எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வான்கலந்த மாணிக்கவாசகம் 17: பொன்னே திகழும் திருமேனி எந்தாய்...

வான்கலந்த மாணிக்கவாசகம் 17: பொன்னே திகழும் திருமேனி எந்தாய்



பேராசிரியர் ந. கிருஷ்ணன் வான்கலந்த மாணிக்கவாசகம் சிவபெருமானைத் ‘தலைவா’ என்றழைத்தார் மணிவாசகர். வருங்காலத்தில் யாரும் யாரையும் ‘தலைவா’ என்றழைக்கும் அவலங்கள் நடக்கும் என்பதை மணிவாசகர் உணர்ந்திருந்தாரோ என்னவோ? இறைவனை வெறுமனே தலைவா என்று அழைக்காமல், “தன்மை பிறரால் அறியாத தலைவா!” என்னும் அடைமொழியுடன் ஒரு அற்புதமான திருவாசகம் அருளினார். இத்திருவாசகத்தில் உலகத் தலைவர்களுக்கும், இறைவனாகிய தலைவனுக்குமான வேறுபாடுகளை வெகுஅழகாக விளக்கியுள்ளார்.

உலகத் தலைவரின் தன்மை

உலகத் தலைவரின் தன்மை முழுவதும் அவர் தொண்டர்களுக்கும், மக்களுக்கும் வெளிப்படையாகத் தெரியும். விரும்பி உண்ணும் உணவு, விருப்பமான உடை, நிறங்கள், எந்த நேரம் எங்கே இருப்பார், யார் பரிந்துரை செய்தால் அவரிடம் காரியம் சாதிக்க முடியும் போன்ற அத்தலைவரின் குணம், செயல்கள் அனைத்தும் அவரின் கடைநிலைத் தொண்டனுக்கும் தெரியும். ஆனால் அத்தலைவருக்கோ, தன்னுடைய மக்கள், தொண்டர்களைப் பற்றியும், அவர்தம் குணம், செயல்கள் பற்றியும் எதுவும் தெரியாது.

இறைவனாம் தலைவனின் தன்மை

இறைவனின் தொண்டர்களுக்கோ, தம் தலைவன் எப்படி இருப்பான்; எப்போது தோன்றுவான்; எங்ஙனம் அருள்வான்; எங்கு இருக்கிறான் போன்ற தன்மைகள், சிறப்பு விவரங்கள் எதுவும் தெரியாது. ஆனால், இறைவனாகிய தலைவனோ, தன் தொண்டர்கள், மக்கள் அனைவரின் குணங்கள், செயல்கள் உள்ளிட்ட அனைத்துத் தன்மைகளையும், விவரங்களையும் நன்றாக முழுவதும் அறிவான்; ‘அவனன்றி ஓர் அணுவும் அசையாது’ என்பதற்கேற்ப ஒவ்வொரு உயிரின் உள்நின்று உணர்பவன் இறைவன். இந்த நுட்பத்தையே ‘தன்மை பிறரால் அறியாத தலைவா’ என்று இறைவனுக்குச் சிறப்பு இலக்கணமாகக் குறிப்பிட்டார் மணிவாசகர்.

ஆட்கொண்டபின் புறமே போகவிடுவாயோ?

தம்மை ஆட்கொண்ட தலைவனாம் இறைவனுக்கு ஏற்ற அடியவருக்கு வேண்டிய பண்புகள் தம்மிடம் சிறிதும் இல்லை என்று வருந்தினார் மணிவாசகர்; பிறப்பினால் இழிந்த நாய், நன்றி என்னும் குணத்தால் உயர்ந்தது. தம்மை ஆட்கொண்ட இறைவனுக்கு நன்றியுடையவனாக இருக்கும் பண்புகூட இல்லாத (புன்மை) சிறுமையுடையவன் என்று உணர்த்தவே “பொல்லா நாயான புன்மையேனை” என்ற சொற்களால் குறிப்பிட்டார்.

“எனக்குத் தகுதி இல்லை என்பதால் ஆட்கொள்ளாமல் விட்டிருந்தால் ஒரு கேள்வியும் இல்லை! தகுதி இல்லாவிட்டாலும், உன்னுடைய பேரருள் காரணமாக என்னை ஆட்கொண்ட பெருமை உடையவன் நீ! அந்தப் பெருமைக்கு இழுக்கு வராமல் என்னைப் புறம் போக விட மாட்டாய்” என்பதைக் குறிப்பால் சொல்லவே “ஐயா! ஆண்டு, புறமே போக விடுவாயோ?” என்றார். “அவ்வாறு நீ என்னைக் கைவிடுவாயானால்,எனக்கு வேறு கதி இல்லை! பொன்மயமான திருமேனியை உடைய என் தந்தையே! எங்கே நான் அடைக்கலம் புகுவேன்?”, என்று இறைவனிடம் உருகி முறையிடுகின்றார் பெருமான். இறைவனை உருக்கிய இத்திருவாசகத் தேன் நம் கண்களைக் குளமாக்குகின்றது.

தன்மை பிறரால் அறியாத தலைவா! பொல்லா நாயான

புன்மையேனை ஆண்டு, ஐயா! புறமே போக விடுவாயோ?

என்னை நோக்குவார் யாரே? என் நான் செய்கேன்! எம்பெருமான்!

பொன்னே திகழும் திருமேனி எந்தாய்! எங்குப் புகுவேனே!

– திருவாசகம்:திருச்சதகம்:59.

தலைவனாகும் தகுதி

பிற உயிர்களுக்கு ஏற்படும் துன்பங்களைத் தனக்கு நேர்ந்த துன்பங்களாக எண்ணி, அவ்வுயிர்களைக் காப்பாற்றா விட்டால் ஒருவன் தான் பெற்றுள்ள அறிவினால் ஆகக்கூடிய பயன் ஒன்றுமில்லை என்பது வள்ளுவம். நான், எனது என்ற வட்டத்தை விட்டு வெளியே வந்து, பாதிக்கப்பட்டோர் யாருக்காகவும், அந்தப் பாதிப்பு தனக்கே ஏற்பட்டதென்று வருந்தி அழுகின்றவனே மனிதன்; அவனே தலைவனாவதற்கும் தகுதியானவன் என்று கவியரசு கண்ணதாசனின் ஒரு கவிதை அழகாக வரையறுக்கின்றது:

மனிதன் என்பவன் தெய்வமாகலாம் ...

யாருக்கென்று அழுதபோதும் தலைவனாகலாம்!

வையத்துள் சகமனிதர்களுக்காகத் தொண்டுசெய்து வாழ்வாங்கு வாழ்ந்தவனே வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுகிறான் என்பது வள்ளுவர் கருத்து.

பொய்த் தெய்வங்கள்

தகுதியற்றவர்களைத் தெய்வமாகவும், தலைவராகவும் ஏற்றுக்கொள்ளும் அறியாமைப் போக்கைக் கண்டு மனம் பதைத்து நொந்த மணிவாசகர், வண்டினத்தின் அரசனான அரச வண்டைத் தன் தலைவனிடம் தூது விடுகின்றார்: “அரச வண்டே! ‘அந்தத் தேவர்களுக்கெல்லாம் தேவரான அவரே கடவுள்’ என்று கடவுள் அல்லாத பொய்யர்களை எல்லாம் கடவுள் என்று புலம்புகின்ற மக்கள் நிறைந்தது இவ்வுலகம்; உலகப் பற்று சிறிதுமின்றி, என்னுடைய பற்றுகள் அனைத்தும் நீங்கும்படிக்கு, நான் உறுதியாகப் பற்றிக்கொண்டிருக்கிற உண்மையே வடிவான தேவர்பிரானிடம் போய் என் நிலையைச் சொல்வாய்” என்றார்.

அத்தேவர் தேவர் அவர்தேவர் - என்று இங்ஙன்

பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே

பத்தேதும் இல்லாது என் பற்றுஅற நான் பற்றி நின்ற

மெய்த்தேவர் தேவர்க்கே சென்று ஊதாய் கோத்தும்பீ.

( திருவாசகம்: திருக்கோத்தும்பீ)

(கோத்தும்பீ - அரச வண்டே! பத்தேதும் இல்லாது - உலகப்பற்று சிறிதுமின்றி)

இறைவன் அல்லாத ஒருவரைக் கடவுள் என்பதும், நிரந்தரத் தலைவர் என்பதும், காரியம் சாதித்துக் கொள்வதற்காகக் கூறப்படும் பொய் உபசாரமே என்று சொல்லவே, ‘பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே’ என்றார்.

உலகப் பற்றை விடுவதற்கு இறைவனைப் பற்றிக்கொள்ள வேண்டும் என்பதை, ‘பத்தேதும் இல்லாது என் பற்றுஅற நான் பற்றி நின்ற மெய்த்தேவர்’ என்றார். ‘பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு’ என்பது வள்ளுவர் வாக்கு.

மனிதன் தெய்வமாதல்

உயிர்களின் அறியாமையைப் போக்கவே, அவற்றுக்கு உடல், உலகம் போன்றவைகளைப் படைத்து, அவைகளுடன் வாழ்கிறான் இறைவன்; உயிர்கள் தம்மை உணர்ந்து, தம் தலைவனாகிய இறைவனை அழைக்கும்போது வெளிவந்து ஆட்கொண்டு அருள்கிறான். வேண்டுதல், வேண்டாமை இன்றி, அனைவருக்கும் அருளும் இறைவனே உண்மையில் உயிர்களின் தலைவனாவான். “தன்னைத் தானும் அறிந்து கொண்டு ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா” என்ற கவியரசு கண்ணதாசனின் வாக்குப்படி, இறையனுபவத்தைத் தாமும் அறிந்து, உலகுக்கும் சொன்ன மணிவாசகர் நம் தலைவராவார்.

:krishnan@msuniv.ac.in
(வாசகம் தொடரும்)



நாள் : 24-Feb-17, 7:31 pm

மேலே