1.ஆதலினால் காதலித்தேன்..! –பொள்ளாச்சி அபி.!

சமுதாயம் குறித்த பார்வையுடன் பதிவு செய்யப்படும் கவிதைகளுக்குத்தான் நீங்கள் கருத்து சொல்வீர்களா..?
காதல் பற்றியக் கவிதைகளுக்கு ஏன் கருத்து சொல்வதில்லை.?
காதல் என்ன அவ்வளவு மோசமான விஷயமா.?
நீங்கள் காதல் தோல்வி அடைந்தவரா.?
காதலித்து எங்கேனும் ஏமாந்து விட்டீர்களா.?
காதல் கவிதைகள் உங்களுக்கு ஏன் பிடிக்கவில்லை.?

அடேயப்பா..எவ்வளவு கேள்விகள்..? இவையனைத்தும் தனிவிடுகைகளிலும்,கருத்துக்களுமாக சில தோழர்களும்,தோழியரும் பல்வேறு சமயங்களிலும் என்னைக்கேட்டவை.!

இவற்றைப் படித்தபோது காதலுக்கு நான் விரோதி என எல்லோரும் என்னை நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ..? என்ற சந்தேகமும் எனக்கு அடிக்கடி வந்தது.ஆனால் அது உண்மையல்ல..! காதல் குறித்த எனது பார்வையைப் பலமுறை பதிவு செய்தும் கேள்விகள் தொடர்கின்றன.எனது கருத்துக்களை பொதுவான படைப்பாய் நான் பதிவிடாததும் ஒரு காரணமாய் இருக்கலாம் எனப் புரிந்தது.அதன் விளைவே இனி தொடரும் எழுத்துக்கள்.

ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் காதல் என்பது மிகமிக அழகிய பக்கங்கள்தான்..அது எனக்கும் வாய்த்திருக்கிறது.அது என்னை மாற்றியிருக்கிறது.என்னை உயர்த்தியிருக்கிறது. இப்போதும் காதலுடனே வாழ்கிறேன்.காதலுடனே மறைவேன்.ஆனால் குறிப்பிட்ட ஒரு கால இடைவெளியில்..,யதார்த்த உலகம் விளங்கிக் கொண்டிருக்கும் ஆண்பெண் இடையே நிகழும் காதல் மட்டுமே உயர்வானது அல்ல என்றும் எனக்கு விளங்கியது.

அந்தக் காதலின் உயர்வுக்கு பங்கம் வராமல்,அதனினும் உயர்வான சில விஷயங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசியமும் பொறுப்பும் இப்போது எனக்கிருக்கிறது.ஏன்..நீ என்ன இந்த சமூகத்தை மாற்றவந்த மகாத்மாவா..? உனக்கு யார் அந்தப் பொறுப்பைக் கொடுத்தது.? என்ற கேள்வியும் உங்கள் மனதில் எழலாம்.அது இயல்பே..! அவ்வாறான உங்கள் எண்ணத்தை நான் தவறென்று எப்போதும் குறிப்பிடமாட்டேன்.

ஆனால்,எனது காதல் மூலம் நான் கற்றுக் கொண்டதை,இங்கே பதிவிடுவதின் மூலம் யாருக்கும் இடையூறும்,பாரமுமாக இருக்காது என்றே எண்ணுகிறேன்.அதன்மூலம் இப்படியும் காதலிக்கலாமோ,இதுவும் காதலோ.., என்று யாரேனும் சிலருக்கு ஒரு எண்ணத்தை,ஒரு தூண்டுதலை உருவாக்கிவிட முடியும் எனில் அந்த எழுத்து அந்த அளவில் வெற்றிபெறுவதையே விரும்புகிறேன்.அதனையும் அட்வைஸ் மழையாக இல்லாமல்,எனது அனுபவத்தையே முடிந்தவரை இங்கு சற்று சுவாரஸ்யமாக சொல்லிவிட்டால் இதனைப் படிக்க விரும்புபவர்களுக்கும் இதுவும் ஒரு படைப்பு என்ற அளவில் திருப்தியைத் தரும் என்பதும் எனது எண்ணம்.

இனி..காதல் பற்றி பொதுவாய் சில வார்த்தைகள்..,
குறிப்பிட்ட ஆண்,பெண்ணுக்கிடையே ஏற்படும் காதலைவிடவும்,ஆண்கள் மற்றும் பெண்களை வயது,சாதி,மதம்,இனம்,மொழி என எல்லைகள் மட்டுமின்றி,இன்னும் உள்ள பலவேறுபாடு களையும் தாண்டி மனிதர்கள் அனைவரையும் காதலிக்க நான் சிலரால் கற்றுக் கொண்டேன். அவர்கைளைக் காதலிப்பதற்கும்,அவர்களால் காதலிக்கப்படுவதற்கும் நான் இடையறாது என்னைத் தயார் படுத்திக்கொண்டேன்.

காதல் என்றால் பலபேர் புரிந்து கொண்டுள்ளது போல வயதுவந்த ஒரேயொரு ஆணுக்கும் ஒரேயொரு பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் உள்ளப் பிணைப்பை மட்டுமல்ல.ஆசை,பாசம் என கலந்துகட்டி,காதல் என்ற பொதுவான புரிதல்களைத் தாண்டி விரிந்துசென்ற எனது பிள்ளைக்கால காதல்,வாலிபக் காதல்,இடையிலே வந்த காதல்,இடைவிட்டுப்போன காதல்,மணத்தில் முடிந்த காதல்,இப்போதும் தொடரும் காதல் என,எனது ஆசைகளாக முகிழ்த்த எல்லாக் காதல்களைப் பற்றியும் சொல்லிவிடவே ஆசை.!

இவையெல்லாம் நீங்கள் இதுவரை காதல்பற்றி புரிந்து தெரிந்து அனுபவப்பட்டு வைத்திருக்கும் கட்டுக்கோப்புகளுடன் ஒத்துப்போகுமா என்பது எனக்குத் தெரியவில்லை.
ஆனாலும்,எனக்கு மனதளவில் நெருக்கமாய் இருந்த பெண் தோழியர்களுடன் எனக்கு ஏற்பட்ட உள்ளப்பிணைப்பையும்,அது காதலாக முகிழ்த்த சந்தர்ப்பங்களையும், எல்லை மீறப்படாத பண்பையும்,கலாச்சாரத்தை மதிக்கும் நேர்மையையும் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டையும் எனது அல்லது எமது கடமையாகவே கொண்டிருந்தோம் என்பதையும்,இந்தக் கட்டுரையின் வாயிலாக இலைமறை காயாக சொல்லிவிடவே ஆசை.

ஏனெனில்,காதல் என்ற சீரிய நிகழ்விலும் எங்கள் வயதுக்கேற்ற பொறுப்பும்,பொறுமையும் இருந்தது என்பது வெளிப்படுத்தப்பட்டால்,அது இன்னும் பலருக்குப் பயனுள்ளதாக இருக்கலாமே என்ற எண்ணமே காரணம்.அதன் அஸ்திவாரமாகவே இதனை எழுதவும் துணிந்தேன்.
இது எனது சொந்த விஷயம் அல்ல..இந்த சமூகத்தில் வெளிப்படையாக நிகழ்ந்தவை எனக்குமட்டுமே எப்படி சொந்தமாக முடியும்.?.
அதனால்தான் இதனை உங்கள்முன்பு பதிவிடவும் துணிந்தேன்.

இந்தப்பதிவில் தொடர்புடைய பலர் தற்போது எங்கிருக்கிறார்கள் என்பது கேள்விக்குறிதான்.உள்நாடோ அல்லது வெளிநாடோ.. உயிரோடு இருக்கலாம்.அல்லது இல்லாமலும் போகலாம்.இருப்பவர்கள் சிலர் எப்போதேனும் இதனைப் பார்வையிடவும் கூடும்.எனினும் அவர்களில் யாருடைய மரியாதைக்கும் கௌரவத்திற்கும் குறை ஏற்பட்டுவிடாமல் இதனை எழுதிவிட முடியும் என்றே நம்புகிறேன். எனக்குள் முகிழ்த்த எண்ணங்களுக்கு மற்றவர் யாரும் பொறுப்பாக முடியாது என்பதை படிப்பவர்கள் நன்றாகவே உணரமுடியும்.அந்த அளவில் இதனோடு தொடர்பு உடையவர்கள் நம்பிக்கையோடு தொடரலாம். ஏனெனில் எனது வாழ்க்கையும் அப்படித்தான் இதுவரை தனது பாதையைக் கடந்து வந்திருக்கிறது.

இந்தப்பதிவுகள் எனது வாழ்க்கையின் ஒருதுண்டுப் பகுதி.இதில் கதைகளைப் போல சாகசமோ..பெரும் திருப்பங்களோ இராது. ஆனால் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருசாதாரண மனிதன் குறித்த பதிவுமட்டுமே.ஒரு நேரடிக்காட்சித் தொடர் போல...,இது உங்கள் வாழ்விலும் நடந்திருக்கலாம்.

எனது வாழ்வில் கடந்துவந்த பாதையில் இன்னொருமுறை நான் எனது நினைவுகளின் துணையோடு திரும்பிச் செல்கிறேன். என்னுடன் இணைந்து வருபவர்களிடம் பேசிக்கொண்டே செல்வது போல சொல்லிச் செல்கிறேன்.நான் கற்றுக் கொண்டதும்,என்னால் கற்றுக் கொடுக்கப்பட்டதுமாக கழிந்துசென்ற காலங்களை மீண்டும் எனது கையகப்படுத்தும் முயற்சியே இது. இது சிலநேரம் சுவையாகவும் சிலநேரம் அலுப்பாகவும் இருக்கக் கூடும்.அதற்காக நான் எதையும் மாற்றிச் சொல்லவிரும்பவில்லை. காலத்தின் பேரேட்டில் எழுதப்பட்டவற்றை திருத்தியெழுத எனக்கு மட்டுமல்ல யாருக்கும் உரிமையில்லை என்பதையும் தாங்கள் உணர்ந்தே இருப்பீர்கள்.

அப்புறம் மிக முக்கியமான விஷயம்..,இதனைப் படிப்பதும்,கடப்பதும்,கருத்திடுவதும் அதனைத் தவிர்ப்பதும்,கருத்தால் ஒட்டுவதும்,வெட்டுவதும்...,அது உங்கள் உரிமைக்குட்பட்ட சொந்த விஷயம்.! ஒருவேளை..,உங்களுக்கு பதில் சொல்லவேண்டிய வாய்ப்புக்கள் அமைந்தால்,எனக்குத் தெரிந்தவரை பதிலிறுப்பது எனது கடமை..!
இனி..வாருங்கள் அடுத்தடுத்த அத்தியாயங்களில் எனது உலகத்திற்குள் உங்களை விருந்தினர்களாய் அழைத்துச் செல்கிறேன்..!.
தொடர்ந்து பேசுவோம்...!
என்றென்றும் அன்புடன் பொள்ளாச்சி அபி.!

எழுதியவர் : பொள்ளாச்சி அபி.B +ve (13-Aug-12, 11:46 am)
பார்வை : 369

மேலே