எச்சில் நனைத்த சிலேட்டுக் குச்சி ! நூல் ஆசிரியர் கவிஞர் சி .கோபால் . அணிந்துரை கவிஞர் இரா .இரவி .

எச்சில் நனைத்த சிலேட்டுக் குச்சி !

நூல் ஆசிரியர் கவிஞர் சி .கோபால் .

அணிந்துரை கவிஞர் இரா .இரவி .

எச்சில் நனைத்த சிலேட்டுக் குச்சி என்ற நூலின் தலைப்பு மலரும் நினைவுகளை மலர்விக்கின்றது .நூல் ஆசிரியர் கவிஞர் சி .கோபால் வளர்ந்து வரும் கவிஞர் .திருப்பரங்குன்ற்த்தில் பாரதியார் நினைவு நாள் கவியரங்கில் என்னோடு கவிதை பாட வந்தபோது இந்தக் கவிதைகளை அணிந்துரைக்காக தந்தார். படித்துப் பார்த்தேன் .நல்ல சிந்தனை .நல்ல வழியில் நடக்கும் நல்ல கவிஞரின் கவிதைகள் .எழுதியபடி வாழும் இளைஞர் .குறுந்தகவல் மூலம் முக்கிய நிகழ்வுகளை இலக்கிய வட்டத்தினருக்கு அனுப்பி வரும் தொண்டு செய்து வரும் கவிஞர் . அவருடைய கவிதைகளில் தன்னம்பிக்கை உள்ளது .

எனக்கான எழுத்தை
என்னைத் தவிர
வேறு யாராலும்
எழுத முடியாது என்பதால் !

தலை எழுத்தை கடவுள் எழுதி விட்டான் என்று புலம்பும் மூட நம்பிக்கையை முறியடிக்கும் விதமாக எழுதி உள்ளார் . காதலைப் பாடாத கவிஞன் இல்லை .நூல் ஆசிரியர் கவிஞர் சி .கோபாலும் காதலை மிக நுட்பமாகப் பாடி உள்ளார் .

தினமும் பார்த்துக் கொள்வோம்
என்றாவது தான் பேசிக் கொள்வோம்
அப்படி பேசுகையில் கூட
சமயத்தில் எங்களுக்குள்
பேசிக் கொள்வதற்கு
வேறு வார்த்தயே கிடைப்பதில்லை
என்ன மெலிஞ்சுட்ட ?
என்பதைத் தவிர !

காதலில் கண்களுக்குத்தான் வேலை அதிகம் .உதடுகளுக்கு அல்ல என்பதை மிக அழகாக உணர்த்தி உள்ளார் .மூட நம்பிக்கைகளைச் சாடும் விதமாக பல கவிதைகள் உள்ளது ,பாராட்டுக்கள் .

படிப்பு வருவதற்காக
யானைச் சாணத்தைத்
தொடர்ந்து மிதித்த நான்
கடைசி வரை
மிதிக்கத் தவறி விட்டேன்
பள்ளிக் கூட வாசலை ...

இன்றும் தீண்டாமை பல கிராமங்களில் தொடரும் செய்தி படித்து வேதனைப் படுகிறோம் . தீண்டாமை என்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் .என்பதை பலரும் உணருவதில்லை .அவர்களுக்கு உணர்த்தும் விதமாக ஒரு ஹைக்கூ .

தீண்டாமை பெருங்குற்றமா
யாருக்குத் தெரியும் ?--அது
மனப்பாடப் பகுதியில்லையே !

இன்றைய கல்வி முறை ,குழந்தைகள் படும் பாடு என பல பொருள்களில் கவிதை எழுதி உள்ளார். பாராட்டுக்கள் . வாழ்வியல் எதார்த்தங்களை நன்கு பதிவு செய்துள்ளார் .தன் நலத்தின் காரணமாக மனிதாபிமானம் மறக்கும் செயலை வடித்துள்ளார் .

மனிதத் தன்மைக்கும்
வயிற்றுப் பசிக்கும் நடக்கும்
ஒரு குறு நேரக்
குருசேத்திரத்தில்
பல நேரங்களில்
வயிற்றுப் பசியே
வாகை சூடுகிறது !


மகா கவி பாரதியின் வைர வரிகளை வைத்தே சுரீர் பளீர் விதமாக ஒரு ஹைக்கூ வடித்துள்ளார் .

காக்கை குருவிகள்
எங்கள் சாதி - ஆம்
நாங்களும் வேட்டையாடப் படுகிறோம் .

இந்த ஹைக்கூ கவிதையைப் படித்ததும் ,காவலர்கள் மீனவர்களை சுட்ட நிகழ்வு என் நினைவிற்கு வந்தது .
குரங்கிலிருந்து மந்தன் வந்தான் என்ற டார்வின் பரிணாமக் கோட்பாட்டை ஆராய்ந்து அற்புதமாக ஒரு ஹைக்கூ எழுதி உள்ளார் .சிந்திக்க வைக்கிறார் .

முன்னங்கால்கள்
கைகளானது
குரங்கின் மனித முயற்சி !

கவிதைகளில் தாத்தா ,பாட்டி பற்றி பசுமை நினைவுகளை பதிவு செய்துள்ளார் .
மயில் இறகு குட்டிப் போடும் என்று குழந்தைப் பருவத்தில் நாம் புத்தகத்தில் இருந்த மயில் இறகு பக்கத்தில் அரிசிகள் வைத்த மலரும் நினைவுகளை மலர்விக்கும் ஒரு ஹைக்கூ .

மயிலுக்கு இரையில்லை
இறகிற்கு
அரிசி !

இந்த நூலில் புதுக் கவிதைகளும் ஹைக்கூ கவிதைகளும் உள்ளது .படிக்க சுவையாக உள்ளது .சிந்திக்க வைக்கின்றது .

விடுதித் தனிமை
வீட்டு நினைப்பு
புதிய நண்பர்கள் !

விடுதி அனுபவத்தை நம் கண் முன் நிறுத்தி .நண்பர்களின் மேன்மையையும் உணர்த்துக்கின்றார்.தண்ணீர் அடிப்படை தேவை .ஆனால் நம்மால் அடிப்படைத் தேவையான தண்ணீர் கூட தர முடிவதில்லை .நல்ல தண்ணீரை பணம் கொடுத்து வாங்கும் அவலம் .பன்னாட்டு நிறுவனங்கள் நம் ஆற்றில் இருந்து நீர் எடுத்து பாட்டிலில் அடைத்து பன் மடங்கு விலை வைத்து விற்று கொள்ளை லாபம் அடைந்து வருகின்றனர்.
அதனை உணர்த்தும் ஹைக்கூ ஒன்று .

தண்ணீராகச் செலவழிகிறது
தண்ணீருக்காய்க்
காசு !

எள்ளல் சுவையுடன் ஹைக்கூ கவிதைகள் பல உள்ளது .

பிச்சைக்குப் போனாலும்
ராஜாவின் தோரணையில்
யானை மேல் பாகன் !

சிந்திக்க வைக்கும் கவிதை நூலாக மலர்ந்துள்ளது .நூல் ஆசிரியர் கவிஞர் சி .கோபால் அவர்களுக்கு இலக்கிய உலகில் சிறந்த இடம் கிடைக்கும் என்று பறை சாற்றும் விதமாக உள்ளது .பாராட்டுக்கள். வாழ்த்துக்கள் .

எழுதியவர் : இரா .இரவி (15-Sep-12, 11:58 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 234

சிறந்த கட்டுரைகள்

மேலே