இதுவா சம்பிரதாயம் -

ஆவணி மாதம் என்றாலே திருமணங்களுக்கு குறைவில்லை என்பர். நானும் ஒரு திருமண வீட்டிற்கு சென்றிருந்தேன். ஒவ்வொருவரும் தமக்கு தெரிந்தவர்களுடன் கதைத்த கொண்டிருந்தார்கள். ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்கு கூறுகிறா. நாங்கள் இவர்களுடன் பெரிதாய் கதைப்பதில்லை. இவர்கள் குடும்பத்துக்கும் எங்கள் குடும்பத்துக்கும் ஆகாது. காணி பிரச்சனையில் விட்டது தான். இவர்கள் முகத்திலேயே முழிக்ககூடாது என்று இருந்தனாங்கள். திருமணத்திற்கு சொல்லிப் போட்டார்கள் என்பதற்காக தான் வந்நனாங்கள். இவர்கள் மணமக்களை நல்ல மனதுடன் வாழ்த்த வந்தவர்களா? ஒரு நாளும் இல்லை. மங்கல வாத்தியங்கள் முழங்க தாலி கட்டப்பட்டது. அடுத்து அர்சதை போட்டு மணமக்களை ஆசீர்வதிப்பதற்கு பெரியோர்கள் தயாராகினார்கள். முதலாவதாக மணமகனின் பெற்றோரை அழைத்தார்கள். அவர்கள் வந்து ஆசீர்வதித்து விட்டு சென்றார்கள். அடுத்து மணமகளின் தாயார் வந்து அர்ச்சனை போட கையில் அரிசியினை எடுத்தபோது நீங்கள் போட வேண்டாம் இங்கே வாருங்கள் என்று தடுத்தது ஓர் குரல்.. அந்த தாயார் அரிசியை தட்டிலே போட்டு விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். ஏன் இந்த தாயாரை போடவிடாமல் தடுத்தனர் என கேட்டபோது அவர்கள் கூறிய காரணம் அந்த பெண் விதவை. ஓர் தாய் தன் பெண்ணுக்கு வாழ்த்து சொல்லி ஆசி வழங்குதல் தடுக்கப்பட்டது. எந்த ஒரு தாயும் தன் பிள்ளை நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடனே தான் அர்ச்சதை போடுவார் ஆசீர்வதிப்பார். இங்கு உரிமை இருந்தும் யாருக்கும் பிரயோசனம் இல்லாத சம்பிரதாயம் என்ற பெயரில் அந்த உரிமையை தடுக்கப்படுகிறது. தன் பிள்ளையை ஆசிர்வதிக்கவிடாமல் ஒதுக்கபடுகிறாள். அப்போது அந்த தாய் மனம் என்ன வேதனை அடைந்திருக்குமு் என்பதனை யாரும் சிந்திப்பதாய் இல்லை. விதவைகள் வாழ்த்த மாட்டார்கள் என்ற எண்ணம் எவ்வாறு உருவாகியது? யாரால் உருவாக்கபட்டது.? நாமே நமக்குள் சில மூடநம்பிக்கைகளை வைத்துக் கொண்டு ஏனையோரின் மனதையல்லவா புண்ணாக்குகிறோம். என்பதை யாரும் புரிந்து கொள்ளமாட்டார்களா? .விதவை பெண் ஆசீர்வதித்தால் அந்த மணமக்கள் நன்றாக வாழ மாட்டார்களா என்ன? நல்ல மனதுடன் யார் எதை செய்தாலும் அது நன்றாகவே நடக்கும் இதுவரை அந்த மணமகன் வீட்டினரை வஞ்சனை செய்து கொண்டிருந்நவர் அந்த மணமக்களை நல்ல மனதுடன் வாழ்த்துவாரா? ஒரு நாளும் இல்லை. இதனை யாரும் புரிந்து கொள்வதாய் இல்லை. இதனை கூற முற்பட்டால் யாரும் கேட்பதாயும் இல்லை. எல்லோரும் மனிதர்களே அவர்களுக்கும் நல்ல மனங்கள் உண்டு. அந்த மனங்களை நோகடிக்காதீர்கள். சம்பிராயம் என்ற போர்வையில் சிக்குண்டு மனித மனங்களை அல்லவா நோகடிக்கிறார்கள். bவாழ்க்கை என்பது வாழ்கிறவர்களை பொறுத்ததே தவிர வாழ்த்துகிறவர்களை பொறுத்தது அல்ல.

எழுதியவர் : சுபா (25-Dec-12, 1:37 pm)
சேர்த்தது : Subo Saba
பார்வை : 213

மேலே