எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கலியுகக் கர்ணன் நவாப் சி அப்துல் ஹகீம் By...

கலியுகக் கர்ணன் நவாப் சி அப்துல் ஹகீம்
By நாகூர் ரூமி


செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்று சொல்லக்கேள்விபட்டிருக்கிறோம். அது எப்படி ஒருவர் செத்தபிறகும் கொடுப்பார்? கீழக்கரையைச் சேர்ந்த வள்ளல் சீதக்காதி இறந்த பிறகு ஒரு ஏழை தன் தேவைகளைச் சொல்லி அவர் மண்ணறைக்கு அருகில் நின்று புலம்பினாராம். உடனே மண்ணறைக்குள்ளிருந்து வெளியே வந்த கையில் தங்க மோதிரம்! அன்றிலிருந்து ’செத்தும் கொடுத்தார் சீதக்காதி’ என்று சொல்வது பிரபலமானதாம்!

ஒருவர் செத்தபிறகும் சொத்துக்காக உரிமை கொண்டாட வழக்குகள் நடத்துவதுதான் நம் வழக்கு! செத்தும் கொடுக்காமல் போனவர்கள்தான் அதிகம்! ஆனால் சீதக்காதியின் கதை அப்படிப்பட்டதல்ல. செத்துப்போன பிறகு போய்க்கேட்டிருந்தாலும் அவர் கொடுத்திருப்பார் என்ற கருத்தைச் சொல்வதாக இந்த ’அற்புத யதார்த்த’க் கதையை எடுத்துக்கொள்ளலாம்.

வாழும் நாட்களில் பிறகுக்கு வழங்கிக்கொண்டே இருப்பவர்கள் இறந்தபிறகும் வாழ்ந்துகொண்டே இருப்பார்கள் என்பதைத்தான் சீதக்காதியின் கதை சொல்கிறது! ’பிறருக்கு’ என்றால் பெற்றோருக்கு, மனைவி, கணவருக்கு, குழந்தைகளுக்கு, சகோதர, சகோதரிகளுக்கு, நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு என்று அர்த்தமல்ல. அதைத்தான் ஊறுகாய் மாதிரி தொட்டுக்கொள்ளும் அளவுக்கு மனிதநேயமுள்ள அனைவரும் செய்வார்களே! வழங்குவது என்ற பிரிவில் இதெல்லாம் வராது.

வழங்குவது என்றால் வள்ளல்தன்மையுடன், கணக்குப் பார்க்காமல் முகம்தெரியாத மனிதர்களுக்கு அள்ளியள்ளி வழங்குவது. ஒருவரின் மரணத்துக்குப் பிறகும் ஒருவருக்கு உதவும் மூன்று விஷயங்களில் தர்மம் ஒன்று என்று நபிகள் நாயகம் சொன்னார்கள். அந்த மாதிரியான தர்மம். கர்ணபரம்பரையாக – பார்த்தீர்களா மறுபடியும் கர்ணன்! – வழங்கிவரும் புரிதல் இதுதான். (கர்ணனுக்கான புகழ் அர்ஜுனனுக்கு இணையான வில்வித்தைக்காரன் என்பதால் வருவதல்ல. யாரோடும் ஒப்பிடமுடியாத வள்ளல்தன்மை கொண்டவன் என்பதால் வந்த புகழ்தான் அவனை இன்னும் உயிர் வாழவைத்துக்கொண்டிருக்கிறது). அப்படிப்பட்ட கர்ணன்கள், சீதக்காதிகள் நம் காலத்திலும் உண்டு. அவர்களில் ஒருவர்தான் நவாப் சி அப்துல் ஹகீம்.

தமிழ் வேர்

வடஆற்காடு மாவட்டம் கீழ்விசாரம் என்ற ஊரில் கிபி 1863ல் இவர் பிறந்தார். இவருடைய மூதாதையர்கள் தஞ்சை மாவட்டம் அய்யம் பேட்டையைச் சேர்ந்தவர்கள் என்று இஸ்லாமிய கலைக்களஞ்சியமும் வள்ளல் ஹகீம் பற்றிய வரலாற்று நூல்களும் கூறுகின்றன. இதில் ஓராச்சரியம் ஒளிந்திருந்தது! என்ன ஆச்சரியம்? எந்த ஊரில் பிறந்தால் என்ன? யாராவது எந்த ஊரிலாவது பிறக்கத்தானே வேண்டும்?

அதெல்லாம் சரிதான். ஆனால் வட ஆற்காடு மாவட்ட முஸ்லிம்கள் உர்து பேசுபவர்கள். தஞ்சை மாவட்ட முஸ்லிம்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். அதனால் என்ன என்கிறீர்களா? அதனால் ஒன்றுமில்லை. மொழியால் யாருக்கும் உயர்வு தாழ்வு கிடையாது. ஆனால் ரொம்ப காலமாக எனக்கிருந்த ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் விதத்தில் இந்த தகவல் உள்ளது. அது என்ன?

ஆம்பூர் கல்லூரி ஒன்றில்தான் கடந்த முப்பது ஆண்டுகளாக பேராசிரியராக பணியாற்றி வருகிறேன். வடஆற்காடு முஸ்லிம்களின் தாய்மொழி உர்து. ஆனால் பெரும்பாலானவர்களுக்கு உர்து பேசமட்டும்தான் தெரியும். எழுத வராது! அனைவராலும் தம் தாய்மொழியை ஏன் எழுத முடியவில்லை என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. ஆனால் அப்துல் ஹகீம் பற்றிய தகவலில் அதற்கான பதில் இருந்தது! அது என்ன?

இந்த மாவட்டத்தில் வாழும் பெரும்பாலான முஸ்லிம்களின் முன்னோர்கள் தமிழர்களாக இருந்திருக்கிறார்கள். பிழைப்புக்காக அவர்கள் இடம்பெயர்ந்து வந்து அங்கே குடியேறியிருக்கிறார்கள். எங்கள் கல்லூரியின் பழைய முதல்வர் டி.நிசார்அஹ்மது ஒரு தகவலை என்னிடம் சொன்னார். ”ச்சியா” என்பது அவரது குடும்பப் பெயர். (இந்த மாவட்டத்தில் குடும்பப்பெயர்கள் முக்கியம்). தம் முன்னோர்கள் சீர்காழியிலிருந்து வந்தவர்கள்; சீர்காழி என்பதுதான் ‘சியாழி’ என்று மாறி, பின் அதுவும் சுருங்கி ‘சியா’ ஆகிவிட்டது என்று அவர் சொன்னார்!

ஆம்பூர் பகுதியில் வாழும் பெரிய பெரிய குடும்பங்களின் பெயர்களைக் கவனித்தாலும் இந்த உண்மை புரியும். “ஆனைக்கார்”, “மெத்தக்கார்”, ”நாட்டாம்கார்”, “கந்திரிக்கார்”, “அப்பாபிள்ளை”. இதெல்லாம் சில பிரபலமான குடும்பங்களின் பெயர்கள். ஆனைக்காரர், மெத்தை வீட்டுக்காரர், நாட்டாமைக்காரர், கந்திரிக்காரர் என்ற சொற்கள்தான் நாளடைவில் கொஞ்சம் வலிப்பு வந்தமாதிரி சுருங்கி ’கார்’ ஆகிவிட்டது! ’அப்பாபிள்ளை’ என்ற தூயதமிழ்ச்சொல்லுக்கு விளக்கம் தேவையே இல்லை. ஆனால் அதுஒரு தூய தமிழ்ச்சொல் என்று அவர்களுக்குத் தெரியாமல் போனதுதான் சோகம்! (நாகூர், நாகை, காரைக்கால் பக்கம் தாத்தாவை ‘அப்பா’ என்றும் தந்தையை ‘வாப்பா’ என்றும் சொல்வோம்). வேரில் தமிழும் கிளைகளில் உர்துவும் இருப்பதால்தான் ‘பேஸ்மெண்ட் ஸ்ட்ராங்’ ஆகவும் ‘பில்டிங் வீக்’ ஆகவும் இருக்கிறது போலும்! நவாப் சி அப்துல் ஹகீமின் குடும்பப்பெயர் “சேப்பிள்ளை” என்பதாகும். “சி” என்ற எழுத்தின் விரிவு அதுதான்!

விஷாரத்தில் பள்ளி இல்லாததால் அப்துல் ஹகீம் ஆற்காடு வரை நடந்துபோய் மூன்றாம் வகுப்பு படித்தார். கிட்டத்தட்ட பத்துகிலோமீட்டர் தூரம்! கல்விமீது அவருக்கும் அவரது பெற்றோருக்கும் இருந்த காதலை இது காட்டுகிறது.

வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்ட கவலையோடு ஊர் திரும்பிய தந்தையாரின் உயிரும் பிரிந்தது. ஆனால் தன் மகனுக்கு வசிய்யத் – இறுதி விருப்பம் – போல ஒன்றை அவர் சொல்லிச் சென்றார். தான் பம்பாயிலிருந்து சென்னை வந்தபோது அங்கிருந்த ராமசாமி முதலியார் விடுதியில் தமிழ்நாட்டு முஸ்லிம்கள் நாயைவிடக் கேவலமாக நடத்தப்படுவதாகவும், அது தன்னை மிகவும் வாட்டியது என்றும், வருங்காலத்தில் செல்வம் கிடைக்குமாயின், முஸ்லிம்கள் மரியாதையோடும் கண்ணியத்தோடும் சென்னை வந்து தங்கிச் செல்வதற்கு ஒரு விடுதி கட்டிக் கொடுக்கவேண்டும் என்று தன் மகனிடம் கூறி அவர் உயிர்விட்டது அந்த தொண்டுஉள்ளம். இந்த இறுதி விருப்பத்தை ஹகீமின் தந்தையார் அவரிடம் தெரிவித்து இறந்தபோது ஹகீமின் வயது பதினெட்டுதான்.

தன் சிற்றப்பா அப்துர்ரஜ்ஜாக்குடன் இணைந்து ஹகீம் வியாபாரம் செய்தார். ஹகீமின் திறமையைக் கண்டு தன் மகள் குல்ஸும் பீவியை ஹகீமுக்குத் திருமணம் செய்து வைத்தார் அப்துர் ரஜ்ஜாக். மாமனாரின் மறைவுக்குப் பிறகு, அவரது மகனுடன் சேர்ந்து வியாபாரம் செய்தார் ஹகீம். அவர் செய்த தோல் வாணிபம் அவருக்கு விரைவிலேயே செல்வத்தையும் செல்வாக்கையும் கொடுத்தது. அந்தப் பகுதிக்கே ராஜா மாதிரி ஆகிவிட்டார் அப்துல்ஹகீம். இவரது செல்வம் வளரவளர இவரது தர்மச் செயல்பாடுகளும் வளர்ந்தன.

செல்வம் பெற்ற எல்லாருக்கும் தர்ம சிந்தை இருக்குமா என்றால் அது கேள்விக்குறிதான். கொடுக்கக்கொடுக்கக் குறையும் என்பதுதான் பெரும்பாலான மனிதர்களுடைய தர்க்கமாக இருக்கிறது. ஆனால் சீதக்காதி, அப்துல் ஹகீம், பில்கேட்ஸ், வாரன்பஃபட் போன்றவர்கள்தான் அதுதவறு என்பதை தம் வாழ்க்கையால் நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள்.

தந்தையின் இறுதி விருப்பத்தை நிறைவேற்ற, சென்னையில் இருந்த ராமசாமி முதலியார் விடுதிக்கு அருகில் இருந்த காலி இடத்தை ஹகீம் விலை பேசினார். அவரது நோக்கத்தை அறிந்துகொண்ட சிலர் இடத்தின் விலையை ஏலத்தில் ஏற்றிவிட்டனர். கடைசியில் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு அதைவாங்கிய ஹகீம் மேலும் 50,000 செலவிட்டு அதில் தங்குவதற்கு மாடிக் கட்டிடமும் தொழுவதற்கு பள்ளியும் கட்டி அதைத் தன் தந்தையின் பெயரால் 1921-ம் ஆண்டு வக்ஃபு செய்தார். இன்றும் சென்னையில் செண்ட்ரலுக்கு எதிர்ப்பக்கத் தெருவில் இருக்கும் சித்தீக் ஸராய் அதுதான். அதன் சேவை புகழுக்குரியது. இங்கு முஸ்லிம்கள் இலவசமாக மூன்று நாட்கள் தங்கலாம். அதற்கு மேல் கொஞ்சம் பணம் கொடுத்தால் தங்கிக் கொள்ளலாம்.

ஏதோ முஸ்லிம்களுக்கு மட்டும்தான் இவர் கொடுத்தார் என்று நினைக்கவேண்டாம். அப்படிப்பட்ட குறுகிய மனம் வள்ளல்கள் எவருக்கும் இருந்ததில்லை. ஜாதி, மத பேதமெல்லாம் பாராமல் எல்லா மனிதர்களுக்கும் வாரிவாரி வழங்கினார் அப்துல் ஹகீம்.

கல்விக்காக இவர் செய்த சேவையும் தர்மமும் காலத்தால் அழியாதவை. இப்படிக்கூட மனிதர்கள் இருந்தார்களா என்று ஆச்சரியப்படவைப்பவை. சென்னை அங்கப்பநாயக்கன் தெருவில் ஒரு இந்துப் பெண்மணி வாடகை இடத்தில் ஒரு பள்ளிக்கூடம் நடத்தி வந்தார். தொடர்ந்து அங்கே நடத்த முடியாத சூழ்நிலை வந்தபோது, அப்பெண்மணி அப்துல் ஹகீமிடம் வந்து முறையிட்டார். உடனே அதேதெருவில் கடைவைத்து நடத்திக் கொண்டிருந்த தன் மகனை, கடையைக் காலிசெய்து அப்பெண்மணி பள்ளிக்கூடம் நடத்துவதற்காகக் கொடுக்க உத்தரவிட்டார் ஹகீம்! தந்தையின் அன்புக் கட்டளைக்கு மகனும் அடிபணிந்தார்! அது கண்டு வியந்த இந்து மக்கள், அப்பள்ளிக்கு அவர்களே ’சி.அப்துல் ஹகீம் இந்து முஸ்லிம் பள்ளி’ என்று பெயரிட்டு மகிழ்ந்தனர். இன்றும் சென்னை அங்கப்பநாயக்கன் தெருவில் அந்தப்பள்ளி இயங்கி வருகிறது.
undefined

வரலாற்றில் நெகிழ்ச்சியூட்டும் இத்தகைய கணங்கள் அரிதானவை. வள்ளல் தன்மைக்கு ஜாதி மதமெல்லாம் தெரியாது. ஆம்பூரில் உள்ள இந்து மேல்நிலைப்பள்ளியின் மைய வளாகத்தை அப்துல்ஹகீம்தான் கட்டிக் கொடுத்தார். அப்பள்ளியின் கல்வெட்டு இன்றும் அதைப் பறைசாற்றிக் கொண்டுள்ளது. அந்தக் காலத்திலேயே ஏழை மாணவர்கள் 200 பேர் இவருடைய தர்மத்தில் படித்தார்கள்.

யாகூப் ஹஸன் என்ற சுதந்திரப்போராட்ட வீரர் ஹகீம் கம்பனியில் வேலை பார்த்து வந்தார். ஆனால் அவர் சிறைசென்ற போதெல்லாம் முழு சம்பளத்தையும் அவரது வீட்டுக்கு ஹகீம் கொடுத்துவந்தார்.

அந்தக் காலத்தில் காங்கிரஸில் நலன் விரும்பியாகவும் ஹகீம் இருந்திருக்கிறார். 1933ம் ஆண்டு காங்கிரஸ் மகாசபைக்காக ராஜாஜி நிதி கேட்டபோது ஒரு பெரும் தொகையைக் கொடுத்தார். காக்கிநாடாவில் நேருவின் தலைமையில் நடந்த மாநாட்டுக்கு வந்திருந்தவர்களுக்கான உணவு, தங்குமிடம் தொடர்பான அனைத்து செலவுகளையும் அப்துல்ஹகீமே ஏற்றுக்கொண்டார். தம் ஊரிலிருந்து சிறப்பான சமையல்காரர்களை வரவழைத்து அனைவருக்கும் விருந்தளித்தார். கிலாஃபத் இயக்கக் குழுவுக்கும் நிதியுதவி அளித்துள்ளார். மகாத்மா காந்தி வேலூர் வந்தபோது அவர் கேட்டுக்கொண்டபடி நிதி கொடுத்தார். பணமாக மட்டும் அப்துல்ஹகீம் கொடுத்த நன்கொடைகள் 70 லட்சத்திற்கும் மேல்! (இன்றையை மதிப்பில் பல கோடி ரூபாய்கள்).

வேலூரில் ஐடா ஸ்கட்டர் நினைவு மருத்துவமனையில் இரண்டு வார்டுகளைக் கட்டிக்கொடுத்தார். ஹகீம் வார்டுகள் என்ற பெயரில் அவை இன்றும் அவர் நினைவைப் பறைசாற்றிக்கொண்டுள்ளன.

அவர் செய்த சில தர்ம காரியங்கள்:

அகில இந்திய காங்கிரஸுக்கு நிறைய பண உதவி

திருவண்ணாமலை கோவில் தர்மஸ்தான் நிர்வாகிகளின் கோரிக்கையின் பேரில் கோவிலுக்கு ஒரு யானை கட்டாக்கில் உள்ள தேசியக் கல்லூரிக்கு 25000 ரூபாய்

பெங்களூர் அநாதை விடுதிக்கும் உயர் நிலைப்பள்ளிக்கும் நிதி

அதன் சார்மினார் மஸ்ஜிதுக்கு நிதி

பல சிற்றூர்களிலும் பள்ளிகள்

மேல்விஷாரம் உயர் நிலைப்பள்ளிக்கு கட்டிடம்

அதன் வருமானத்திற்காக சில கட்டிடங்கள்

வேலூர் பாகியாதுஸ் ஸாலிஹாத் மார்க்கக் கல்லூரிக்கு ஒரு லட்ச ரூபாய்

உம்ராபாத் மத்ரஸா தாருல் உலூமுக்கு 50,000 ரூபாய்

வாணியம்பாடி முஸ்லிம்சங்க வருமானத்துக்கு சென்னை பெரியமேட்டில் ஆறு கிடங்குகள்

ஆம்பூர் மஸ்ஹருல் உலூம் உயர்நிலைப்பள்ளிக்காக ஒரு மார்க்கட் வாங்கி அப்துல் ஹகீம் மார்க்கட் என்ற பெயரில் வக்ஃபு செய்தார்.

திருவல்லிக்கேணி முஸ்லிம் உயர் நிலைப்பள்ளியின் கட்டிடம்

சேலத்தில் ஒரு பள்ளிவாசல்

குடியாத்தத்தில் ஒரு பெரிய பள்ளிவாசல்

மைசூர் பெரிய பஜாரில் ஜாமிஆ மஸ்ஜித்

ஆற்காடு அப்துல்ஹகீம் போர்டு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அரைச்சம்பள உதவி

கொள்ளை சந்தோஷம்

இவர் சென்னையில் இருந்து விஷாரம் வந்துவிட்டாரென்றால் சிறுவர் சிறுமியரெல்லாம் இவரைச் சந்தோஷமாக சுற்றிக்கொள்வர். கரும்பு வண்டியோ, பழக்கூடையோ போனால், இவர் உடனே “கொள்ளை” என்று சொல்வார். உடனே குழந்தைகள் அந்தக் கரும்பு வண்டியையோ பழக்கூடையையோ ’அபேஸ்’ செய்துகொண்டு போய்விடுவர். ஆனால் அப்துல்ஹகீம் அதற்கான முழுப்பணத்துக்கும் மேல் இரண்டு மூன்று மடங்கு பொருளுக்கு உரியவர்களுக்குக் கொடுத்து அனுப்புவார்.

இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அரசு இவருக்கு ’சர்’ பட்டத்துக்கு இணையான ’நவாப்’ பட்டம் கொடுத்து கௌரவித்தது. ஹஜ்ஜுக்குச் செல்வதற்காக சென்னை சென்ற இவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டு 1938-ம் ஆண்டு இவர் காலமானார். அவர் இறந்த பிறகு ”கலியுகக் கர்ணன் மறைந்துவிட்டார்” என்று ராஜாஜியும், ”தர்மம் குடை சாய்ந்தது” என்று சுதேசமித்திரன் தலையங்கமும், ”தென்னிந்தியாவின் வணிக மன்னர் காலமானார்” என்று இந்து நாளிதழும் இரங்கல் செய்திகள் வெளியிட்டன.

ஜாதி மத பேதம் பார்க்காமல், தர்மம் செய்வதில், கொடுப்பதில் இன்பம் கண்ட இந்தப் பெருமகன் இம்மையில் மறுமைக்காண காரியங்களை சிறப்பாகச் செய்த வள்ளல் பெருமக்களில் நினைவு கூறத்தக்கவர். நவாப் சி. அப்துல் ஹகீம் அவர்களைப் பற்றி இளைய சமுதாயம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஒற்றுமையான, வளமான இந்தியாவை உருவாக்க இது உதவும்.

- நன்றி தினமணி

பதிவு : நா கூர் கவி
நாள் : 27-May-15, 9:27 pm

மேலே