திருப்பூவணம் - திருஞானசம்பந்தர் பதிகங்கள்

அறிமுகம்

திருப்பூவணம் மிகவும் தொன்மை மிக்கதாகவும், அதிகச் சிறப்புகளுடையதாகவும் விளங்குகிறது. மதுரை - இராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் வைகை ஆற்றின் தென் கரையில் மதுரையில் இருந்து 18 கி.மீ. தூரத்தில் திருப்பூவணம் உள்ளது. இங்கு சுயம்பாகத் தோன்றிய சிவலிங்கத்தின் அருமை பெருமைகளும், சௌந்தர நாயகித் தாயாரின் அன்பும், அருளும் பிரசித்தி பெற்றது.

திருஞானசம்பந்தர் அருளிய மூன்றாம் திருமுறையில் பாடல் பெற்ற தலம் திருப்பூவணம். முன்பு அனைத்து இலக்கியங்களிலும் திருப்பூவணம் என்று வழங்கப்பட்ட இத்திருத்தலம் திரிந்து, தற்போது திருப்புவனம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு பாரிசாதப் பூவின் படிமம் சிவலிங்கமாக உள்ளது. எனவே சிவலிங்கத்தின் பெயர் "பூவணன்" என்பதாகும். இதன் காரணமாக இந்த ஊருக்குத் திருப்பூவணம் என்ற பெயர் உண்டானது. பாண்டிய நாட்டுத் தலங்களில் மூவர் பாடலும் பெற்ற தலம் இது ஒன்றே.

பாண்டிய நாட்டின் தலைநகராக விளங்கிய மதுரைக்குக் கிழக்கு வாயிலாக திருப்பூவணம் இருந்துள்ளது. திருஞானசம்பந்தர் சமணர்களை வெற்றி கொள்ள மதுரை செல்லும் போது மதுரையின் கிழக்கு வாயில் வழியாக உள்ளே செல்ல வேண்டும் என்று திருப்பூவணத்தை வந்து அடைந்தார்.

பார்வதி தேவி தான் அறிந்து செய்த பாவம் போக்க, இத்திருத்தலம் வந்து, திருக்கோயிலுக்கு நேர் எதிரே வைகை ஆற்றின் வடகரையில் பாரிசாத மரத்தின் அடியிலிருந்து தவம் செய்தார். அப்போது சிவபெருமான் அம்மரத்தின் அடியில் சிவலிங்கமாய் முளைத்து. உமையம்மையின் பாவத்தை நீக்கியருளினார்.

இங்கே வந்த திருஞானசம்பந்தர் வைகை ஆற்றைக் கடக்க முயன்ற போது ஆற்று மணல்கள் எல்லாம் சிவலிங்கங்களாகக் காட்சியளித்தன. எனவே திருஞானசம்பந்தர் அங்கிருந்தபடியே தென் திருப்பூவணமே என்று முடியும் தேவாரப் பதிகத்தைப் பாடி வணங்கினார். திருப்பூவணநாதர் நந்தியை சாய்ந்திருக்கச் சொல்லி காட்சி அருளினார்.

திருப்பூவணம் ’36ஆவது’ திருவிளையாடல் நடந்த திருத்தலம். இதில் திருப்பூவணத்து இறைவன் திருமேனியைச் செய்திடத் தேவையான தங்கத்தை இரசவாதம் மூலமாகப் பெற்றிடும் முறையை மதுரை சோமசுந்தரேசுவரர் சித்தர் வடிவில் நேரில் வந்து அருளியுள்ளார். இத்தங்கத்தைக் கொண்டே திருப்பூவணத்தில் உற்சவர் (அழகிய பிரான்) செய்யப்பட்டுள்ளது.

முன்பு, திருப்பூவணத்தில் பொன்னனையாள் என்ற சிவபக்தை இருந்தாள். இவள் நாட்டிய இலக்கணப்படித் தினமும் இறைவன் முன் நடனமாடுவது வழக்கம். இவள் தனக்குக் கிடைக்கும் வருமானத்தை எல்லாம் சிவனடியார் பலரும் வந்து உணவருந்திச் செல்லும் வண்ணம் செலவு செய்தாள்.

அவளுக்குத் திருப்பூவணம் கோயிலில் வைத்துப் பூசிப்பதற்கு இறைவனின் திருமேனியைத் தங்கத்தில் செய்து கொடுக்க வேண்டும் என்று பேராவல் உண்டானது. ஆனால் கிடைக்கும் பொருள் எல்லாம் அன்னதானத்திற்கே செலவானதால், மதுரை சோமசுந்தரக் கடவுளை மனதில் நினைந்து வேண்டினாள்.

இந்த பக்தையின் விருப்பத்தை அறிந்த மதுரை சோமசுந்தரப் பெருமான் அதனைப் பூர்த்தி செய்ய எண்ணி சித்தர் வடிவில் திருப்பூவணத்தில் பொன்னனையாள் வீட்டிற்கு எழுந்தருளினார். பொன்னனையாள் சித்தரது பாதங்களில் பணிந்து வணங்கி உணவு உண்ண அழைத்தாள். அதற்குச் சித்தர் உனது முகம் வாட்டத்துடன் காணப்படுகின்றதே! உனது மனக் கவலை என்னவென்று கேட்டார்.

பொன்னனையாளும் எங்கள் திருப்பூவணத்து இறைவனின் திருவுருவினைப் பொன்னினால் செய்து முடிக்கக் கருதுகிறேன். எனக்கு நாள்தோறும் கையில் வரும் பொருள் முழுவதும் அடியார்களுக்கு அன்னம் இடுவதிலேயே செலவாகி விடுகின்றது என்று தனது கவலையை கூறினாள்.

அதற்குச் சித்தரும் ”நீ தானத்துள் சிறந்த அன்னதானத்தை தினமும் செய்து வருகின்றாய், உன் பெயருக்கு ஏற்றார்போல இறைவனின் திருவுருவத்தைத் தங்கத்தினால் செய்யப் பெறுவாயாக” என வாழ்த்தினார்.

பின்னர், அனைத்து உலோகப் பாத்திரங்களையும் கொண்டு வரச்செய்து திருநீற்றினைத் தூவி, இவற்றைத் தீயிலிட்டுக் காய்ச்சுங்கள் தங்கம் கிடைக்குமெனக் கூறினார். அவர் யாம் மதுரையில் விளங்கும் சித்தராவோம் எனக் கூறி மறைந்தார்.

பொன்னனையாள் வந்தவர் மதுரை வெள்ளியம்பலத்தில் கால்மாறி ஆடியருளும் அம்பலவாணரே எனக் அறிந்து தனது கவலையை இறைவனே நேரில் வந்து நீக்கினார் என மகிழ்ந்தார்.

சித்தர் கூறியபடியே உலோகப் பாத்திரங்களைத் தீயிலிட்டுப் புடம் செய்தாள். உலோகங்களின் களிம்பு நீங்கிப் பொன்னாக மாறின. அப்பொன்னைக் கொண்டு இறைவனுக்குத் திருவுருவம் செய்தாள்.

இறைவனின் அழகான திருவுருவத்தைக் கண்டு ’அச்சோ! இவன் மிக அழகன்’ என்று இறைவனின் கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டாள். அதனால் இறைவனின் திருமேனியில் தழும்பு உண்டானது. இத் திருவுருவத்தை இன்றும் கோயிலில் தரிசித்திடலாம்.

பொன்னனையாள் தங்கத்தினால் ஆன இறைவனது திருவடிவத்தைப் பிரதிஷ்டை செய்து தேர்த் திருவிழா முதலியன நடத்தி இனிது வாழ்ந்தாள். சில காலம் சென்ற பின்னர் வீடு பேறு அடைந்தாள். இத்திருவிளையாடற் தொடர்பான விழாவினை மதுரைக் கோயிலிலேயே வைத்து நடத்தி வருகின்றனர்.

பொன்னனையாள் இறைவனின் கன்னத்தைக் கிள்ளுவது போன்ற சிற்பம் கோயில் மகா மண்டபத்தில் உள்ள கல்தூணில் செதுக்கப்பட்டுள்ளது. இறைவனது திருவுள்ளத்தில் அடியவர்களில் அடிமையென்றும் ஆடிப்பிழைப்பவர் என்றும் பேதங்கள் ஏதும் இருப்பதில்லை.

இறைவன் மனம் விரும்புவதெல்லாம் அன்பும், தொண்டும், பக்தியும் தான். மேலும் சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்வதால் நமது பாவங்கள் அனைத்தும் ஒழிந்து நமக்கு இறைவன் நேரில் காட்சி தந்து அருளுவான் என்பதும் கூறப்பட்டுள்ளது.

இங்கு வைகையாற்றில், இறந்தவர்களின் அஸ்தி கரைக்கப்படுகிறது. இது ராமேஸ்வரம் கடலில் கரைப்பதற்குச் சமமானது. இறந்த 30 ஆம் நாளில் திருப்பூவணநாதர் கோயில் சன்னிதியில் நெய்யூற்றி, மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்தால், இறந்தவர் மோட்சம் அடைவதாக நம்பிக்கை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Aug-12, 8:15 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 390

சிறந்த கட்டுரைகள்

மேலே