எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

’’மைலம் என்று எழுதாதீர்கள் மயிலம் என்று எழுதுங்கள்!’’ ----------------------------------------------------------------------------------------------------------------...

  ’’மைலம் என்று எழுதாதீர்கள் மயிலம் என்று எழுதுங்கள்!’’
---------------------------------------------------------------------------------------------------------------- 

''சென்னையில் இருந்து தெற்கு நோக்கிப் பேருந்தோ, தொடர் வண்டியோ செல்லும்போது, திண்டிவனம் தாண்டிய அடுத்த பத்தாவது கிலோ மீட்டரில் கிழக்குத் திசையில் அழகிய சிறு குன்றோடும் கோபுரத்தோடும் தென்படுகிற சிற்றூர் மயிலம்!'' என்று தன் ஊர் பற்றிப் பேசத் தொடங்கினார் எழுத்தாளரும் 'மண்மொழி’ இதழின் ஆசிரியருமான இராசேந்திர சோழன். ''மயில் அம் என்பதுதான் ஊருக்கான பெயர்க் காரணம். இதில் அம் என்றால் அழகு. ஊரில் கிழக்குப் பக்கம் தொலைவில் நின்று பார்த்தால் கோயில் கோபுரம் மயிலின் கழுத்து போலவும் சரிந்த குன்று, தோகை விரித்து நிற்கும் மயிலின் முதுகு போலவும் தோற்றம் அளிப்பதால் மயிலம் என்று அழைக்கப்படுவதாகச் சொல்வார்கள்.

'பொம்மைபுரம் சிவஞான பாலய சுவாமிகள்’ வழிவந்த வீர சைவ மரபினரால் மயிலம் கோயில் நிர்வகிக்கப்பட்டுவருகிறது. ஆண்டுதோறும் பங்குனி உத்திரப் பெருவிழா, தேர், தெப்பம், முத்துப் பல்லக்கு, சூர சம்ஹாரம், தைப் பூசம், படி விழா ஆகியவற்றில் லட்சக்கணக்கில் மக்கள் கூடுவார்கள். முருக பக்தர் பித்துக்குளி முருகதாஸ் அவர்கள் தன் வாழ்நாளின் இறுதிவரை ஒவ்வொர் ஆண்டும் படிவிழாவின்போது தவறாமல் மயிலத்துக்கு வந்துவிடுவார். பங்குனிப் பெருவிழா என் றால் ஊரே களைகட்டி நிற்கும். வெளியூர் மக்கள் மாட்டு வண்டியில் வந்து, ஊரைச் சுற்றி உள்ள மாந்தோப்புகளிலும் புளியந்தோப்புகளிலும் வண்டியை விட்டுவிட்டு, சமைத்துச் சாப்பிட்டு, விழா முடியும் வரை இருந்து செல்வது வழக்கமாக இருந்தது. தற்போது அரசுப் போக்குவரத்துக் கழக சார்பாக விழாக்களின்போது சிறப்புப் பேருந்துகள்விட்டு, பல்வேறு இடங்களில் இருந்தும்  மக்களைவாரிக் கொண்டுவந்து கொட்டுவதும், கொட்டிய வேகத்திலேயே திரும்ப அள்ளிக்கொண்டுப் போய்விடுவதுமாக ஆகிப் போனதில் விழாக்கால நிகழ்வுகள் எல்லாம் ஏதோ கனாக் கால நிகழ்வுகள்போல் ஆகிவிட்டன.

தமிழகம் தழுவிப் பேரோடும் புகழோடும் விளங்கிய மயிலம் தமிழ்க் கல்லூரி இன்று கலை அறிவியல் கல்லூரியாக மாறிவிட்டது. மயிலம் கோயில் சார்ந்து பக்தர்களின் வசதிக்காக கட்டப்பட்டு இருந்த சத்திரங்கள் திருமண மண்டபங் களாக மாற்றப்பட்டுவிட்டன. புறநிலையில் இவ்வளவு மாற்றங்கள் ஏற்பட்டு இருந்தாலும் இன்றும் மாறாது மனதை உறுத்திக்கொண்டு இருக்கும் ஒரு விஷயம் மயிலம் என்கிற பெயரை இன்னமும் பலர் 'மைலம்’ என்றே எழுதுவது தான். இது தொடர்பாக ஊரில் உள்ள இளைஞர் அமைப்பினர் பல போராட்டங்கள் நடத்தினர். வட்டாட்சியர் அலுவலகத்தில் கேட்டால் 'பிரித்தானிய ஆட்சியில் அரசு ஆவணங்களில் 'Mylam’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.ஆகவே அதைத் தமிழில் 'மைலம்’ என்றுஎழுது கிறார்கள் 'Mylapore’ மைலாப்பூர் என அழைக்கப்படுவதுபோல’ என்கின்றனர். ஆனால், இளைஞர் அமைப்பினர் கோருவது 'மயிலாடுதுறையை Mayiladuthurai என எப்படி எழுதுகிறோமோ அதேபோல மயிலத்தையும் Maylam என்று எழுதவேண்டும்’ என்பது தான்.

எழுத்தாளர் பிரபஞ்சன், பிரெஞ்சுப் புரட்சி போராட்ட வீரர் புலவர் கி.த.பச்சையப்பன் போன்ற பல பிரபலங்கள் மயிலம் தமிழ்க் கல்லூரியில் படித்தவர்கள். ஆனால், நான் மட்டும் மயிலத்திலேயே இருந்துகொண்டு மயிலம் தமிழ்க் கல்லூரியில் படிக்கவும் இல்லை; பல கல்லூரிகளில் இதுவரை பேசி இருந்தாலும் மயிலம் கல்லூரி நிகழ்வுகளில் பங்கேற்கவும் இல்லை. இது ஏன் என்கிற கேள்வி எனக்குள் எழும். மயிலம் கிராமத்துடனான என் அனுபவங்களை ஒரு நாவலாக எழுத வாய்ப்புக் கிடைத்தால் அப்போது இந்தப் புதிருக்கான விடை கிடைக்கலாம்.

இறுகிக்கிடக்கும் செம்மண் பரப்பில்காலங் களின் வரலாற்றைத் தன்னுள்ளே புதைத்து உறைந்து தெரியும் வெண் சிகப்புப் பாறைகள், உரையாட யாருமற்ற அநாதைகள்போல் வெறுமையில் வாட, அப்பாறைகள் மீது அமர்ந்து பேசுவது எழுத்தாளர் கோணங்கிக்கு மிகவும் பிடிக்கும். அவர் இங்கு வரும் போது எல்லாம் நேரம் கழிவது அப்பாறைகளின் மீதுதான். இருட்டிய பிறகும் பேச்சு தொடரும்!''

- படங்கள்: ஆ.நந்தகுமார் (விகடன்)

நாள் : 24-Jul-17, 11:48 am

மேலே