரிதான் என்பதுபோல மீண்டும் தலையாட்டினார். சிலந்தி நுண்ணிய வேலைப்பாடுகளுடன் பின்னிய வலை போல தேநீரில் ஆடை மெல்ல பரவ ஆரம்பித்திருந்தது.


ஆமிக்காரன்கிட்ட போயிருந்தா நெஞ்சுல தான் சுட்டு இருப்பான்கள். பயத்தில ஓடுன மக்களை இயக்கத்துக் காரன் முதுகுல சுட்டுட்டான்.


மைய்யமாக முகத்தை பார்த்து பேசிக் கொண்டிருந்தவன் சட்டென்று அவர் கண்களை கவனித்தேன்,ஈரத்தை எதிர்பார்த்து. ஆனால் அவை உணர்சிகளை இழந்து மாதங்கள் பல கடந்திருக்க வேண்டும். மெல்ல இருட்டு எங்களை போர்த்திக் கொண்டது. அவரின் வலது கண்ணில் ரத்தத் தீற்றல்.


அது வன்முறைக்கு நாம தர்ற விலை. வன்முறைய நம்பி ஆரம்பிக்கப்பட்ட இயக்கம், அதாலேயே அழிஞ்சுப் போச்சு. வன்முறை எப்பவும் ஜெயிக்காது.


தீர்க்கமாக ஒரு முறை என்னை பார்த்தார்.


அப்படி இல்ல. அதிக வன்முறைதான் ஜெயிக்கும். சிங்களக்காரன் அதிகமா வன்முறைய பிரயோகிச்சான்.


இருக்கலாம்.


இந்த தேசமும் ஒரு புகலிடம் அளிக்கல. இன்னும் என்னைய போலீஸ் தேடுது. இங்க வந்துட்டா நான் மூணு நாளைக்கு மேல ஒரே எடத்துல தங்கறதில்ல. நான் சுடப்பட்டா என்ட அம்மைய ஆரு பாக்கறது?


என் முதுகில் சாட்டை சொடுக்கியது போல உணர்ந்தேன். இன்னமும் போலீஸ் இவரை தேடுகிறதா? பிடிபட்டால் இவரது கதி? அடைக்கலம் கொடுத்த எனது கதி?

என்ன சொல்றீங்க? பரமு இதெல்லாம் ஒன்னும் சொல்லலையே..

பதட்டம் அதிகரித்தது. இதய துடிப்பை அத்தனை துல்லியமாக நான் கேட்டதே இல்லை.ஐயோ. முதலில் பரமுவை அழைக்க வேண்டும். இவரை சீக்கிரம் இவ்விடத்தை விட்டு வெளியேற்ற வேண்டும்.எனக்கு ஆபத்து.

போலீஸ் இங்கயும் வருமா?

அஞ்சக்கூடாது தோழர்.

தோழரா? யோவ்...

இன்று போல் என்றும் என் கைகள் நடுங்கியதில்லை. அலைபேசியை எடுத்து அவசர அவசரமாக பரமுவின் என்னை தேடும் போது அழைப்பு பொத்தான் அழுத்தப்பட்டது . இசைக் குறிப்புகளை காற்றில் மிதக்க விட்டது. நான் சேவியரை பார்த்தேன். முகம் சலனமற்று இருந்தது. கதவைத் திறக்க எனக்கு பயமாக இருந்தது.

எழுதியவர் : Gokulprasad (13-Jul-12, 2:50 pm)
சேர்த்தது : p.gokulprasad
பார்வை : 383

மேலே