எங்கே திராவிடம்? கட்டுரைக்கு எனது பதில்

இந்திய மொழிகளை நாம் இரண்டு மொழிக்குடும்பங்களாகப் பிரிக்கலாம்.
1. இந்தோ ஐரோப்பிய அல்லது ஆரிய மொழிக்குடும்பம். (சமஸ்கிருதம், இந்தி, மராத்தி முதலியன)
2. திராவிட மொழிகள் (தமிழ், மலையாளம், கன்னடம் முதலியன)

திராவிடம் என்னும் சொல் கால்டுவெல்லின் கண்டுபிடிப்பல்ல. ஆதிசங்கரர் திருஞானசம்பந்தரை திராவிட சிசு என்று அழைக்கிறார். மட்டுமல்லாமல் காரவேலரின் அதிகும்பா கல்வெட்டு திராவிட சங்காத்தம் அல்லது திராவிட மன்னர் கூட்டமைப்பு என்னும் சொல்லை உபயோகிக்கிறது. இதன் மூலம் திராவிடம் என்னும் சொல் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு பாதிரியாரின் மூளைக்கோளாறால் உதித்தது அல்ல என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். (வே.தி.செல்லம் - தமிழக வரலாறும் பண்பாடும்)

மானுடவியல் அடிப்படையில் இப்போதைய இந்தியாவில் யாருமே சுத்த திராவிடரும் இல்லை, சுத்தமான ஆரியரும் இல்லை. அனைவருமே கலப்பினம் தான்.

பின்னர் எதற்காக திராவிடம் என்னும் கருத்தியல் முன்னிறுத்தப்பட்டது?

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்தில் சமூக ஏணிப்படியில் வருணாசிரம தர்மத்தின் உதவியால் மேலிருந்த பிராமணர்களே பெரும்பாலான பதவிகளை ஆக்கிரமித்திருந்தனர். இதனால் கீழ்மட்டத்தில் இருப்பவர்களுக்கு வாய்ப்பு மிகக் குறைந்து போனது. மட்டுமல்லாமல் சாதிவெறியும், தீண்டாமையும் மனுதர்மத்தால் மிகுந்திருந்தது. திருவாங்கூர் பகுதியில் சாதி வெறி மிகக் கொடூரமாக இருந்தது. தாழ்த்தப்பட்ட சான்றோர் குலப் பெண்கள் மார்பில் உடை உடுத்தக்கூடாது என்பது சட்டமாகவே இருந்தது. இத்தகைய சாதி வேறுபாடுகளைப் போக்கும் நோக்குடன் எழுந்ததே திராவிடக் கருத்தியல்.

1921ல் நீதிக்கட்சி நிறைவேற்றிய தீர்மானத்தைப் பற்றி தாங்கள் இன்னும் துல்லியமாக, அதாவது தீர்மானத்தை முன்மொழிந்தவர்கள், வழிமொழிந்தவர்கள் ஆகியோரைப் பற்ற, தீர்மானத்தின் அனைத்து அம்சங்களையும் பற்றிக் குறிப்பிட்டால் உதவியாக இருக்கும். மட்டுமல்லாமல் நீங்கள் குறிப்பிடும் திராவிடத்தை ஏற்றுக் கொள்ளாத தமிழ் தலைவர்களின் பெயர்களைச் சொன்னீர்களானால் அறிந்து கொள்வேன்.

சிந்து சமவெளி நாகரிகம் எப்படி அழிந்தது என்பதைப் பற்றிய உறுதியான சரித்திர ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. இயற்கைப் பேரழிவு, காலநிலை மாற்றம், அந்நியர் படையெடுப்பு ஆகிய அனைத்துமே கருதுகோள்கள் தான். தாங்கள் குறிப்பிடும் சான்றுகளைத் தெளிவாக விளக்கினால் நலமாயிருக்கும்.

இனி அந்த மூன்று விஷயங்களுக்கு வருவோம்.

1.திராவிட இனம் - ஆரிய இனம் என்று இரு வேறுபட்ட இனங்கள் இருந்திருக்கின்றன. அவற்றுக்கான சரித்திர ஆதாரம் தாராளம் - ஏராளம். (ரிக் வேதம் பூர்வ குடிகளைத் தாசர்கள் அல்லது அடிமைகள் என்று அழைக்கிறது.)

2.திராவிடக் கருத்தியல் தமிழர்களுக்குச் செய்திருக்கும் நன்மைகள் எக்கச்சக்கமானவை. அதனால் தான் தமிழ் இது வரைக்குமாவது நிலைத்து நின்றிருக்கிறது. இல்லையென்றால் ஒதுக்கப்பட்ட கெளரவக்குறைச்சலான ஒரு மொழியாக மாறியிருக்கும்.

3.கால்டுவெல் இந்தியர்களைப் பிரிப்பதற்காக திராவிடக் கருத்தியலை அறிமுகப்படுத்தினாராம். சத்தியமாகச் சொல்கிறேன். நான் சிரித்து விட்டேன். இந்தியா என்ற ஒரு தேசிய உணர்ச்சி 19ம் நூற்றாண்டில் ஏற்படவேயில்லை. இந்தியர்களைப் பிரிப்பதற்கு ஒரு ஆங்கிலேயர் புத்தகம் எழுதித் தான் காரியம் ஆக வேண்டுமாக்கும்?

எழுதியவர் : (18-Sep-12, 7:57 pm)
சேர்த்தது : பைத்தியக்காரன்
பார்வை : 412

சிறந்த கட்டுரைகள்

மேலே