எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மனிதன் வாழ்க்கைக்கு அவசியமான அறம், பொருள்,இன்பம் ஆகிய மூன்றையும் விளக்கும் திருக்குறளை உலகுக்கு தந்த மொழி தமிழ் மொழி.ஆம்!  தமிழருக்கு மட்டும் அல்ல; இந்தியருக்கு மட்டும் அல்ல; உலகுக்கே! ஏனெனில் திருக்குறளின் மகிமை உணரப் பட்டதால் அது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப் பட்டு சிலரால் வெளியிடப் படுகிறது. மற்ற மொழிகளிலும் மொழி பெயர்க்க முயற்சிகள் நடக்கிறது.

பக்தியை பரப்ப, முருகக் கடவுளை போற்றும் திருப்புகழ், சிவனைப் போற்றும் தேவாரம், திருவாசகம். திருமாலைப் போற்றும் திவ்வியப் பிரபந்தம் போன்ற நூல்களை வெளியிட்ட பெருமை உடையது தமிழ் மொழி!
சுதந்திர தாகத்தை அனல் பறக்க வெளிப்படுத்திய பாரதியார் பாடல்களைக் கொண்ட பெருமைஉடையது தமிழ்!
தேசிய ஒருமைப் பாட்டை " சிந்து நதியின் மிசை நிலவினிலே" என்ற  பாடல் மூலம் பாரதியார் பரப்ப முனைந்த பெருமையைக் கொண்டது தமிழ் மொழி! அந்தப் பாடலின் வரிகளை தன் மாநில மொழியில் மொழி பெயர்த்து படிக்கும் எந்த இந்தியனும் தேசிய ஒருமைப் பாட்டை நோக்கி விசையுடன் உந்தப் படுவான். அத்தனை உணர்ச்சிகரமான வரிகளைக் கொண்டது அந்தப் பாடல்.
இத்தகைய தமிழைப் போற்றி வணங்க வேண்டும்!  தமிழில் ஆங்கிலக் கலப்பு தவிர்க்க முடியாது எனினும் அளவுக்கு மீறி   கலந்து தமிழை சின்னாபின்னமாக்கி விடக் கூடாது என்பது என் கருத்து.

மேலும்

  தமிழ் மொழி பொருள் வன்மை மிக்கது. 

எல்லா வகை மனிதர்களையுமே ஆள்பவன் அதாவது அரசன் என்று உயர்த்திக் கூறும் சொல் ஒன்று தமிழில் உண்டு! அது என்ன சொல்?   
                                  அதுதான் ஆளி என்ற சொல்!  கீழே வரும் சொற்களை கவனிப்போம்!
      1.  விருந்தாளி = விருந்து + ஆளி; அதாவது விருந்தை ஆள்பவன். விருந்தோம்பல் செய்பவர் விருந்தாளி என அழைக்கப்படும் விருந்தினரை அரசனைப் போல் நினைத்து உபசரிக்க வேண்டும்.
      2. தொழிலாளி = தொழில் + ஆளி ; அதாவது தொழிலை ஆள்பவர். முதலாளி எவ்வளவுதான் வணிகத்தில்  பணம் போட்டாலும் வேலை செய்யும் தொழிலாளி நன்கு செய்யாவிடில் வணிகம் வளருமா? அவர் தொழிலாளியை மரியாதையுடன் கவனித்து அவருக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். அவர் தொழிலுக்கு  நியாயமான சம்பளத்தை கொடுக்க வேண்டும்;  ஏறும்  விலைவாசிக்கு தக்கபடியும் சம்பளம் ஏற்ற வேண்டும்.      3.முதலாளி = முதல் + ஆளி;   வியாபாரம் செய்பவர் முதல் போட்டதனால்தானே எல்லோருக்கும் வேலை கிடைத்தது? ஆகையால் ஊழியர்களும் தொழிலாளிகளும் முதலாளியின் வணிகம் நன்கு நடக்க அவர் மீது மரியாதையுடனும் நன்றியுடனும் நன்கு உழைக்க வேண்டும்.    4. கூட்டாளி =  கூட்டு+ஆளி;  ஒரு ஆள் தனியாக வணிகம் செய்ய முடியாவிடில் இன்னொருவரையும் முதல் கொடுக்க வைத்து அவர் உழைப்பையும் பயன்படுத்தி வணிகத்தை விரிவுபடுத்துகிறார். அந்த இன்னொருவர் கூட்டாளி ஆகிறார்; அதாவது சேர்ந்து ஆள்பவர் ஆகிறார்.அவரும் அரசர்தானே!    5.காவலாளி= காவல் +ஆளி; காவலின் முக்கியத்தை சொல்ல வேண்டியதில்லை. எனில் அவரும் அரசர்தானே!   இப்படி மனிதர் எல்லோரையும் அரசராக பாவிக்கிறது தமிழ் மொழி! யாரையும் அலட்சியம் செய்யக் கூடாது எனும் பண்பை போதிக்கும் மொழியாக தமிழ் மொழி இருக்கிறது.     

மேலும்

நன்றி நண்பர் முகமது சர்பான்! 19-Apr-2016 10:22 pm
அறியாத புதுமையான விடயம் ஒன்றை என்னமாய் தந்தமைக்கு நன்றி..வெற்றி பெற வாழ்த்துக்கள் 18-Apr-2016 11:29 pm

எழுத்து பொங்கல் போட்டி 2016 -----எண்ணம் 05 ----தலைப்பு -- பொங்கல் பாடல்கள்---அவை புதையல் பேழைகள் 

 
தமிழ் மண்ணின் பொங்கல் பாடல்கள் கேட்போரை  ஈர்க்கும் அழகைக் கொண்டவை என்று சொன்னால் போதாது; 

மண்ணின் மணம் கமழும் பாடல்கள் என்று பாராட்டினாலுமே போதாது.

அவற்றை புதையல் பேழை என்றே போற்ற வேண்டும். ஏனெனில்,அப்பாடல்களில் கலைத் தன்மையும் கல்வித் திறனும் வெளிப்படுகின்றன. காரணம், தமிழர்களின் கடந்த கால சரித்திரம் மிகப் பெரிது; தமிழர்களை சிறந்த கல்வி வம்சத்தினர் என்றும் சொல்லலாம். 

தமிழரின் பொங்கல் பாடல்கள்..... ஆகா! ..... எத்தனை கருக்களில் படைக்கப் பட்டிருக்கின்றன!
காதல்,நேசம்,வீரம், செல்வம், ஏழ்மை,புராணக் கதைகள், பொங்கல் விழாவோடு சம்பந்தப்பட்ட  வீரர்கள்,தலைவர்கள் பற்றிய தகவல்கள், கற்பனைக் கதைகள்;  இது  மட்டுமா? இன்னும் எத்தனை கருக்கள்? எதை சொல்லாமல் விட முடியும்? இன்று ஆங்கில மொழி வழி கல்வி கற்று கணணி மூலமாகவும், அலைபேசி இணையதளம் வழியாகவும் மேற்கத்திய இசைப் பாடல்களை மட்டுமே கேட்கும் வெளிநாடு வாழ் தமிழ் இளைஞர்களை எப்படி இந்த இனிய பாடல்களை கேட்க வைப்பது? வழி இருக்கிறது. அந்த இளைஞர்கள் வழியிலேயே சென்று அவர்களை இப்பாடல்களை ரசிக்க வைக்க யூட்யூப் போன்ற வலைத்தளங்களை உருவாக்குவதன் மூலம் அவர்களை ஈர்க்கலாம். அவர்களிடம் ஆர்வத்தை வெற்றிகரமாக ஊட்டி விட்டால், பின் அவர்கள் மூலமாகவே அவற்றை விருத்தியும் செய்து விடலாம்.அவர்கள் மூலமாகவே இப்பாடல்களின் புகழை பரப்பவும் செய்யலாம்; அவர்கள்தான் பலர் மென்பொருள் வல்லுனர்களாய் இருக்கிறார்களே! பின் நமக்கென்ன கவலை?

திக்கெட்டும் தமிழின் புகழ் பரப்ப வேண்டும். 
தமிழர் பண்டிகைகள் பற்றிய தகவல்களையும் பரப்ப வேண்டும்! 
இசை என்னும் அலங்கரிக்கப் பட்ட பல்லக்கில் அவை பயணிக்கட்டும்!



 


மேலும்

எழுத்து பொங்கல் போட்டி 2016 -----எண்ணம் 04 ----தலைப்பு --- பொங்கல் கொண்டாட்டத்துக்கு இயற்கை விவசாயத்தின் பங்கு.


பொங்கல் மக்கள் அனைவரும் கொண்டாடும் பண்டிகை என்றாலும், முக்கியமாக இது விவசாயிகளின் வெற்றிக்காக கொண்டாடும் பண்டிகை; ஆம்; விவசாயிகள் விளைச்சல் நன்றாக அமைந்ததற்காக ஆதவன்,இந்திரன்,கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கொண்டாடப்படுவது. விளைச்சல் நிறைந்து இருந்தால்தானே, அவர்களுக்கு வருமானம் நன்கு கிடைக்கும்?

 நெடுங்காலமாக பயன்படுத்திய இயற்கை உரங்களை நடுவில்  கைவிட்டு ரசாயன உரங்களையும் பூச்சிகொல்லி மருந்துகளையும்  பயன்படுத்தியதால், செலவுகள் அதிகம் ஆகி, பொருட்கள் தர உயர்வின்றியே விலைகள் கூடி  அவர்களின் வருவாய் மிகவும் குறைந்தது.

 மக்கள் ரசாயன உரம், பூச்சி கொல்லி மருந்துகளை பயன்படுத்தி விளையும் பொருட்களால் ஆரோக்கியத்துக்கு கெடுதல்கள் ஏற்படுகின்றன என உணர்ந்ததால் இயற்கை முறை விவசாயத்தை மீண்டும்  வரவேற்க ஆரம்பித்தனர். விவசாயிகளிடம் மீண்டும்  இயற்கை விவசாய முறையும் அதற்கான பயிற்சிகளும் அதிகரித்ததால், விளைபொருட்களின் தரம் உயர்ந்தது; அவற்றிற்கு மக்களின் வரவேற்பு அதிகமானது. அதனால் விவசாயிகள் விளைபொருட்களுக்கு நல்ல விலையையும் பெரும் லாபத்தையும் பெற்றனர். பழங்கள், காய்கறிகள்,காபி,தேயிலை, உணவு தானியங்கள் ஆக எல்லாவற்றையுமே இயற்கை விவசாய முறையில் விளைவிக்க முடிந்தது.அவை எல்லாம் தரமாகவும் விளைந்தன.விவசாயிகளுக்கு வருமானம் கூடி வாழ்க்கை தரமும் உயர்ந்தது. அதனால் மகிழ்ச்சியாக பொங்கல் கொண்டாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 

இன்னும் எல்லா விவசாயிகளின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்து விட்டதாக சொல்லி விட முடியாது. இன்னும் போதிய அளவு இயற்கை விவசாயம் பரவவில்லை. நெடுக பரவ வேண்டும் .அப்போதுதான் தரமான உணவுப் பொருட்களை மக்களும் உண்டு, விவசாயிகளுக்கு விளைபொருட்களுக்கு நல்ல விலையும் தர, வருமானம் கூடி, அவர்களின் வாழ்க்கை தரமும் உயரும் . விவசாயிகள் பொங்கலை முழு மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள். 

           விவசாயம்தான் பாரதத்தின் முதுகெலும்பு என்பதால் விவசாயிகளின் மகிழ்ச்சியில்தான் பாரத மக்களின் வாழ்வு அடங்கி உள்ளது. .
 





  


மேலும்

எழுத்து பொங்கல் போட்டி 2016--- எண்ணம் 03---- தலைப்பு    வெளிநாட்டு தமிழர்களும் பொங்கல் கொண்டாட்டமும் 


 கிட்டத்தட்ட எழுபது மில்லியன் தமிழர்கள் உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் பரவலாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் நம் பாரம்பரிய பண்டிகையான பொங்கலை மறக்கவில்லை என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் பாரத நாட்டிலுள்ள உறவினர்,நண்பர்களையோ,அல்லது கலாச்சாரம், பாரம்பரிய பண்டிகைகளையோ மறந்து விடவில்லை; அவர்களுக்கென்ன; வெளிநாட்டில் குடியேறி  நல்ல வேலைக்கு போய் கை நிறைய சம்பாதித்து சொத்து சேர்த்து நன்றாக இருக்கிறார்கள்; நம்மையும் நம் பண்டிகைகளையும் மறந்து விட்டார்கள் என்று நாம் எண்ணினால் அது சிறிதும் இரக்கம் அற்,ற செயல். அவர்கள் நம்மை சந்திக்க ஏங்குகிறார்கள். பொங்கல் எப்போது வருகிறது என்று காத்திருந்து மகிழ்ச்சியுடன் விமரிசையாகவே கொண்டாடுகிறார்கள். வாட்சப்,முகநூல் போன்றவற்றில் வரும்  வாழ்த்துக்கள்,வீடியோக்கள், எண்ணங்கள் போன்றவற்றை பாருங்கள் புரியும்.  இன்னொன்று இப்போதெல்லாம் வெளிநாட்டில் ஒரே ஊரிலோ பக்கத்து ஊர்களிலோ இருக்கும் தமிழர்கள் ஒன்று சேர்ந்து ஒரே இடத்தில் கூடி பொங்கல் கொண்டாடி அளவளாவி மகிழ்ச்சியாய் இருந்து விட்டு பின் அவரவர் இடத்துக்கு போனால் என்ன என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள்; ஏன்? சிறிய அளவில் செயல்படுத்தவும் ஆரம்பித்து  விட்டார்கள். இனி கொஞ்சம் கொஞ்சமாக விரிவடையலாம்.இது நம் ஊர்களில் நடைபெறும் காணும் பொங்கலை ஞாபகப் படுத்தவில்லையா? காணும் பொங்கலில் என்ன செய்கிறோம்?  உறவினர்களும் நண்பர்களும் கடற்கரை முன்போ, ஆற்றங்கரை முன்போ ஒன்று கூடி கொண்டாடுகிறோம்; வயதில் பெரியவர்களை வீடு தேடி சென்று மரியாதை செலுத்தி ஆசிகள் பெறுகிறோம்;  அதைத்தான் அவர்களும் செய்கிறார்கள்;
அவர்களை குறை கூறாமல் புரிந்து கொள்வோம்; பொங்கலன்று வாட்சப்ப் மூலமோ தொலைபேசி மூலமோ அழைத்து வாழ்த்துக்கள் கூறுவோம்; அன்பாக பேசுவோம். அம்மாக்கள் புதியதாய் திருமணமாகி  வெளிநாட்டிற்கு சென்றிருக்கும் தங்கள் பெண்களுக்கு பொங்கல் பண்டிகை வருமுன்னே,பொங்கல்   எப்படி தயாரிப்பது போன்ற விவரங்களை வாட்சப், கடிதம் என்று தன்னால் முடிந்த தகவல் தொடர்பு முறையில் கற்பிக்கலாம். அது அவர்களுக்கு அன்பான ஆதரவாக இருக்கும்.


மேலும்

எழுத்து பொங்கல் போட்டி 2016--- எண்ணம் 02  --- தலைப்பு -- போகிப் பண்டிகையும் இந்திரனுக்கு என்றும் நன்றி செய்தலும்    


போகிப் பண்டிகை விளைச்சலுக்கு மழைதந்து உதவிய இந்திரனுக்கு நன்றி சொல்லக் கொண்டாடுகிறோம்; இது அனைவரும் அறிந்த உண்மை; ஆனால் இதை மட்டும் செய்தால் இந்திரனுக்கு நாம் செய்யும் நன்றிக் கடன் பூர்த்தி  ஆகிவிடுமா?

ஆகாது. வருடம் முழுவதும் சில சங்கற்பங்களை ஏற்று நிறைவேற்றுவதன் மூலமே பூர்த்தி ஆகிறது!
என்ன சங்கற்பங்கள்?

1.மழை நீர் சேகரிப்பு செய்ய வேண்டும்.
2. நீர் நிலைகளிலும் நதிக் கரைகளிலும் பிளாஸ்டிக் குப்பைகளை போடக் கூடாது.
3. அந்தந்த செயலுக்கு தேவைப்படும் அளவுக்கு மேல் நீரை விரயம் செய்யக் கூடாது.
4.மணல் அரிப்பை தடுத்தல்; வேகமான காற்று, திடீரென  ஓடி வரக் கூடிய நீர் போன்ற காரணங்களால் மணல் அரிப்பு ஏற்படுகிறது. மணல் அரிப்பு வரக் கூடிய இடங்களில் அரிப்பு  அதிகமாகுமுன் மரம்.செடிகளை நட்டால் அரிப்பை தவிர்க்கலாம்.  இவ்வாறு மணல் காக்கப் படும்போது மணல் தான் சேமித்து வைக்கும் நீர் வீணாகாதபடி காக்கிறது.
   
இப்படி நீர் பாதுகாப்புக்கு பல வழிகள் இருக்கின்றன; அவற்றை அரசும் மக்களும் ஒத்துழைத்து சாதிக்க வேண்டும்;

அவ்வாறு செய்தால் இந்திரக் கடவுள் தான் மழை மூலம் மனித இனத்துக்கும் மற்ற உயிரினங்களுக்கும் அன்போடு வழங்கிய நீர் வீணாகாமல் பயன்படுகிறது என்று மகிழ்ச்சியடைவார்.

   

மேலும்

எழுத்து பொங்கல் போட்டி 2016--- எண்ணம் 01  --- தலைப்பு -- பொங்கல் கொண்டாட்டமும் வள்ளுவரும் 


பொங்கல் விழா நான்கு நாட்கள் கொண்டாடுகிறோம்; நான்காம் நாள்தான் திருவள்ளுவர் தினம் கொண்டாடுகிறோம்;இருந்தாலும் நான்கு நாட்களுமே நமக்கு நிச்சயமாக திருவள்ளுவர் நினைவு வரும் அல்லது அவசியம் நமக்கு அவர் நினைவு வரவேண்டும்: ஏன் தெரியுமா? இது சம்பந்தமாக என் கருத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்!
திருவள்ளுவர் என்ன சொன்னார்?நன்றி மறப்பது நன்றன்று; நன்றல்லது அன்றே மறப்பது நன்று:   என்றும்,எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு  என்றும்இன்னும் சில குறள்கள் மூலமாகவும் நன்றியாக இருப்பதன் அவசியத்தை உணர்த்தினார்.
சரி; பொங்கல் எதற்காக கொண்டாடுகிறோம்? முதல் நாள் போகி பண்டிகை விளைச்சலுக்கு உதவும் மழையை தந்த இந்திரனுக்கு நன்றி சொல்ல;இரண்டாம் நாள் பொங்கல் பண்டிகை விளைச்சலுக்கு உதவிய சூரிய கடவுளுக்கு நன்றி சொல்ல,மூன்றாம் நாள் மாட்டு பொங்கல் உழவில் உதவிய மாடுகளுக்கு நன்றி சொல்ல;மூன்று நாள் தொடர்ந்து 'நன்றி', 'நன்றி' என்று சொல்லிக் கொண்டே இருக்கிறோம்.நன்றி என்ற வார்த்தையை திரும்பத் திரும்ப  சொல்லும்போதே ஒவ்வொரு முறையும் திருவள்ளுவர் ஞாபகம் வர வேண்டாமா? அவசியம் வர வேண்டும்.  நன்றி என்ற இந்த முக்கியமான பண்பை நமக்கு கற்றுக் கொடுத்த திருவள்ளுவரை நினைக்க திருவள்ளுவர் தினம் வரும் வரை காத்திருக்க வேண்டுமா என்ன? நான்கு நாட்களும் அவரை நன்றியுடன் நினைப்போம்!    

மேலும்


பிரபலமான எண்ணங்கள்

மேலே