ஒரு குட்டி காதல் கதை

மனோஜ் மாதிரியான ஆட்களை நீங்கள் சந்தித்து இருப்பீர்கள்.இப்பொழுதும் பாக்யராஜின் அறிவிக்கப்படாத வாரிசாக சோடாபுட்டி கண்ணாடி. ஒரு தோளை சாய்த்தவாறு கோணலான நடை. பார்த்தவுடன் கிறுக்கன் என சிலர் நினைக்க கூடும். பேந்த பேந்த முழித்துக்கொண்டே இருப்பான்.உதட்டை சுளிப்பான். அறிமுகமில்லாதவர்கள் நிச்சயம் பேக்கு என்ற அடைமொழி இடக்கூடும். ஆனால் இவனொரு புத்திசாலி. நான் பெயரறியா தேசத்தின் எழுத்தாளர்களை படித்துவிட்டு வந்து சொல்வான்.சாதாரண விஷயத்தை கூட சாதரணமாக சொல்ல மாட்டான். "அது எப்டினா..." என ஆரம்பித்து உலகை சுற்றிவந்துவிடுவான்.


ஏண்டா சாதாரண மேட்டர்கெல்லாம் மண்டேலாவையும் பாமுக்கையும் இழுக்கற


அதில்லடா உனக்கு புரியனும்ல


நிதர்சனத்தில் அவன் அவ்வாறு விளக்கிய பின்புதான் ஏதோ புரிந்திருந்ததும் புஸ்வானம் ஆகியிருக்கும். ஐன்ஸ்டீனை அவர்தான் ஐன்ஸ்டீன் என்று தெரியாமல் பார்த்தால் கிறுக்கன் போலத்தானே இருப்பார்? உலகம் அறியா ஒரு மர்ம முடிச்சிது.அதீத புத்திசாலிகள் அனைவரும் கிறுக்கர்களாகவே தோற்றமளிப்பது.எப்போது இவன் அறிவாளி எப்போது கிறுக்கன் என கண்டுபிடிப்பது அரிதினும் அரிது.எனது பால்ய நண்பன்.இப்படிப்பட்ட ஒரு வினோத ஜந்து தன்னுடைய பதினாறாவது வயதிலேயே தான் காதலிப்பதாகவும் அதற்கு நான் தான் உதவ வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்த போது மறுக்கவா முடியும்? பள்ளி நாட்கள். பதினொன்றாவது வகுப்பு.

ய்ர்ருடா?

நம்ம(?) ஊர்மிளாடா. ஊர்மிளா மனோஜ் நல்லாருக்குல?

போய் சொல்லு.

அதாண்ட எப்டி சொல்றதுன்னு தெரியல. இங்கிலிஷ்ல சொல்றதா? தமிழா? எதாச்சும் ஐடியா கொடுடா..

எதுக்கும் பள்ளிக்கூடத்துக்கு வெளியவே சொல்லு...அவ பாட்டுக்கு நம்ம பிரின்சிபால் கிட்ட பிராது கொடுத்தர போறா..

அதுக்குத்தான் உன்கிட்ட உதவின்னு ஒன்ன கேக்குறேன். பேசாம ஒரு லெட்டர் எழுதி அவகிட்ட கொடுத்துட்டா?

அப்படி பண்றதுக்கு சொல்லிரலாமே....நேரா போ..பளிச்சுன்னு கேட்ரு. முகத்த பாத்தா தெரிஞ்சுடாது?

ரிஸ்கு டா..

என்னைய என்னடா பண்ண சொல்ற?

அது....நீதான் நல்லா கவித எழுதுவீல்ல...மயக்கற மாதிரி ஒன்னு எழுதிக்கொடுதேன்னா அப்டியே மத்தத நான் பாத்துப்பேன்.

எனக்கு வேற வேல இல்ல,நீ காதலிக்கறதுக்கு நான் கவித தரணுமா?

என்னடா இப்டி சொல்ற? நீ நல்லா எழுதுவேன்னு தான உன்ன கேக்குறன்?

இந்த மாதிரி சமயங்களில் நான் உருகிவிடுவேன்.நம்மை நம்பி இருக்கும் ஜீவனை கடமை வழுவாது காப்பாற்றுவது நம் தலையாய கடமை அல்லவா? ஒப்புக்கொண்டேன்.இரண்டு நாட்கள் கடத்தி ஒரு சுபயோக தினத்தில், கொஞ்சம் செக்ஸியாக எழுதி கொண்டுபோய் கொடுத்தேன். நிர்வாண நகரத்தில் என ஆரம்பித்த அந்த கவிதையின் ஆரம்ப வரிகள் மட்டுமே நினைவில் எஞ்சியுள்ளது.வெற்றி உனதே என நாடகத்தனமாக வாழ்த்தி அனுப்பினேன்.


இண்டர்வல் முடிந்து கால்களை பெஞ்சு மேல் அமர்த்தி ஆயாசமாக அமர்ந்திருந்த போது பிரின்சிபால் என்னை அழைப்பதாக சொன்னார்கள். நான் ஒரு தவறும் செய்யவில்லையே! எதற்கு?


ஏன்டா.......என்ன எதுக்குடா கூப்புடுது?


நீதான் கூட படிக்குற பொண்ணுக்கு லெட்டர் விடு தூது அனுப்புனியாமே..


நான் அதிர்ச்சியுடன் மனோஜை திரும்பி பார்க்க...அவன் கண்ணாடியை சரி செய்து கொண்டே வழக்கம் போல கண்களை பெரிதாக்கி ஆச்சர்யம் காட்டினான்.


என்னடா முழிக்கற


அது..அது..லெட்டெர கொண்டு போய் அவ டைரில வச்சுட்டு ஓடியாந்துட்டேண்டா


அடப்பாவி,நீ நேர்ல பாத்து கொடுக்கலியா? அப்படியே வச்சுகிட்டாலும் உன்ன தாண்டா புடிக்கணும்?


அது உன் கவித மாதிரியே கையெழுத்தும் முத்து முத்தா இருந்துச்சா..எதுக்கு காப்பி பண்ணிட்டுன்னு அப்படியே கொண்டுபோய் வச்சுட்டேன்..கையெழுத்து வச்சு கண்டுபிடிசாட்டன்களோ?


எனக்கு அழுவதா சிரிப்பதா என்றே விளங்கவில்லை.தொண்டையை செருமிக் கொண்டு,


நீங்க என்னய அண்டர் எஸ்டிமேட் பண்ணிடீங்கடா..இப்ப பாரு எவ்ளோ சிம்புளா மேட்டர முடிக்கிறேன்னு.


வீராவேசமாக வசனம் பேசினாலும் உதறலோடுதான் காபினுக்குள் நுழைந்தேன்.கேள்விக்கணை நான் நுழைவதை பார்த்த உடனேயே சடாரென்று தாக்கிற்று.


Did you propose to anyone?

நான் அப்பாவியாக ,"What is meant by proposing mam?" என்றேன்.

தலையில் அடித்துக்கொண்டே சொப்புவாய்க் கிழவி போய்த்தொல என்றாள்.

மனோஜை ஒரு காய்ச்சு காய்ச்சினேன். பிறகு ஊர்மிளாவிடம் சென்று,

என்ன இப்படி பண்ணிட்ட? எவ்ளோ நேர்ரோவ் எஸ்கேப் தெரியுமா? லெட்டர் கிட்டர் பாத்தீனா ரசிக்கணும் இல்ல கிழிச்சு போடணும், அத விட்டுட்டு போட்டு கொடுத்திருக்க?

லெட்டரா? எந்த லெட்டர்?

நடிக்காத! நான் எழுதுனத தான் பொக்கை கிட்ட போட்டு கொடுத்துட்டியே?

நீ எனக்கு லெட்டர் எழுதுனியா? நான் பாக்கவே இல்லையே.

உன் டைரில ஒன்னும் பாக்கலியா?

இருந்தா தான பாக்கறதுக்கு? ஆமா எனக்கு என்ன லெட்டர் எழுதுன? எதுக்கு?

நான் செய்வதறியாது திகைத்து நின்றேன்...முட்டாள்.லெட்டரை வேறு யாரோ டைரியில் ஒளித்து வைத்திருக்கிறான்.இங்கு இவள் முன்பு நான் அசடு வழிய நிற்க வேண்டியிருக்கிறது.


இப்ப சொல்றியா இல்லியா

அவளின் கண்களை நேருக்கு நேராக சந்திக்க தயங்கி நின்றேன்.ஊர்மிளா பேரழகி.

எழுதியவர் : Gokulprasad (14-Jul-12, 10:48 am)
பார்வை : 2018

மேலே