உன்னுடன் இருந்து விட ஆசை தான்

என் கண்ணே... கட்டி கரும்பே..
என் கனி முத்து அமுதே....
உன்னொடு இருந்து விட ஆசை தான் ....
என் செல்லமே...”மங்கையராய் பிறப்பதற்கு
நல்ல மாதவம் செய்திட வேண்டுமென ”
பாரதி ஏனோ பாசமாய் பாடி போய் விட்டான்...

காலை சமையலறை பிரவேசத்தில்
மசாலா பெட்டி திறக்கும் போதே
விலை வாசி கை கடிக்க இருப்பதை வைத்து
ஏதோ ஒரு சமையல் செய்து
என்னை போல குக்கரும் தன்
உள்ள கிடக்கையை விசிலடிக்க....

வெந்ததில் கொஞ்சமும்
வேகாததில் கொஞ்சமுமாய்
உள்ளே கொஞ்சம் போட்டு கொண்டு
தொட்டிலில் கிடக்கும் உன்னை முத்தமிட்டு

பிய்ந்து போன செருப்பை இந்த வாரமாவது
தைத்து விட வேண்டுமென்ற
முனைப்புடன் பேருந்தேறி பயணப்படும்

என் பயம் நான் கொடுக்கும்
5 ரூபாய் நோட்டுக்கு ”வேறு
கொடுங்கள் ”என்று நடத்துனர்
சொல்லாமல் இருக்க வேண்டும் ...
ஒருவழியாய் பயணம் முடித்து இறங்கினால்...

வழியில் தென்படும் வழிசல் மன்னர்களின்
இளிப்பை சமாளித்து தினமும்
அவர்கள் பார்க்கும் ஏக்க பார்வைகளில்
வெயிலில் புழுவாய் துடித்து போவேனடி

அலுவலகம் நுழைந்தால் குவிந்து கிடக்கும்
கோப்புகள் ...மேலதிகாரியின் திட்டல்கள்
சக நண்பரின் ஏரளனத்தோடு பணி முடித்து

வீடு திரும்புகையில் மாமியாரின் திட்டலும்
அவலட்சண வீடும் திரும்ப தொலைந்து
விட தோணுதடி செல்லமே....
எல்லாம் மறக்கிறேன்..

உன்னுடன் இருந்து விட ஆசை தான்
என் கதை நீ கேட்டால் நீ
உன் தூக்கம் தொலைப்பாய்
துக்கம் வளர்ப்பாய்
வேண்டாமடி கண்ணே...

என்னோடு போகட்டும் என் வேதனை...
இரவில் மட்டுமே கட்டி அணைத்து
நீ தூங்கும் அந்த சுகத்திற்காய்
இத்தனையும் சகிக்கிறேன் ...என் கண்ணே...
உன்னுடன் இருந்து விட ஆசை தான்

எழுதியவர் : இன்போ.ambiga (16-Oct-12, 12:43 pm)
பார்வை : 725

மேலே