பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு - கவிஞர் இராபூபாலன்

(Tamil Nool / Book Vimarsanam)

பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு - கவிஞர் இராபூபாலன்

பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு - கவிஞர் இராபூபாலன் விமர்சனம். Tamil Books Review
பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு..! - கவிஞர் இரா.பூபாலன்.
------------------ ------

ஆனந்தவிகடன்,குமுதம் தீராநதி மற்றும் சில இலக்கிய இதழ்களில் அவ்வப்போது பார்த்து வந்த சில கவிதைகள் உட்பட,ஒரு புதையலை, இத்தொகுப்பில் அள்ளிக் கொடுத்திருக்கிறார் பூபாலன்.

இதிலுள்ள கவிதைகளைப் பொறுத்தவரை,எந்தப் பூவில் தேன் எடுத்தாலும் தேனில் பேதமில்லை என்பதைப்போல, எந்தக் கவிதையென்றாலும், வாசித்தவுடன் அதுவொரு தாக்கத்தை ஏற்படுத்தாமல் நகர்வதில்லை என்று உறுதிபடக் கூறிவிட முடியும்.

எதுவுமற்ற சூன்யத்திலும்,எல்லாமாகப் பொருந்திவிடக் கூடியவனாக கவிஞன் இருக்கிறான் என்பதை தனது கவிதைகளின் மூலம் நிரூபித்து செல்வதில் தோழர் பூபாலனும் ஒருவர்.

இத்தொகுப்பின் முதல் கவிதையில்,ஒரு அறையின் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த ஓவியத்தில் பார்வையைச் செலுத்திய கவிஞருக்கு, அந்த ஓவியத்தில் குளம் இருக்கிறது.கொக்கும் இருக்கிறது.தனக்கான இரையை எதிர்பார்த்தபடி கொக்கு காத்திருப்பதாகவும் படுகிறது. ஆனால்,மீன்களை வரைய மறந்துவிட்டார் அந்த ஓவியர்.பசியுடன் இருக்கும் கொக்கு,இப்போது என்ன செய்யும்.?.ஆமாம், என்ன செய்யும்..? அந்தக் கவிதையை வாசிக்கும்போது நமக்கும் தோன்றுகிற இந்தக் கேள்விக்கு பதிலாக அவர் எழுதியிருப்பது,

“அறையின் சுவற்றில் மாட்டியிருந்த
அந்தக் குளத்தில்
கொக்கை வரைந்தவன்,
ஒரு மீனைக்கூட
நீந்தவிடவில்லை.
ஒற்றைக் காலைத் தூக்கியபடி
வெறிக்க வெறிக்க
என்னையே பார்க்கும்
கொக்கின் அலகில்
மீனாகிறேன் நான் இப்போது..!”--- என்பதாக முடிக்கிறார்.

இரைக்காக காத்திருக்கும் கொக்குக்கு தானே இரையாக மாறிவிட்டேன் என்பதை சொல்லும்;போது,கவிஞரின் இரக்கம் மிகுந்த மனதைப் பற்றிய ஒரு சித்திரம், நமக்குள் சப்பரமிட்டு அமர்ந்து கொள்கிறது.வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்..என்ற மரபின் தொடர்ச்சியாகவே, அடுத்து வரும் அவரின் கவிதைகளும் இருக்கும் என்ற நம்பிக்கையை அளிப்பதாக இத்தொகுப்பின் முதல் கவிதை அமைந்திருக்கிறது.

இதனை இங்கு குறிப்பிட்டுச் சொல்வதற்கு காரணம் உண்டு.இன்று தமிழகத்தில் வெளியாகும் பலநூறு கவிதை தொகுப்புகளின் மூலம், அதனை எழுதிய கவிஞர்கள் தங்களை அடையாளப் படுத்திக் கொள்ளத்தான் எழுதுகிறார்களே தவிர,தங்கள் கவிதைகளை அடையாளப்படுத்துவதே இல்லை.

எழுதியவர் பெயர் என்னவென்றே தெரியாமல் போனாலும்,

“இரவில் வாங்கினோம்.
இன்னும் விடியவே இல்லை.”,என்பதைப் போலவோ,

“தீக்குளித்தாள் சீதை,
நிரூபணமானது
இராவணனின் கற்பு.” என்பதைப் போலவோ..

“ஆலைப்புகை கண்டு
அஞ்சித் திரும்பியது
காற்று..!” -------- என்பதைப் போலவோ,சாமானிய மக்களின் மனதில் முத்திரை பதிக்கும் கவிதைகளை பரவலாகக் காண்பது அரிதாகவே இருக்கிறது.
ஆனால், தோழர் பூபாலனின் கவிதைகள்,அந்தக்குறையை நிச்சயம் களைந்துவிடும் என்றே சொல்லலாம்.

இணையவெளியில் உலாவரும்போது,அவருடைய கவிதைகளில் இருந்து நிறைய மேற்கோள்கள்,அவருடைய பெயரும் குறிப்பிட்டு, மற்றவர்களால் எடுத்தாளப் பட்டு வருவதே இதற்கு சாட்சியாகவும் காணலாம்.

இத்தொகுப்பின் தலைப்பாக உள்ள,“பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு” கவிதையைப் பொறுத்தவரை,அந்த ஒற்றை இறகு என்பது தனது நிலையை விளக்கும் ஒரு குறியீடாக முன்னுரையில் சொல்லும் கவிஞர் இந்த ஒற்றை இறகின் பறத்தலை காற்றுதான் தீர்மானிக்கிறது என்றும், சுயமாக மேலெழும்பி பறத்தல் சாத்தியமற்றது..என்றும் சொல்கிறார்.

“சறுக்கல்களையும்,
தோல்விகளையும்,
இழப்புகளையும்,
பொருட்படுத்தாது
காற்றுவீசும் கணம்தோறும்,
இன்னும்
பறக்க எத்தனித்தவாறே
இருக்கிறது அந்த இறகு..!” என்று தலைப்புக்கவிதையில் சொல்லியிருப்பது, கவிஞர்கள் அனைவருக்கும் சொந்தமான வரிகளாக எடுத்துக் கொள்ளமுடியும்.

எல்லாக் கவிஞர்களையும்,சூழல் அல்லது அனுபவம் எனும் காற்று
அசைக்க, அசைக்க பறத்தலின் எத்தனிப்பை அவர்கள் கவிதையாக்கு கிறார்கள்.இவ்வாறு அசையும் இறகுகள் கவிதையாகிறது.அசையாமல் இருப்பது குப்பையாகிறது என்ற நிலையில் இவருடைய இந்த வாக்குமூலம் மிகவும் பொதுமைப் பண்பு மிக்கது.

அய்யனார்-எ-மாரப்பன் என்ற கவிதை,இன்றைய நிலையில்,உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கணிணி வழியாக முகம் பார்த்துப் பேச வசதிகள் வந்துவிட்டபோதிலும், இந்தியா, குறிப்பாக தமிழகம், சாதிகளின் மேலாதிக்கத்தில் கட்டுண்டு கிடக்கின்ற, இதனால் பல நூற்றாண்டுகள் பின்தங்கியிருக்கின்ற அவலத்தை மெல்லிய பகடியோடும்,அதற்குப் பின்னால் இருக்கும் ஆழ்ந்த வருத்தத்தையும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறது.சொல்லப்போனால் ஒரு நல்ல சிறுகதையின் அத்தனை அம்சங்களும் அதனுள் பொதிந்திருப்பது வெகுசிறப்பு.

அன்பை எந்த வடிவத்தில் செலுத்தினாலும்,அதனை இரு மடங்காக்கித் தருகிற வல்லமை குழந்தைகளுக்கு மட்டுமே உண்டு.அப்போது குழந்தைகள் இவன் யாரென்றோ,எந்தச் சாதி,மதமென்றோ,நல்லவனோ கெட்டவனோ..என்றெல்லாம் பார்ப்பதேயில்லை.

இதே குணங்கள்தான் கடவுளுக்கும் உண்டென,நாம் கற்பிக்கப் பட்டிருக்கிறோம். வளர்க்கப் பட்டிருக்கிறோம்.அந்தவகையில் குழந்தைகளைப் பற்றிய இவரது சில கவிதைகளில்,அவர்களை கடவுள் என்றே அவர் குறிப்பிட்டுச் சொல்வதும், குழந்தைகள் மீதான அவரது அன்பையும்,அக்கறையையும் பரிமாறிக் கொண்ட தருணங்களை அழகான கவிதைகளாக்கித் தந்திருக்கிறார். “கடவுளுக்கு லிப்ட்.” என்ற தலைப்பிலான கவிதை குழந்தைக் கடவுள்களை,கவிஞர் எந்த அளவில் நேசிக்கிறார் என்பதை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. கூடவே சில கேள்விகளும் நமக்குள் எழுப்பிப் போகிறது.

முதல் சங்ககாலத்திலிருந்து,கடவுள்களை குழந்தைகளாகப் பாவித்து, அந்தாதி முதல் பலவகை இலக்கியம் செய்து,வழிபட்டு வந்த நம் சமூகம்,இப்போது குழந்தைகளை ஏன் கடவுள்களாகப் பார்க்க மறுக்கிறது.? இந்தக் கேள்வி கவிஞரின் மனதில் ஆழமாகக் கீறிக் கொண்டே இருந்திருக்க வேண்டும்.அதன் வெளிப்பாடாகவே, ஆதங்கமும் எரிச்சலும் கமறும் வரிகளாக “சிவப்பு விளக்கெரியும் சாலை சந்திப்புகளில் பிச்சை எடுக்கிறார்கள் கடவுள்கள்..! என்று தொடங்கும் ஒரு கவிதை,இழி மனிதர்களின் தேசத்தில் குழந்தைக் கடவுள்கள் படுகின்ற துன்பத்தை துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறது.

இக்கவிதையை வாசித்தபோது நாட்டின் ஏதோவொரு மூலையில் சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாவதென்பது,அன்றாடச் செய்திகளுள் ஒன்றாகிவிட்ட அவலத்தையும் நினைக்காமல் இருக்கமுடியவில்லை. இப்போது குழந்தைக் கடவுள்களையும் காப்பாற்றிக் கொண்டிருக்கிற இலக்கியவாதிகளின் பொறுப்பை,இனி சமூகத்தின் சகல மட்டங்களுக்கும் விரைவாய் பகிர்ந்தளிக்க வேண்டிய அவசியம் முற்றிக் கொண்டே வருகிறது.

மானுடத்தை நேசிக்கும் பல கவிஞர்களின் படைப்புகள்,சில நூற்றாண்டுகளுக்குட்பட்ட காலங்களில் எப்போது வாசித்தாலும்,அது வாசிக்கப் படுகின்ற காலத்திற்கே உரியவை என்று தோன்றும். “பகைவர் வணங்கித் தொழுத கையினுள்ளும் கொலைக்கருவி மறைந்திருக்கக் கூடும், அதுபோல அவர்கள் அழும் கண்ணீரும் அவ்வாறானதே..எனும் பொருளில்,
“தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்.ஒன்னார்
அழுத கண்ணீரும் அனைத்து..” என்று சொன்ன வள்ளுவர் வழியில்,பாரதி வழியில் நிறையக் கவிஞர்களைப் பட்டியலிடலாம்.

இதுபோன்ற கவிதைகளின் வரிசையில்,தோழர் பூபாலனின் கவிதையில் ஒன்று,மிகக் கச்சிதமாய் இருப்பதாக நான் பிரமித்த கவிதை,பொய் செய்தல் எனும் தலைப்பில் அவர் சொல்வது

“உண்மைக்கு மிகஅருகில்
அல்லது அதன்மீதே
அமர்ந்து கொண்டு
பொய்யைப் பிரகடனப் படுத்துவது
எத்தனை நுட்பமானது.?
அதற்கு நாம் சாட்சிகளையும்,
தடயங்களையும் அழித்தொழிக்கவேண்டும்.
உண்மைக்கு எதிராக
ஒன்றிரண்டு
பொய் சாட்சிகளைத் தயார் செய்தல்
இன்னும் சிறப்பு..,
பொய்க்கு,
உண்மையைப் போலவே
ஒப்பனைகளைப் பூசிக் கொள்ளவும்,
யாவற்றையும்விட
மிக முக்கியமாக
அதற்கு மனசாட்சியை
ஒரு கந்தல்துணியைப் போல
கழற்றி சாக்கடையில் வீசியெறியவும்
சம்மதிக்க வேண்டும்..!”

இந்தக்கவிதையை வாசித்தபோது,தற்போது தமிழகத்தில்,ஒரு மனிதனுக்குள் இருக்கும் எழுத்தாளனை கொலை செய்யும் அளவில், இலக்கியத்திற்கு எதிரான அரசியல் சூழலும்,அகில இந்திய அளவில் வரலாறுகளை மாற்றும் முயற்சிகளும், கடந்த ஜனவரி 3.ஆம் தேதியன்று மும்பையில் நடந்த இந்திய அறிவியல் மாநாடு என்ற பெயரில்,வேதகால விமானத்தில் கடத்தப்பட்ட அறிவியல் மாநாடும், சமுதாயத்தில் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது அரசின் கடமை எனச் சொல்லும் நம்நாட்டின் அரசியல் சாசனமும் ஏனோ அடிக்கடி கவனத்தில் வந்து தொலைக்கிறது. இப்போது நீங்களே நினைத்துப் பாருங்கள்.“உண்மைக்கு மிகஅருகில் அல்லது அதன்மீதே அமர்ந்து கொண்டு பொய்யைப் பிரகடனப் படுத்துவது எத்தனை நுட்பமானது.?”

மது,வரதட்சணை,இணையத்தின் தீமைகள் என சமுதாயத்தில் நிலவி வருகின்ற பல்வேறு பிரச்சினைகளையும்,சிக்கல்களையும் தனது பாடுபொருளாகத் தெரிவு செய்ததில் சமூகப் பொறுப்பு மிக்க கவிஞராக வெளிப்பட்டு நிற்கும் தோழர் பூபாலன்,இத்தொகுப்பில் மரங்களின் அவசியம் குறித்துப் பாடியிருக்கும் சில கவிதைகள் தனிச்சிறப்பு மிக்கவை.சற்று மிரட்டலான கவிதைகள்கூட என்றும் சொல்லலாம்.

அதில் நான் மிகவும் மிரண்டுபோன கவிதை ஒன்று,இப்படித் தொடங்குகிறது. “எப்போதும் உங்கள் காதுகளில்
கேட்டுக்கொண்டே இருக்கும்
செல்ல மகளின் கொலுசுச் சத்தம்
சட்டென நின்று போனால்..?

நீங்கள் குடியிருந்த வீடு
முற்றிலும் மண்ணோடு
மூழ்கிப்போனால்..?

உங்கள் பிரியமான உறவு
கண்முன்னாலேயே கழுத்தறுபட்டால்.?
எப்படி உணர்வீர்கள்..?
அப்படியொரு கணம்
உருவகப்படுத்திப் பாருங்கள்..
நீங்கள் வெட்டிக் கொண்டிருக்கும்
இந்த மரத்தை..!” என்று அந்தக் கவிதை முடிகிறது.

புவி வெப்பமடைகிறது.கடல்நீர் மட்டம் உயர்கிறது.ஓசோன் படலம் மேலும் கிழிந்துகொண்டே போகிறது.எதிர்கால சந்ததிகள் கடும் வெப்பத்தையும்,நீர்ப் பஞ்சத்தையும் அனுபவிக்க நேரிடும்.எனவே மரங்களை வெட்டாதீர்கள் என்று பல காலமாக,அன்பாக, அறிவுறுத்தலாக,வேண்டுகோளாக, பலவகையிலும் சொல்லிப் பார்த்தாயிற்று.இனி இவர்களை மிரட்டித்தான் சொல்லவேண்டும் என்று பூபாலன் வழிகாட்டியுள்ளார். அடுத்த தொகுப்பில் மரம்வெட்டிகளை, எப்படியெல்லாம் உதைப்பது என்றும் எழுதவேண்டும் என்பதை எனது வேண்டுகோளாக இங்கு வைத்துக் கொள்கிறேன்.

புனைவுகளாக மட்டுமின்றி,வாழ்க்கை அனுபவங்களை வாசிப்பதற்கேற்ற வரிகளாகச் செதுக்கியிருப்பதும், வாசித்தபின் அந்த வரிகளின் தொடர்ச்சியாக வாசகனை சிந்திக்க வைப்பதிலும் வெற்றிகரமான ஒரு படைப்பாகவே பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு கவிதைத் தொகுப்பு அமைந்துள்ளது என்று உறுதியாக உங்களுக்கு சொல்ல முடியும்.

கவிஞர் பூபாலனின் வார்த்தைகளிலேயே இன்னும் சொல்வதெனில்,
“சில கவிதைகள்
எத்தனை முறை படித்தபோதிலும்,
இன்னொரு முறையென
மனது ஏங்கவைக்கும்-
குழந்தையின் முத்தம்போல..!.” -----இது அவருடைய கவிதைகளுக்கும் எப்போதும் பொருந்தும்..!
---------
பொள்ளாச்சி அபி -18.01.2015

பொள்ளாச்சி இலக்கிய வட்டம் நூல்கள் வெளியீட்டு விழா.
என்.ஜி.எம் கல்லூரி
=========
குறிப்பு- தோழர் பூபாலனின் கவிதைகள் வாசிக்க விரும்பும் தோழர்களுக்காக, சென்னை கே.கே,நகர்-discovery book palace ல் நூல்கள் கிடைக்கும்.
we can -online shoping மூலமாக டோர் டெலிவரியும் பெறலாம்.

சேர்த்தவர் : பொள்ளாச்சி அபி
நாள் : 21-Jan-15, 7:02 pm

பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு - கவிஞர் இராபூபாலன் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே