எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

------------------- பொங்கல் கும்மி பாடல் ------------------ கும்மியடி பெண்ணே...

 -------------------பொங்கல் கும்மி பாடல்------------------

கும்மியடி பெண்ணே கும்மியடி
 நம் குலம் விளங்க கும்மியடி 
சொல்லியடி பெண்ணே சொல்லியடி
தமிழ் பாரம்பரியத்த சொல்லியடி…! 

காதலும் வீரமும் சேர்ந்துவரும் 
நம் பொங்கலச் சொல்லி கும்மியடி
அத்தனை தமிழரின் உவகையடி
அதன் பெருமையச் சொல்லி கும்மியடி…! 

மஞ்சள் இலைதான் பெண்ணினமாய் 
அதை தாங்கும் தண்டுகள் ஆணினமாய் 
இல்லற வாழ்க்கை தான் ஜொலித்தால் 
அவை கிழங்கென்னும் மழலைகள் சொல்லியடி…! 

கரும்பு என்பது நம் குடும்பம்
அது இன்னும் ருசிக்கணும் கும்மியடி 
கூட்டுக் குடும்பமே நம் பெருமை
அதை மீட்டெடுப்போமென்று கும்மியடி…! 

மாடும் நிலமும் பயிரினமும் 
மொத்த கால்நடை உயிர்நாம் கும்மியடி 
பொங்கலும் திங்களும் நமதென்று 
இந்த தினத்திலே சொல்லி கும்மியடி…!    

 மாவால்  கோலத்தை போட்டிடுவோம்
 சின்ன எறும்புகள் வந்துண்ண கும்மியடி 
வெளியே தானியம் இறைத்திடுவோம்
அதில் குருவிகள் பசியாற கும்மியடி…!

புலியை முறத்தால் துரத்திவிட்டோம்
இனி பசியையும் துரத்திட கும்மியடி
கிராமிய உணவை புரிந்துகொள்வோம் 
இனி அதுவே நிரந்தரம் கும்மியடி…! 

 நீர் வளம் பெருகணும் கும்மியடி
அதில் நிலமும் குளிரணும் கும்மியடி
பசியெனும் சொல்லிங்கு மறைந்திடவே 
பரவட்டும் உழவொளி கும்மியடி…!

(பொங்கல் கும்மி பாடல்)

நாள் : 16-Jan-16, 8:53 am

மேலே