பெரிய மீசை வளர்ப்பு ரகசியங்கள்

பெரிதாக மீசை வளர்த்துப் பராமரிக்கும் ஒருவர் தினமும் 760 தடவையாவது மீசையைத் தடவிக் கொடுப்பதாகச் சொல்லப்படுகிறது.

மீசையைப் பெரிதாக வளர்த்துப் பராமரிப்பது தோரணையையும், வீரத்தையும் காட்டுவதாகக் கருதப்படுவதால், பெருநகரங்களில் உள்ள காவல்துறையைச் சேர்ந்தவர்களுக்கு மீசை வளர்ப்புக்கு என்று ஊக்குவிப்புச் சம்பளம் அளிக்கப்படுகிறது.

சாதாரணமாக மனிதர்களுக்கு முடி ஒரு நாளைக்கு 0.014 இஞ்ச்சும், ஒரு வருடத்தில் 5 -6 இன்ச்சும் வளர்வதாகத் தெரிகிறது.

மற்ற மீசைகளை விட, சில குறிப்பிட்ட மீசைகள் அனைவராலும் பெரிதும் விரும்பி ரசிக்கப்படுகிறது. உதாரணமாக, பர்ட் ரேனால்ட்ஸ் என்பவரின் மீசைக்கு சுமார் 4000 முகநூல் ரசிகர்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

உடலில் உள்ள மற்ற இடங்களை விட, மீசைமுடி விரைவாக வளர்வதாகத் தெரிகிறது. குளிர்காலத்தை விட, வெயில் காலத்தில் விரைவாக வளர்கிறது.

பெரிய மீசை ஒரு சில அடையாளத்தையும், தடயத்தையும் மறைக்கப் பயன்படுகிறது. மேலுதட்டிலுள்ள குறைகளையும், தழும்பு மற்றும் வீக்கத்தையும் மறைக்கிறது.

ஒரு கணக்கெடுப்பின்படி, 61 சதவிகிதத்தினர் பெரிய மீசை நாகரிகத்தையும், பெரிய மனித தோரணையும் காட்டுவதாகவும், 39 சதவிகிதத்தினர் முட்டாள்களும், கபடர்களும் வளர்ப்பதாகச் சொல்கிறார்கள்.

ஒரு மனிதன் 14 வயதிலிருந்து முகச்சவரம் செய்வதாயிருந்தால், அவனுடைய வாழ்நாளில் முகச்சவரம் செய்ய 5 மாதங்கள் செலவழிப்பதாகத் தெரிகிறது. சாதாரண மனிதனுக்கு முகத்தில் 5 மில்லியன் மயிர்க்கால்கள் இருப்பதாகவும் தெரிகிறது.

மீசை என்றாலே கட்டபொம்மன் மீசைதான் எல்லோருக்கும் நினைவு வரும். அடுத்து கமலஹாசனின் விருமாண்டி மீசையும், கிருதாவும், வடிவேலுவின் 23 ஆம் புலிகேசியின் மீசையும் நினைவு வரும்.

நானும் சிலகாலம் விருமாண்டி மீசை, கிருதாவைப் போல வளர்த்து புகைப்படமும் எடுத்துக் கொண்டேன். என் இளவயதில் என் நண்பரின் ஆலோசனைப்படி மீசையை இருபக்கமும் ஊசியாகத் தெரியும்படி ‘புரோமனேட்’ என்ற பசையைத் தடவியதுண்டு.

மீசையின் வகைகள் பற்றி இலக்கிய நயத்துடன் கூடிய கவிஞர் ஹரிஹர நாராயணனின் கவித்துவமான ஒப்பீடு மிக அருமை: இவரும் பெரிய மீசைக்குச் சொந்தக்காரர்.

அரும்பு மீசை - ஹைக்கூ கவிதை -பெரிய
குறும்பு மீசை - கறுப்புக் கட்டுரை - நன்கு
செழித்த மீசை கயல் விழி உலவும் சோலை
மழித்த மீசை கதிரவனில் பச்சையம்.....!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Nov-12, 9:56 pm)
பார்வை : 492

சிறந்த கட்டுரைகள்

மேலே