கவிதையின் புரிதல் 2

சங்க காலத்து பாடல்/செய்யுள்களில் எல்லாம் சொற்களுக்கான அர்த்தங்கள் கண்டுப்பிடித்தாலே பாடலின் பொருள் புரிந்துவிடும். ஆனால் சிலர் எழுதும் புதுகவிதைகளில் புரியாத புதிரான வார்த்தை ஜாலங்களில் கட்டமைக்கப்படும் கவிதைகளில் .. சொல்லப்படும் பொருள் என்ன என்பதை புரிந்துக்கொள்ளவே ஒரு தனித்திறன் வேண்டும். இது பெரும் ரசனை இம்சையாக இருக்கிறது. இவ்விதமான கவிதையும் வேறு விதமான ரசனைக்கு எம்மை உள்ளாக்கிறது என்றால் மிகையல்ல. இதுவே புதுக்கவிதையின் வீரியம் எனலாமோ ?
இதோ.. இந்தக் கவிதையை படித்து பாருங்கள்.
இந்தக் கவிதையில் நீங்கள் புரிந்துக்கொண்ட கருத்தினை பகிர வேண்டுகிறேன்.

இந்தக் கவிதை ”மாலதி மைத்ரி” எழுதி காலச்சுவடு இதழில் வெளியாகியிருந்தது.

----

எனது மதுக்குடுவை
*****************************
என்னிடமுள்ள இக்குடுவை
என் மூதாதையரிடமிருந்து வந்தது
நூற்றாண்டுகளாக
உன்மத்த வாசம் வீசுமது
எம் பெண்களின்
முத்தத்தால் நிரம்பியிருந்தது
அதன் ரேகைகளில் ஒளிந்திருக்கும்
அமுதின் ஊற்று
என்னைக் காணும்போதெல்லாம்
பிள்ளைச் சூரியனாய் வழிந்தது
கள்ளுடன் சுட்டக்கருவாடும்
மாசிமாதக் கூத்துமாய் களைகட்டிய
இளமையின் நினைவைப் பருகுகிறாள்
குடுவையைப் போலிருக்கும் பாட்டி
ஊர்ச்சுற்றி மீன் விற்கும்
நெடிய அலைச்சலுக்குப்பின்
அவளின் மாலைப் பெரும்பொழுதுகள்
பொங்கும் மதுவுடன்
காதலும் நுரைத்து வழிந்ததாம்
அவளின் பேரானந்தத்தின் குளம்
எப்போதும் நிரம்பித் தளும்பியபடியிருந்தது

எங்களின் தாழ்ந்த எரவாணத்தில்
சொருகிய மீன்பரிக்கு அருகில்
கயிற்றில் ஊஞ்சலாடும் சுரக்குடுவை
ஒரு குட்டித் தேவதையென
எனது பால்யத்திலிருந்து
என்னைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது
அதற்கு எப்போதும் வசீகரமான
ஒரு மர்மப் புன்னகையை
நான் பரிசளித்துக்கொண்டிருந்தேன்

வீட்டுத் தென்னையின் முதல்காய்
குலதெய்வப் படையலானது
அடுத்த பாளையில் கள்ளிறக்கி
உலகை இரண்டாவது முறை
சுவைக்கக் கொடுத்தாள் அம்மா
மோகத்தின் பித்தேறிப் பருகிக்கொண்டிருக்கிறேன்
இவ்வுலகை இக்குடுவையில் ஊற்றி..

--


நன்றி : காலச்சுவடு.



நாள் : 27-Aug-15, 7:14 pm
2


மேலே