மற்றவரிடம் உள்ள செல்வத்தை பெற விரும்பாத மனம் வேண்டும்

மதுரை தமிழ்ச் சங்க வெளியீடான ’செந்தமிழ்’ ஆகஸ்டு 2012 இதழில் சிதம்பரம், அண்ணாமலை நகரைச் சேர்ந்த க.சாந்தி என்பவர் எழுதிய ’திருவருட்பாவில் இலக்கிய வகைகள்’ என்ற கட்டுரை வாசித்தேன். திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகளளின் தமிழ்ப் பற்றும், இலக்கிய ஈடுபாடும் நன்கு அறிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்தது.

திருவருட்பா, முதல் திருமுறை, முதல் தொகுதி, அவர் இயற்றிய தெய்வமணிமாலை என்ற நூலில் 31 பாடல்கள் உள்ளன. அதில் நாம் அனைவரும் அறிந்த பாடல் ‘ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்’ என்பதாகும்.

வள்ளலாரின் 31 பாடல்களுமே பொருள் பொதிந்தவைகளாகும். அவைகளில் 9 ஆம் பாடலை இங்கு அளிக்கிறேன்.

'ஈயென்று நானொருவரிட நின்று கேளாத
இயல்பு மென்னிட மொருவரீ
திடுவென்ற போதவர்க் கிலையென்று சொல்லாம
லிடுகின்ற திறமும் இறையாம்
நீயென்று மெனைவிடா நிலையும் நானென்று முன்
னினை விடா நெறியு மயலார்
நிதியொன்று நயவாத மனமு மெய்ந்நிலை நின்று
நெகிழாத திடமு முலகில்
சீயென்று பேயென்று நாயென்று பிறர்தமைத்
தீங்கு சொல்லாத தெளிவும்
திரமொன்று வாய்மையும் தூய்மையும் தந்துநின்
திருவடிக் காளாக்கு வாய்
தாயொன்று சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே' 9

முகம் மலர்ந்து இனிய சொற்களைக் கூறும் தாயாய் சென்னை கந்த கோட்டத்துள் சிறக்கும் கோயிலில் எழுந்தருளும் கந்தவேளே,

குளிர்ச்சி பொருந்திய முகத்துத் தூய மணிகளுள் சைவமணியாய்த் திகழும் ஆறுமுகம் கொண்ட தெய்வமணியே,

நான் ஒருவரிடம் சென்று அவர் முன்னே நின்று ஒன்று தருக என்று கேட்காத இயல்பும், என்னிடம் ஒருவர் வந்து இதனைத் தாருங்கள் என்று கேட்கும் போது இல்லை யென்று சொல்லாமல் தருகின்ற தன்மையும்,

இறைவனாகிய நீ எப்போதும் என்னைக் கைவிடாத நிலைமையும், நானும் எக்காலத்தும் உள்ளத்தில் உன்னினைவு மறந்திடாத நேர்மையும், எனக்குத் தொடர்பில்லாத மற்றவரிடம் உள்ள செல்வத்தைக் கண்டு அதனைப் பெற விரும்பாத மனமும், உண்மையான நிலையில் நிற்கும் மனம் மாறாத நெஞ்சத் திண்மையும்,

இவ்வுலகில் சீயென்றும் பேயென்றும் நாயென்றும் பிறரை இகழ்ந்து பேசாத தீச் சொல் சொல்லாத தெளிவும், உறுதி வாய்ந்த வாய்மையும், அகத் தூய்மையும் தந்தருளி நின் திருவடிக்கு ஆளாக்குவாயாக என்றும் வள்ளலார் கூறுகிறார்.

முப்பத்தியொரு பாடல்களிலும்,

’தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே’

என்று முடிக்கிறார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Sep-12, 11:33 am)
பார்வை : 478

சிறந்த கட்டுரைகள்

மேலே