தாக்கரேக்கு ஏன் என்னால் இரங்கல் தெரிவிக்க இயலாது? - மார்கண்டேய கட்ஜு ..!

பால் தகரேயின் மரணத்திற்கு அநேகமாக ஒபாமாவையும் விளாடிமிர் புடினையும் தவிர எல்லோரும் இரங்கல் தெரிவித்துவிட்டனர். இறந்தவர்கள் குறித்து நல்ல வார்த்தை சொல்வது ன்றொரு மரபு நமக்குண்டல்லவா? ஆனால் இறந்து போனார் என்பதற்காகக்கூட என்னால் இந்த மனிதனைப் பற்றி நல்லவார்த்தை கூற இயலாது என்கிறார் நமது மரியாதைக்குரிய நீதியரசர் மார்க்கண்டேய கட்ஜு.

அதற்கு அவர் சுட்டும் காரணம் தாக்கரேயின் \"மண்ணின் மைந்தர்\" கொள்கைதான். அது நமது அரசியல் சட்டத்திற்கு மட்டுமல்ல, அடிப்படை மனித நெறிகளுக்கே அப்பாற்பட்டது. அப்படி மண்ணின் மைந்தர்கள்தான் இங்கே வாழமுடியும் என்றால் பில்கள், கோண்டாக்கள், சந்தாலிகள், தோடர்கள்தான் இங்கே வாழ இயலும். இந்தியத் துணைக்கண்டமும் வட அமெரிக்காவைப்போல ஒரு குடியேறிகளின் நாடு என்பதை மறந்து விடலாகாது என்கிறார் கட்ஜு. ஆரியர்கள் மட்டுமல்ல திராவிடர்களும் கூட ஒரு வகையில் இன்னும் பழமையான வந்தேறிகள்தானே.

தாக்கரேயின் அரசியலுக்கு ஜனநாயக நெறிமுறைகளில் இடமில்லை. குண்டர்கள், உதிரிகள் ஆகியோரைத் திரட்டி ஒரு வெறுப்பு அரசியலைக் கட்டமைத்தவர் தாக்கரே. அவரது முதல் இலக்கு தொழிற்சங்கங்களுக்கு எதிராகத் தொடங்கியது. தொழிற்சங்கங்களும் கம்யூனிசமும் மராத்தா வலிமையைப் பலவீனமாக்கும் என்பது தாக்கரேயின் இட்லர் இரசியல். அடுத்து அந்த இலக்கு தென்னிந்தியர்களை, குறிப்பாகத் தமிழர்களை நோக்கித் திரும்பியது. தமிழ் உழைக்கும் வர்க்கம் இலக்காக்கப்பட்டது. அடுத்து அவரது இலக்கு முஸ்லிம்கள். பாபர் மசூதி இடிப்பை ஒட்டி மும்பையில் ஏற்பட்டக் கலவரத்தில் சிவசேனா ரவுடிக் கும்பல்கள் முஸ்லிம்களை வெட்டிச் சாய்த்தன. ஸ்ரீ கிருஷ்ணா ஆணையம் தாக்கரேயைக் குற்றம் சாட்டியும், அவர் மீது வழக்குகள் பதியப்பட்டும் சாகும்வரை காவல்துறை தாக்கரேயை நெருங்கவில்லை. மலேகான் குண்டு வெடிப்பில் கைதான சாமியாரிணி பிரக்ஞா தாகூர், இராணுவ அதிகாரி உபாத்யாயா போன்ற பயங்கரவாதிகளின் பின் இந்துச் சமூகம் திரள வேண்டும் எனப் பகிரங்கமாக அறிவித்தார் தாக்கரே. ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள் , தீவிரவாதக் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒரு முஸ்லிமின் பின்னால் முஸ்லிம் சமூகமே திரளவேண்டும் என இங்கே ஒரு முஸ்லிம் தலைவர் வாய்திறக்க இயலுமா?

தாக்கரேயின் அடுத்த இலக்கு பீஹாரிகள் முதலான புலம்பெயர் தொழிலாளிகள் மீது திரும்பியது.

இலக்குகளைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டிருந்த தாக்கரே தனது குண்டர் அரசியலையும், கொடும் வெறுப்புப் பேச்சுக்களையும் மட்டும் இறுதிவரை மாற்றிக்கொள்ளவில்லை.

இட்லரை வெளிப்படையாகப் புகழ்ந்து பேசிய தாக்கரேயைத் தன் ரோல்மாடல் எனச் சொல்லிக்கொண்டு தமிழகத்தில் ஒரு இயக்கம் காலூன்ற முயற்சிக்கும் இத்தருணத்தில், கட்ஜுவின் இக்கட்டுரை நம் கவனத்திற்குரியதாகிறது.

எழுதியவர் : நந்திவர்மன் (20-Nov-12, 3:37 pm)
பார்வை : 228

சிறந்த கட்டுரைகள்

மேலே