ராமநாதபுரம் அருகே உள்ள சின்ன அக்கிரமேசி கிராமத்தில் உள்ள விவசாயிகள், விவசாயத்தில் சத்தமில்லாமல் சாதனை படைத்து வருகின்றனர். வறட்சி மாவட்டம் என பெயரெடுத்த ராமநாதபுர மாவட்ட விவசாயிகள் ஏற்படுத்தும் விளைச்சல்கள் பெரும் வியப்பை உண்டாக்கியுள்ளது. செடி அவரை:- பொதுவாக காய்கறி வகைகளில் ஒன்றான கொடி அவரைக்காய் பற்றித்தான் பெரும்பாலும் பலரும் அறிந்திருப்போம். கொடி அவரை பயிரிட்டால் தனியாக அதற்கென்று பந்தல் போட வேண்டும், செலவு அதிகமாகும், ஊடு பயிர் எதுவும் விளைவிக்க முடியாது. இதற்கு மாற்றாக விவசாயிகளின் செலவை குறைக்கவும், காய்கறி வகைகளில் அவரை விளைச்சலை அதிகரிக்கவும் இந்த முறை பயன்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சின்ன அக்கிரமேசி கிராமத்தில் சுப்பிரமணி என்ற விவசாயியும் தங்களது விளைநிலங்களில் அரை ஏக்கர் மட்டும் பரிட்சாத்த முறையில் செடி அவரை பயிரிட்டுள்ளனர். செடி அவரை பயிரிட்டால் காய்ப்புத்திறன் அதிகமாக இருக்கும். அதிக உரம் போடத் தேவையில்லை. பூச்சியும் அதிகம் தாக்காது, நிலக்கடலை, தக்கைப்பூண்டு போன்று வேர்களின் மூலமாக தேவையான உரத்தை தானாகவே காற்று மற்றும் சூரிய ஒளி மூலம் எடுத்துக் கொள்ளும் குணமுடையது. பயிரிட்ட அறுபதாவது நாளிலேயே அவரைக்காய்கறிகளை பறிக்கத் தொடங்கி விடலாம். இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட தோட்டக்கல்வித்துறை உதவி இயக்குநர் இளங்கோவன் கூறியது: செடி அவரை பயிரிட்டால் கொடி அவரையைப் போன்று பந்தல் அமைக்கத் தேவையில்லை. கிரை வகைகளையும், கொடி வகைக் காய்கறிகளான பீர்க்கங்காய்,புடலங்காய், சுரைக்காய்,பாகற்காய் போன்றவற்றையும் கூட ஊடு பயிராக சேர்த்துப் பயிரிடலாம். ஆனால் கொடி அவரையில் ஊடுபயிர் எதுவும் விளைவிக்க வாய்ப்பில்லை. மாப்பிள்ளை சம்பா:- வறட்சியை தாங்கி விளையக்கூடிய “மாப்பிள்ளை சம்பா’ என்னும் நெல் ரகம், ஏழு அடி உயரத்தில் வளரக்கூடியது. அதிகளவு மாவு சத்து காணப்படுவதால், சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த ரக அரிசி மிகவும் பிடிக்கும். இந்த அரிசியில் சமைக்கப்படும் சாப்பாடு எளிதில் கெட்டுப்போகாது. ஏக்கருக்கு 40 முதல் 50 மூட்டைகள் வரை சாகுபடி கிடைக்கும். சிறப்பு வாய்ந்த இந்த நெல் ரகத்தை, ராமாநாதபுரம் அருகே சின்ன அக்கிரமேசி விவசாயி கிருஷ்ணன், சாகுபடி செய்து சாதித்து வருகிறார். அவர் கூறியதாவது: இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் கூறிய அறிவுரைபடி, நான்கு மாதங்களுக்கு முன்னர், ஒரு ஏக்கரில் “மாப்பிள்ளை சம்பா’ சாகுபடி செய்தேன். அவ்வப்போது, விட்டு விட்டு பெய்யும் மழையில், தற்போது ஆறரை அடி உயரம் வரை பயிர் வளர்ந்து, நெல் மணிகள் கொத்து… கொத்தாக தொங்குகின்றன. பூச்சி தாக்குதல் இல்லை. உரச் செலவும் கிடையாது. மற்ற பயிர்கள் எல்லாம், மழை இன்றி வாடும் நிலையில், இந்த ரகம் மட்டும் பச்சை பசேல் என, வளர்ந்துள்ளது. மகசூல் பருவத்தை எட்டியுள்ளதால், தைப்பொங்கலையொட்டி அறுவடை செய்யவுள்ளேன். பழமையான இந்த நெல் ரகத்திற்கு, தற்போதும் மவுசு இருப்பதால், இந்த ரகத்தை விரும்பி சாகுபடி செய்தேன், என்றார். சொட்டு நீர் பாசனம்:- இதே கிராமத்தில் பஞ்சவர்ணம் என்ற விவசாயி சொட்டு நீர் பாசானத்தை அந்த பகுதியில் முதன் முதலாக அறிமுகப்படுத்தி கரும்பு சாகுபடி செய்து வருகின்றார். சொட்டு நீர் பாசன முறையை ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி விவசாயம் செய்து வருகின்றார். இதற்கென தனியாக பம்பு செட்டுகள் அமைத்து அதில் சொட்டு நீர் பாசான கருவிகளை இணைத்து அதன் மூலம் செடிகளுக்கு தேவையான உரங்கள் மற்றும் தண்ணீர் அளிக்கபடுகின்றது. இதன் மூலம் விளைச்சல் மற்றும் மகசூல்கள் அதிகரிப்பதாகவும், பாசான நேரம் மிச்சப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அந்த கிராமத்தில் உள்ள விவசாயிகள் அதிக அளவில் கத்தரி மற்றும் வெண்டை பயிரிட்டு விற்பனை செய்து வருகின்றனர். விவசாயத்தில் சத்தமில்லாம் சாதித்து வருகின்றனர் இந்த கிராமத்து விவசாயிகள். விவசாயங்கள் அழிந்து வரும் இந்த கால கட்டங்களில் இது போன்ற கிராமப்புறங்களில் மட்டுமே இன்னும் விவசாயத்தை மதித்து அதை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல நினைக்கின்றனர். இதற்கு அரசு முழு ஒத்துழைப்பு கொடுத்தால், வரும் நாட்களில் விவசாயத்தை மறுபடுயும் தலை தூக்க வைத்துவிடலாம். இந்த இணையத்தில் வரும் தகவல்கள் குறித்த உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்களேன். இந்த இணையம் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்களேன். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தை பின்தொடருங்களேன்.


வழி : அ வேளாங்கண்ணி கருத்துகள் : 0 பார்வைகள் : 201
7
Close (X)




புதிதாக இணைந்தவர்

மேலே