நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1

சத்தியமா சொல்றேன், மகாஜனங்களே, நான்லாம் ஒரு ஏரோநாட்டிக்கல் எஞ்சினியராவேன்னு நெனச்சுக் கூடப் பாத்ததில்ல. இப்ப கூட நான் அப்படில்லாம் நெனச்சுக்கறதில்ல. அப்படின்னா நீ என்ன ம----க்கு ஏரோநாட்டிக்கல் படிக்கிறன்னு நீங்க கேக்கலாம். எனக்கும் ரொம்ப நாளாவே இந்தக் கேள்வி உறுத்திகிட்டே இருந்திச்சு. அதனாலதான் இப்படில்லாம் எழுதிட்டிருக்கேன்.

அப்துல் கலாம் என்ன சொல்லிருப்பாருன்னா அவரு நாலாங்கிளாஸ் படிக்கும் போது, அவரோட வாத்தியாரு கிளாசுக்கு வெளிய கூட்டிட்டுப் போய் பறவைகளைக் காமிச்சாராம். அப்பலருந்து தான் அவருக்கு நாமளும் பறக்கணும்னு ஆச வந்துச்சாம். என்னையும் வாத்தியாருங்க வெளிய அனுப்பிருக்காங்க. ஹோம்வொர்க் பண்ணிட்டுவா, படிச்சுட்டு வா, ஏன், பிரின்சிபாலைப் பாத்துட்டு வான்னு கூட வெளிய அனுப்பிருக்காங்க. ஆனா பறவைகளைப் பாத்துட்டு வான்னு யாரும் வெளிய அனுப்பினதில்ல. அப்பிடி அனுப்பிருந்தாலும் எனக்குப் பறக்கணும்னு ஆச வந்துருக்காதுன்னு தான் நெனக்கறேன்.

நான் நாலாங்கிளாஸ் படிக்கும்போது, "உனக்கு என்னவாக ஆசை?" என்று கேட்டிருந்தீங்கன்னா சயின்டிஸ்ட்னு சொல்லிருப்பேன். ஏன்னா அப்ப எனக்கு சயின்ஸ்னா என்னனு தெரியாது. அலுப்பூட்டும் தியரிகளும், தியரங்களும் சயின்ஸ்னு எனக்கு அப்ப தெரிஞ்சிரிந்தா நான் அப்படி சொல்லியிருக்க மாட்டேன்.

அப்ப என் அக்கா எங்கிட்ட கேட்டா, "உனக்கு என்ன பாட்ம் பிடிக்கும்?". ஹிஸ்டரின்னேன். "நீ அந்த பாடத்தில பெரிய ஆளா வருவ"ன்னு அவ சொன்ன. ஆனா நான் இப்டி ஆயிட்டேன்

என் அப்பாவுக்கு ஒரே ஆச தான். அவரு அடிக்கடி சொல்லுவாரு. "நான் கலெக்டர் ஆவணும்னு ஆசப்பட்டேன். அது முடியல, நீயாவது கலெக்டர் ஆவணும்".

எனக்கும் அப்பப்ப அந்த ஆச எல்லாம் மாறிட்டுருக்கும். ஆறாங்கிளாஸ் படிக்கும் போது என் சித்தப்பா மாதிரி பாஸ்டராவணும்னு ஆசப்பட்டேன். வெள்ளையுஞ்சொள்ளையும் போட்டுகிட்டு ஒரு மைக்க கையில புடிச்சுகிட்டு அவரு முழங்கேத பாத்தா எனக்கும் அப்பிடி ஏதாச்சும் பண்ணனும் போல இருக்கும். நானும் பெரிய பாஸ்டராவணும், எனக்க கூட்டத்துக்கு நெறய ஜனங்க வரணும்னு ஆசப்பட்டேன். ஆனா மைக்க காணும்ப அப்பிடியொரு பயம். கையில குடுத்தாங்கன்னா பேச முடியாது. மேலெல்லாம் வேர்க்கும். காலு நடுங்கும். பொறவு எனக்கு என்னத்துக்கு இந்த வீணாச?

எட்டாங்கிளாஸ்ல இன்னொரு விபரீத ஆசயும் வந்துச்சு. அரசியல்வாதி ஆயிட்டா நல்லாயிருக்குமேன்னு தோணுச்சு. அது சரி தான். நாம அரசியல்வாதி ஆயிரணும். இந்த ஒலகமே நம்மள திரும்பி பாக்கணும்ங்க்ற ஒரு நப்பாச. அப்பவும் இப்பவும் தமிழ்நாட்ல ஒரு டிரண்டு இருக்கு. நாலஞ்சு படம் நடிச்சவன்லாம் நாளைய முதல்வன் நாந்தான்னு சவுண்டு விடுறானுவ. அதனால நாமளும் சினிமாவுக்குப் போனாதான் அரசியல்வாதி ஆவ முடியும்னு தோணுச்சு. ஆனா சினிமாவுல நடிக்கிறதுன்னா ஒரு பெர்சனாலிட்டி வேணுமே. அது தான் நம்மள்ட்ட இல்லியே. நாம போனா வேணும்னா காமடியனா நடிக்கலாம். ஹீரோவா நடிக்க முடியாதேன்னு யோசிச்சு, அந்த அரசியல்வாதி கனவும் கலஞ்சு போச்சு.

அப்புறமேட்டு என்னவாவுறதுன்னு ஒரு லட்சியமே இல்லாம ரெண்டு வருஷம் கழிஞ்சுருச்சு. நான் பத்தாங்கிளாஸ் படிக்கும் போது என் பிஸிக்ஸ் மிஸ் கேட்டாங்க, "ஒன்னோட ஆம்பிஷன் என்ன"னு கேட்டாங்க. "தெரியல டீச்சர், அது வருஷத்துக்கொருக்கா மாறிட்டிருக்கு"ன்னு சொன்னேன்.

அதுக்குப் பின்ன வக்கீலாவணும்னுட்டு ஒரு ஆச வந்துது. எனக்க அக்கா ஒருத்தியும் வக்கீலாவப் போறேன்னு சொல்லிட்டிருந்தா, (ஆனா அவ மார்க்கு நல்லா வந்ததால என்ஜினியரிங் படிக்கப் போயிட்டா) ஆனா எனக்க அப்பாவுக்கு வக்கீலுவள கண்டாலே ஆவாது. எல்லாரும் கள்ளனுவனு சொல்லுவாரு. இருந்தாலும் வக்கீலாவணும்ங்க்ற ஆச என்னப் புடிச்சு வாட்டுச்சு. பன்னெண்டாங் கிளாசில இந்த நிலமன்னா, பின்ன எதுக்கு நீ ஏரோநாட்டிக்கல் படிக்க வந்தன்னு நீங்க கேப்பீங்க. எல்லாம் காரணமாத்தான். என்ன காரணம்னுட்டு அப்புறம் சொல்றேன்.

எழுதியவர் : (27-Jul-12, 7:22 am)
சேர்த்தது : பைத்தியக்காரன்
பார்வை : 285

சிறந்த கட்டுரைகள்

மேலே