சில பிரிவுகள்

அந்த சிறிய ஊருக்கு அது நிச்சயம் பெரிய ரயில் நிலையம்தான்.தண்டவாளங்களில் எல்லாம் வெயில் பரவி தாமிரமாகியிருந்தது.
என்னை ஏற்றி கொண்டு செல்ல வேண்டிய ரயில் எதிர்புறம் இருக்கும் பிளாட்பார்மில் வரும் என்றார்கள்.மொத்தமே இரண்டு பிளாட்பார்ம்கள்தான்.ஒன்றரை மணி நேரம் இருந்தது.ரயில் வர இன்னும் தாமதமாககூடும்.ஒரே ஒரு கடை தெலுங்கு தினசரிகளை தொங்க விட்டு கொண்டு படிப்பாரற்று அனல்காற்றில் எரிந்து கொண்டிருந்தது.எனக்கும் தெலுங்கு வாசிக்க தெரியாது.சிமென்ட் படிகளில் ஏறி மெதுவாக பாலத்தில் நடந்து இன்னும் மெதுவாக பெயர்ந்து போன ஆங்காங்கே பொத்தல்கள் விழுந்து விட்ட படிகளில் இறங்கினேன்.வெயில் உக்கிரமடைந்து கொண்டே உச்சியில் நின்றது. கூன் விழுந்து,தொப்பை போட்டுவிட்ட அழுக்கு ஜோல்னாவை தோளில் மாட்டி உட்கார்ந்து கொண்டே சுமந்திருந்த கிழவனை கடந்து ஒரு பெஞ்ச் தள்ளி அமர்ந்தேன்.


பெருஞ்சப்தத்துடன் பிளிறிக்கொண்டு வந்த ராஜதானி எக்ஸ்பிரஸ் தண்டவாளங்களில் அண்டியிருந்த குப்பைகளை காற்றை கிழித்துக்கொண்டு அலைய விட்டு ,நிற்காமல்,நிலம் அதிர அதிர பறந்தது. இரண்டு தூண்களை மட்டுமே நம்பி இருந்த சுதந்திரம் வாங்கிய காலத்து கட்டிடம் அந்த கிழவனின் கைகளை போல கிடுகிடுவென்று ஆடி தன் பாகங்களை நிலத்தில் கொட்டியது.மன்செரியேல் ரயில்நிலையம்.ரயிலிலும் புட்போர்டில் தொங்கிகொண்டுபோனார்கள்.நானும் ஜெனரல் கம்பார்ட்மெண்டில் இப்படிதான் தொங்க வேண்டும்போல.

"பலூன் காவால்னா?"

தன் அழுக்கு பற்களை கொண்ட அகன்ற வாயில் வைத்து உடம்பில் இருந்த மொத்த வாயுவையும் நிரப்பி குழந்தையின் கையில் திணித்தான் .குழந்தை தன் டாடியை பார்த்தது.

"தீஸ்கோ"

பையில் நிறைய பலூன் தான் வைத்திருப்பான் போல.நான் அதை உற்று பார்த்ததை கவனித்து எனக்கும் பலூன் வேண்டுமா என்றான். "ஒத்து", "நிண்ட சீப் பாபு.ஒண்டி தீஸ்கோ",

"ஒத்துனு செப்பெனுகா"

"தெலுகு ராதா?தமிழா?"

"அவுனு"

"எந்த ஊரு?"

"கோயம்புத்தூர்"

"எனக்கு இதே ஊர்தான்.ஆனா எல்லா ஊருக்கும் போயிருக்கேன்"
அதுக்கென்ன என்பது போல பார்த்தேன்.பெண் குழந்தை பலூனை பறக்க விட முயற்சித்து கொண்டிருந்தது.

"என்ன படிக்கிற?"

"+1 "

"கணக்கெல்லாம் நல்லா போடுவியா"

மணியை பார்த்தேன்.ஒரு மணி நேரம் பாக்கி இருந்தது.தேவுடா...

"பூனைக்கு எத்தன காலு?"

"நாலு கால் தான்.குறையில்லாம பொறந்திருந்தா"

"அதெப்படி?ஆறுகாலுள்ள"

"பூனைக்கு எந்த காலத்துல ஆறு காலு இருந்துச்சு?"

"நான் பூவ நக்குற தேனுக்கு எத்தன காலுன்னுதான் கேட்டேன்"

என்ன புரிந்ததோ,அந்த குழந்தையின் அப்பாவும் புன்னகைத்தார்.

"50 சாக்கலேட் இருக்கு,ஒத்த படையாதான் பிருச்சு கொடுக்கணும்.49
பேரு, எப்படி பிரிப்ப?"

"தெரியல"

"உடனே சொன்ன எப்படி?இங்க யாரும் சொந்தகாரங்க வீட்டுக்கு வந்தயா?"

"ஆமா.சித்தப்பா வீட்டுக்கு"

"அடுத்த வருசமும் வருவியா?வந்தேன்னா நான் இதே ஸ்டேசன்ல தான் ஏதாவது வித்துட்டு இருப்பேன்.சரியாய் சொன்னீன்னா அப்ப என்ன விக்கறனோ அத உனக்கு இனாம தரேன்.என்ன?"

அடுத்த கேள்வி கேட்டுவிடுவாரோ என்று பயமாக இருந்தது.

"என்னென்ன விப்பீங்க"

"என்ன கிடைக்குதோ,மீனு,பலூனு,மிட்டாய்,சின்ன சட்டைங்க எல்லாத்தையும்.40 வருஷமாச்சு நான் வியாபாரத்துக்கு ஒப்புகொடுத்து"

"குடும்பம்லா எங்க இருக்கு?"

"இந்த ஊர் முழுக்க இருக்கு.எனக்குதான் இல்ல."

என்ன பேசுவது என்று தெரியவில்லை.எந்த ஊருக்கோ போக வேண்டிய ரயில் மெதுவாக ஆனால் நிற்காமல் எங்கள் மௌனத்தை கடந்து சென்றது.

"கேரளா எக்ஸ்பிரஸ் வண்டி இங்க நிக்கும்ல?"

"நான் இதே ஸ்டேசன்ல தான் 1946 ல வேல பார்த்தேன்.ஊதிய உயர்வு கேட்டு கொள்ளுதிக்குவோம்னு போராட்டம் பண்ணுனோம்.சிறையில அடச்சுட்டான்.எதோ கெட்ட நேரம் சீக்கிரமே வெளிய விட்டுட்டான்,வேலையுமில்ல காசுமில்ல.தனியாவே இருந்துட்டேன்.எத்தன ரயில பாத்திருப்பேன்,உன்ன மாதிரி நிறைய பெருக்கிட்ட பேசறேன்,அஞ்சு மொழி தெரியும்,ராத்திரி மட்டும்தான் நான் தனியாளு.மத்த நேரமெல்லாம் பேசிக்கிட்டேதான் இருப்பேன்.ராத்திரியும் சில சமயம் தொன கிடைச்சுடும்,காசிருந்ததுன்னா"

கண் சிமிட்டினார்.

"கவலை படாத.நீ போகவேண்டிய வண்டியில தான் நானும் போறேன்,ராமகுண்டதுக்கு.ஏத்தாம போய்டுவானா?"

கடந்துபோன ரயிலின் திசையையே சில கணங்கள் பார்த்தார்.டப்பென்று பலூன் வெடித்தது.

"இக்கொக பலூன் இய்யனா?"

அவர் பதிலை எதிர்பார்க்கவில்லை.எப்போதுமே எதிர்பார்க்கமாட்டார் போல.
வாயிலிருந்த விரலை எடுத்துவிட்டு பலூனின் நூலை சொருகினார்.தன் அப்பாவிடம் அதை காட்ட குதூகலத்தோடு துள்ளிக்கொண்டு ஓடியது.

"அடுத்து எப்ப பாக்கலாம்?"

தூரத்தில் ரயில் புள்ளி புள்ளியாக வருவது தெரிந்தது.சின்ன கூக்குரல்.மெல்ல தடதடத்து பின்பு அதிர்ந்து வேகம் குறைத்து பெருங்குரலெடுத்து அலுத்துகொண்டு ஓய்ந்தது.

"நான் உனக்கு பக்கத்துக்கு கம்பார்ட்மெண்ட்ல ஏறிக்கிறேன்.திடீர்னுன் டி.டி.ஆரு செக்கிங் வந்தாலும் வரலாம்"

"நான் கண்டிப்பா அடுத்த வருஷம் வர்றேன்.உங்க கிட்ட பதில் சொல்லாம இனாம் வாங்காம விடறதா இல்ல."

அதிசயமாக பதில் சொல்லாமல் புன்னகைத்தார்.அழகாகத்தான் இருந்தது.

எழுதியவர் : Gokulprasad (14-Jul-12, 10:48 am)
பார்வை : 577

மேலே