கையாலாகாத கடவுளாய்...! பொள்ளாச்சி அபி

தலைவாரிப் பூச்சூடி
பாடசாலைக்கு செல்ல முடியாப் பிள்ளை..
எழுதுகோலேந்தும் கையில்
கயவரின் நாக்கு போலொரு சாட்டை..

வரிவரியாய் எழுதுமிடமாய்
மாறிப்போன பிஞ்சு முதுகு..
இனிமைத் தமிழாய்
பேசும்வாயில் பிச்சைக்குரல்..

வறுமையின் வரிகளென
வாசிக்கும்போது கசியும் இரத்தத்துளிகள்..
சுதந்திரத்தின் கேவலத்தை
நிரூபிக்கும் உயிர் சாட்சிகள்..!

என் கடவுளேயென
ஒற்றை ரூபாய்க்காய் எம்மையழைத்து
நீளும் கைமுன் உள்ளம்குறுகுதடா..!

கடவுளின் படைப்பில்
பாவப்பலன் இதுவென்றால்
அவனைத் தூக்கில் போடும்வரை
அடித்துக் கொள்ளடா கண்மணி..!

பிள்ளை வயிற்றுப்பசியடங்க
வழிகாணா வல்லமைமிக்க
சுதந்திரநாட்டின் அதிகாரமையங்களின்
செவிட்டில் அறையும் வரை..!

உனது ஒவ்வொரு அடியும்
மனித நாகரீகத்தின் மீதுவிழும்
அடியாகவே இருக்கட்டும்
அடித்துக் கொள்ளடா கண்மணி..!

மெத்தப்படித்த மேதாவிகளாய்
உனக்கான.. கவியெழுதவும்
கண்ணீர் சிந்தவும் நாங்களிருக்கிறோம்
...கையாலாகாத கடவுள்களாய்..!

எழுதியவர் : பொள்ளாச்சி அபி -B +ve (17-Dec-12, 10:44 pm)
பார்வை : 5287

மேலே