பொடுதலை மூலிகை

தினமலர் நாளிதழின் 14, செப்டம்பர், 2012 தேதியிட்ட சிறுவர் மலர் இதழில் ’மொட்டை தலை’ என்ற சிறுகதை வாசித்தேன். அதில் ’பொடுதலை’ மூலிகை இலையை நசுக்கி முழங்காலில் வைத்துக் கட்டினால் முழங்கால் வலி நீங்கிவிடும் என்றும் வாசித்தேன். வலைத்தளத்தில் தேடிய போது கிடைத்த செய்தியைப் பகிர்ந்து கொள்கிறேன்.

பொடுதலை (Phyla nodiflora) ஒரு மூலிகைச் செடியாகும்..இதற்கு வேறு பல மருத்துவ குணங்களும் உண்டு.

’பொடுதலை என்ற பேருரைக்கில் விடுதலையாகும் பேதி’ என்பது பழமொழி.

பெயரைச்சொன்னாலே பேதி ஓடியே போய்விடுமாம்!

பொடுதலைச் செடி ஈரப்பாங்கான தரையுடன் ஒட்டிப் படர்ந்து வளர்கிறது. இதை பலர் கவனித்துக்கூட இருக்க மாட்டார்கள். இதன் எல்லாப் பாகங்களுமே மருத்துவக் குணங்கள் உடையனவாகும்.

"பொடுதலையின் பேருரைத்தால் போராமப் போக்கும்
அடுதலை செய் காசம் அடங்கும் கடுகிவரு
பேதியொடு சூலைநோய் பேசரிய வெண்மேகம்
வாதமும் போ மெய்யுரக்கும் வாழ்த்து"

(அகத்தியர் குணபாடம்)

மனிதனின் தலையில் வரும் பொடுகை நீக்கும் மூலிகை பொடுதலை. பெயரிலேயே மூலிகையின் பலனை வைத்திருக்கும் மூலிகைகளில் இதுவும் ஒன்று. இதற்கு பூற்சாதம், பூஞ்சாதம், பொடசிரிசம், நாகசிங்கு, ரசாயனி சைய்வம், தோசாக்கினி, குன்ம நாசனி எனப் பல பெயர்களும் உண்டு.

முடி இருப்பவர்களுக்கு எல்லாம் பொடுகு ஒரு பெரும் பிரச்னையாகும். பொடுகு உள்ளவர்களுக்கு முடி உதிரும்.

பொடுதலை 150 கிராம், தோலுரித்த சின்ன வெங்காயம் 250 கிராம், வெந்தயம் 50 கிராம் மூன்றையும் இடித்து இரும்பு வாணலியில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் விட்டு அதில் மேற்படி சரக்கை கலந்து சிறு தீயில் எரிக்கவும். நீர் சுண்டி தீயாமல் மிதக்கும் பக்குவத்தில் இறக்கி, ஆறவிட்டு வடிகட்டி பத்திரப்படுத்தவும், இதை தினமும் தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக தலையில் தேய்த்து தலைவாரிக் கொள்ள வேண்டும்.

பொடுதலை இலைகளை நெய்விட்டு வதக்கி, புளி, உப்பு, மிளகாய் போட்டு சேர்த்து துவையல் செய்து சாப்பிட பொடுகு குணமாகும்.

இருமல் பாதிப்புள்ளவர்கள் பொடுதலை இலையை சுத்தம் செய்து அதனுடன் பாசிப்பருப்பு கலந்து வேகவைத்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.

பொடுதலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொண்டு, காலை, மாலை என இருவேளையும் கஷாயம் செய்து இரண்டு நாட்களுக்கு அருந்தி வந்தால் வயிற்று உபாதைகள் நீங்கும்.

பொடுதலை உடலுக்குக் குளிர்ச்சி தந்து, உடல் எரிச்சலைத் தணிக்கிறது. உடலின் பசியின்மையைப் போக்குகிறது. அபான வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும். வயிற்று மந்தம், வயிற்று வலி, சீரணக் கோளாறு, குடற்புழுக்களின் தொல்லை, சீதபேதி, வயிற்றுப்புண் ஆகியவற்றை குணமாக்கும்.

வெட்டை நோய், உள்மூலம் போன்ற பல பிற நோய்களுக்கான மருந்துகளிலும் கூட்டு மருந்தாகச் சேர்க்கப்படுகிறது.

இக்கஷாயத்துடன் வால்மிளகு, சூரணம் சேர்த்து குடித்து வர சிறுநீரக நீர்த்தாரைப் புண், அதனால் ஏற்படும் வெள்ளைப் படுதல் குணமாகும்.

தினமும் காலையில் 1 தேக்கரண்டி பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வரவேண்டும். அல்லது காலை, மாலை இருவேளையும் கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

உடலில் எந்தவகையான பாதிப்பு ஏற்பட்டாலும் தலைவலிதான் முதலில் உருவாகும். இதில் மன அழுத்தம் உருவானால் ஒற்றைத் தலைவலி உண்டாகும். அதற்கு பொடுதலை இலைகளை அரைத்து தலைவலி உள்ள பகுதியில் பற்று போட்டால் ஒற்றைத் தலைவலி விரைவில் நீங்கும்.

நீரிழிவு நோயின் தாக்கம் உள்ளவர்களுக்கு பொடுதலை சிறந்த மருந்தாகிறது. நூறு கிராம் பொடுதலை இலையை அரை டம்ளர் நீரிலிட்டு காய்ச்சி கால் பாகம் சுண்டின பின் வடிகட்டி அதை இரண்டு பங்காக்கி காலை, மாலை குடித்து வர சிறுநீரிலுள்ள இனிப்பை மாற்றும்.

பொடுதலையை சுத்தம் செய்து அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய் விட்டு வதக்கி சட்னி செய்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயின் தாக்கம் வெகுவாக குறையும்.

சிலருக்கு வாயுவினாலோ அல்லது ஏதேனும் அடிபட்டாலோ விரைப்பையில் வீக்கம் உண்டாகும். இவர்கள் பொடுதலையை மைபோல் அரைத்து வீக்கம் உண்டான பகுதியில் பற்று போட்டால் விரைவீக்கம் குறையும்.

சில பெண்களுக்கு கருப்பை வலுவில்லாமல் இருப்பதால் கருச்சிதைவு உண்டாகும். இவர்கள் பொடுதலையை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கருப்பை வலுப்பெறும். இத்தனை மருத்துவ குணங்கள் இந்தச் சின்ன சிறு செடியில் இருக்குது.

இந்த மூலிகையை உள்ளே உட்கொள்ளும் முன் தகுதி பெற்ற சித்த மருத்துவரை ஆலோசிப்பது தகுந்த பயனளிக்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Sep-12, 2:56 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 809

சிறந்த கட்டுரைகள்

மேலே