டெங்கு காய்ச்சலுக்கு மருந்து 'மகா ரூத்ர யாகம்..! எங்கே ..? மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் தான்..!

டெங்கு ஒழிய மரணம் பயம் நீங்க " மகா ரூத்ர யாகம் " மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் நோயாளிகளின் நலனுக்காக நடத்தப்பட்டன. தென் தமிழகத்தில் மட்டும் அல்ல தமிழகம் முழுதும் அல்ல இந்தியா முழுதும் கடந்த சில மாதங்களாக டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன. மதுரை மாவட்டத்தில் மட்டும் எவ்வளவு பேர் இறந்துள்ளார்கள் என்று சரியான கணக்கு கிடையாது. முன்பு தி.மு.க.தலைவர் மு.கருணாநிதி அவர்கள் டெங்கு பலி குறித்து முறையான கணக்கு கிடையாது என்றும், அரசு வேண்டுமென்றே குறைத்து கூறுகிறார்கள் சாவு எண்ணிக்கையை என்றார். பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை.. மௌனமாக இருந்து விட்டார், எங்கே நாமும் மத்திய அரசில் தான் இருக்கிறோம்..! நீங்கள் என்ன செய்தீர்கள்..? என்று பொது மக்கள் கேட்டு விட்டால் என்ன செய்வது..? என்று இருக்குமோ..!

டெங்கு காய்ச்சல் முதல் நாள் டெஸ்ட் கிட் ரூ 1000 /= ஐந்து கிட் கொண்ட பாக்கெட்டுகளில் கிடைக்கிறது டாக்டருகளுக்கு. ஒரு கிட்டை வைத்துக் கொண்டு சுமார் ஒரு பத்து பேருக்கு பார்த்து விடலாம். ஆனால் நமது நல்லெண்ணம் அதிகம் கொண்ட டாக்டர்கள் எப்படியும் ஒரு ஐம்பது பேருக்கு பார்த்து விட மாட்டார்களா என்ன..? முதல் நாள் டெஸ்ட் க்கு ரூ ஐநூறு என்று வைத்துக் கொள்ளுங்கள். அதுவும் அந்த ரேட்டும் அந்த மருத்துவரின் நல்ல மனநிலையைப் பொருத்தது. கொஞ்சம் கோபமாக இருந்தால் ரூ எழுநூறு என்றும் மிகுந்த மகிழ்ச்சியில் அன்று காணப்பட்டால் ரூ முன்னூறு என்றும் இருக்கும். ஆனால் மருத்துவர்கள் ஆஸ்பத்திரியில் மகிழ்ச்சியாக இருந்து பார்த்ததுண்டா என்ன.?

அதுவும் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில்..? அப்படியே மகிழ்ச்சியில் இருந்தால் ஆஸ்பத்திரிக்கா வருவார்கள்..? ஆக, ஆயிரம் ரூபாய் உள்ள முதல் நாள் டெங்கு காய்ச்சல் பரிசோதனைக்கு பல பத்தாயிரம் பார்த்து விடுவார்கள்.

எப்பொழுதுமே ஆஸ்பத்திரிகளில் கூட்டமாக தென்படும் மக்கள், இந்த டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் ஆஸ்பத்திரி,ஆஸ்பத்திரி என்று படையெடுக்க ஆரம்பித்து விட்டார்கள். தனியார் அரசு மருத்துவர்கள் அனைவரும் ஷிபிட் போட்டு காசுகளை அள்ளிக் கொண்டு போய் மூட்டை கட்டிக் கொண்டிருக்கிறார்கள் கடந்த ஆறு மாதங்களாக. இப்படியே எழுதி நிறைய பக்ககங்களை வீணடிக்க விரும்பாத காரணத்தால், மேற்கண்ட தலைப்பிற்கு அல்லது விசயத்திற்கு வருவோம்.

மருந்து ஊசிகள் மாத்திரைகள் என்று எடுத்த போதிலும் பாழாய்போன ஏழை எளியதுகள் உயிரை விட்ட வண்ணம் உள்ளன அதிக அளவில். இவையும் செய்திகளாக துக்கமாக வெகு விரைவில் மக்களிடம் சேர்ந்து விடுகின்றன. இவையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் சில மனித நேயர்கள் மற்றும் சில தன்னார்வ நிறுவன சிறு சிறு குழுக்கள், ரூபாய் 5000, 10,000 என்று கையில் உள்ள காசுகளை போட்டு, சிறு வேம்பு மற்றும் பப்பாளி இலைகள் மேலும் சில மருந்துகளை கலந்து காய்ச்சி, வந்து போகும் நபர்களுக்கு ஐம்பது மில்லி என்று இலவசமாக கொடுத்துக் கொண்டு வருகிறார்கள்.

நிலைமை இவ்வாறு இருக்க, டெங்கு நோய் ஒழிய, மக்களிடம் உள்ள மரண பயத்தை போக்குவதற்கு விசுவ இந்து பரிசத், ஹெரிடேஜ் பவுண்டேசன், கோவர்த்தன் அறக்கட்டளை ( பசு மாடு பாதுகாத்தல் அறக்கட்டளை..? அப்படியெனில் அதுவும் சங் பரிவார் கூட்டமாகத் தான் இருக்கும்..! ) இந்து மாணவர் சங்கம் இவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து பெரிய ஆஸ்பத்திரியில் சிறப்பு யாகம் நடத்தினார்கள். மீனாட்சி அம்மன் செந்தில் பட்டர் தலைமையில் அதிகாலை நான்கு மணிக்கு யாகத்தை தொடங்கி மூன்று மணி நேரம் கழித்து முடித்து விட்டு நேராக நோயாளிகள் மீது தெளித்து விட்டு, அப்படியே ஆஸ்பத்திரியிலும் தெளித்து விட்டு சென்று இருக்கிறார்கள்.

விஸ்வ ஹிந்து பரிசத்திடம் இல்லாத காசா பணமா..? உலகிலேயே இவர்களிடம் தான் பல லட்சம் கோடிகள் உள்ளன. மத்திய அரசும் இவர்களுடையது தான். பூஜை புனஸ்காரம் போட்டு, மக்களை காய்ச்சல் கண்டு இருக்கும் பொழுது கூட, அந்தக் காய்ச்சலில் மரணிக்கும் தருவாயில் கூட, விட்டு விட மறுக்கிறார்களே..? என்று கூறுகிறார்கள் தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்கள்.

எழுதியவர் : மாயாண்டிக்கருப்பு (23-Nov-12, 5:13 pm)
பார்வை : 235

மேலே