Anaiththum

(Tamil Nool / Book Vimarsanam)

Anaiththum

Anaiththum விமர்சனம். Tamil Books Review
முருகேசு ரவீந்திரனின் ”அனைத்தும்” ஓர் அறிமுகம்
- வேலணையூர்-தாஸ்

இலங்கை வானொலி பிரபல அறிவிப்பாளரும் சிறுகதை எழுத்தாளருமாகிய முருகேசு ரவீந்திரனால் 2009ம்ஆண்டு தொடக்கம் 2011வரை தினகரன் வாரமஞ்சரியில் கூராயுதம் பகுதியில் தொடர்ச்சியாக எழுதிய கட்டுரைகள் “அனைத்தும்” என்ற பெயரில் நுாலாகியிருக்கிறது.
.தேசிய நுாலக ஆவணமாக்கல் சேவைகள் சபையின் அனுசரணையுடன் வெளியிடப்பட்ட இந்நுால் இலக்கியத்தின் இயல்புகளை பல்வேறு தளங்களில் நின்று ஆய்வு செய்கிறது.
தனது வாசனைப்பரப்பில் தன்னை கவர்ந்த எழுத்தாளர்களின் நுால்கள் பற்றிய கருத்துகளின் தொகுப்பாக அமைந்த இக்க கட்டுரைகள் அக்கால இலக்கியப்போக்குகள், பண்பாட்டுநிலைமை என்பவற்றை அறியத்தருவதோடு சிறந்ததொரு வாசிப்பனுவத்தையும் வழங்குகின்றது.

கவிதை இலக்கியம் ,சிறுகதைகள் நாவல்கள்,படைப்புக்களும் படைப்பாளிகளும், நாடக இலக்கியம்,இலக்கியமும் பண்பாடும். என ஜந்து தலைப்புக்களில் மொத்தம் இருபத்தைந்து கட்டுரைகளை இத் தொகுதி உள்ளடக்கியிருக்கிறது.
கவிதைஇலக்கியம் பகுதியில் வருகின்ற ”இயற்கையை பாடிய கவிஞர்கள்” கட்டுரையில் பாரதி, கீற்ஸ், பாரதிதாசன் போன்றோர் எவ்வாறு இயற்கை அழகில் வயித்திருந்தனர். அவர்களது இயற்கை பற்றிய கவிதைகளின் அழகியல் தன்மை பற்றி குறிப்பிடுகிறார்.

“பெண்மொழி கவிஞர்கள்“ கட்டுரையில் முருகேசு ரவீந்திரன் குறிப்பிடுகின்ற விடயம் மிகவும் முக்கியமானது.
இலக்கியங்களில் அழகாக வர்ணிக்கப்படுகின்ற பெண்களின் இருப்பு சுதந்திரமற்றதாக இருக்கிறது. அவர்கள் மீதான சமூக விலங்குள் அகற்றப்படவில்லை. இதை மீறி சுதந்திரமாய் வருகின்ற பெண்மொழி சமூகத்தில் அதிர்வை ஏற்படுத்துகின்றது. இது ஆண் இலக்கியவாதிகளால் சர்சைக்குரியதாகிறது.
”தமிழிலக்கியத்தில் புதுக்கவிதையின்போக்கு” எனும் பகுதியில் புதுக்கவிதையினுடைய தோற்றம் எண்பதுகளில் இப்புதுக்கவிதையின் செல்வாக்கு. என்பது பற்றியெல்லாம் குறிப்பிடும் இவர் கடிதம் எழுதும் காதலர்கள் தங்கள் கடிதங்களில் தங்கள் காதலை சொல்வதற்கு புதுக்கவிதையை எவ்வாறு கையாண்டார்கள் என்பதை பற்றியெல்லாம் சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார்.
.ஓரிடத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். "இப்போதெல்லாம் கடிதம் எழுதுபவர்களின் எண்ணிக்கை அருகி விட்டது.செல்லிட தொலைபேசிகள் வழியாக குறும் செய்திகள் அனுப்புகிறார்கள் . இவை ஒருபோதும் காதல் கடிதங்களுக்கு ஈடாக மாட்டாது".இது போன்ற பகுதிகள் ரவீந்திரனது கட்டுரை அழகியலுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
படிப்போரை தொடர்ந்து வாசிக்க பண்ணுகிற ரச வாதம் இவருக்கு கைவந்திருக்கிறது.
பைரன்கீட்ஸ், பாரதி , வைரமுத்து, அப்துல் ரகுமான், மேத்தா, கலாப்பிரியா போன்ற கவிஞர்களின் புதுக்கவிதை கவித்துவம் இக்கட்டுரையில் சொல்லப்படுகிறது.
இவ்வாறு இக்கட்டுரையில் சொல்லப்படுகின்ற கவிஞர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களும் பிற தேச கவிஞர்களுமாகவே இருக்கிறார்கள்.இக்காலத்தில் ஈழத்தில் வாழ்ந்த வில்வரத்தினம், மகாகவி, முருகையன், சிவரமணி, ஔவை, செல்வி, சண்முகம் சிவலிங்கம் போன்றோர்களை குறிப்பிடாது விட்டது ஒரு குறையாகவே தென்படுகிறது.
பத்திரிகைக்காக வரையறைக்குள் எழுதப்பட்ட கட்டுரை என்பதால் இவை தவிர்க்கப்பட்டிருக்கலாம். ஆனாலும் பிறிதொரு இடத்தில் முருகேசு ரவீந்திரன் இவர்கள் பற்றியும் எழுத வேண்டும்.
” அனைத்தும்” தொகுதியில் ஜந்தாவதாக இடம்பெறும் நாட்டார் பாடல் காதல் இலக்கிய ரசனை உள்ள ஓர் கட்டுரை .நாட்டார் பாடல்களின் எளிமையும், ஓசைச் சிறப்பும், காதல் பாடல்களின் அழகும், தனிமையில் வாடுதல், பிரிவு கண்டு இரங்குதல், காதலில் களிப்புறுதல், இடையுறுகளினால் அச்சமடைதல், காத்திருக்கும் மன ஏக்கம், என காதலின் பல நிலைகளை அழகிய நாட்டார் பாடல்களை ஆதாரமாக கொண்டுதனக்கே உரிய எளிமை தன்மையுடன் எழுதியிருக்கிறார் ரவீந்திரன்.அதிலே வருகின்ற "மச்சானே மாம்பழமே மாமி பெத்த பாலகனே ஏலக்கிராம்பே உன்னை என்ன சொல்லி கூப்பிடட்டும்." என்ற பாடல் அதில் வருகின்ற ஏனைய பாடல்களுக்கு ஓர் அழகிய உதாரணம்.

.இத்தொகுதியில் வருகின்ற தமிழில் சிறுகதைகள் என்ற ஆக்கம் ஆக ஆறு பக்கங்களே ஆன கட்டுரையாக இருந்தும் ஒரு தனியான புத்தகத்திற்குரிய விடயங்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது.
தமிழ் சிறுகதைகளின் தோற்றம் அதனுடைய வளர்ச்சி படைப்பாளர்கள் அது பேசுகின்ற பொருள் என பல்வேறு விடயங்கள் இதில் ஆய்வு செய்யப்பட்டிருகிறது. .வா.வே.சு. ஜயர், மாதவஜயர், புதுமைப்பித்தன், கு..ப ராஜகோபாலன். கல்கி, அகிலன் போன்ற ஆரம்ப சிறுகதை எழுத்தாளர்களை மேற்கோள் காட்டி அவர்களது கதைகளின் இயல்புகளை விளக்கி மிக சுருக்கமாகவும் அதே வேளை செறிவாகவும் இக்கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது
வெறும் வாசிப்பிற்கு மட்டுமின்றி தமிழ் இலக்கிய வரலாற்றை ஆய்வு செய்ய விரும்புவர்களுக்கு உசாத்துணையாக உதவக்கூடியதாக இக்கட்டுரையும் ”தமிழில் வரலாற்று நாவல்கள்” கட்டுரையும் அமைகிறது.
“படைப்புகளும் படைப்பாளிகளும்“ பகுதியில் வருகின்ற பதிவுகள் இவருடைய அகன்ற வாசிப்பையும் ரசிகத்தன்மையையும் விமர்சன ஆற்றலையும் எடுத்துகாட்டவனவாக அமைகின்றன
இரசிகமணியின் பிட்டு, தெணியானின் கானலில்மான்
போன்றவை குறிப்பிடத்தக்கவை
நவம்பர் 26. 2014 ஈழத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான எஸ் .பொ காலமானார். தமிழ் இலக்கியத் துறையில் புதினம் நாடகம் கவிதை விமர்சனம் மொழிபெயர்ப்பு அரசியல் என பல தளங்களில் எழுதிய எஸ்.பொ நாற்பதிற்கும் மேற்பட்ட நுால்களை எழுதியுள்ளார்.
அவரின் மறைவையொட்டி அஞ்சலி நிகழ்வுகள் இலக்கிய அமைப்புக்களால் நடாத்தபட்டு வருகின்றவேளை இத் தொகுதியில் இடம் பெறும் “எஸ்.பொவின் ஆக்கங்கள்“என்ற படைப்பு அதிக கவனத்திற்குரியதாகிறது.
எஸ்.பொவின் தீ என்ற நாவல் தமிழ் இலக்கியத்தில் ஏற்படுத்திய சர்ச்சை பற்றியும் அவருடைய சடங்கு நனவிடை தோய்தல் என்ற நுால்கள் பற்றியும் எழுதுகின்ற ரவீந்திரன் ஒரு இடத்தில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். .
தனது எழுத்துகளுக்கு எஸ்.பொ வரையறைகள் வகுக்கவில்லை அதனால் தான் இவரை சர்ச்சைக்குரிய எழுத்தாளராக பலரும் கருதினர்.
நீலபத்மநாதன், ஞானகிராமன், கீரா, சுந்தரராமசாமி, பெருமாள் முருகன் ஜெயகாந்தன் போன்ற படைப்பாளிகளின் படைப்புக்கள் பற்றியும் இத்தொகுதியில் கட்டுரைகள் எழுதப்பட்டு இருக்கின்றன. முருகேசு ரவீந்திரன் தனக்கே உரிய பாணியில் பண்பாட்டின் வழி நின்றும் அதே வேளை பெண் விடுதலை, மனித நேயம் என்பவற்றை உரத்து பேசுபவராகவும் இலக்கியத்தில் ரசனைதொடர்பான ஆளுமைபெற்றவராகவும் நின்று ”அனைத்தும்” தொகுதியை எழுதியுள்ளார். .
”அனைத்தும்” பெயருக்கேற்ப இலக்கியத்தின் அனைத்து விடயங்களையும் இந்நுாலில் அலசியுள்ளது.
பேபி போட்டோவின் யாழ்ப்பாணக்கோட்டை, மணிக்கூட்டுக்கோபுரம், செல்வா நினைவாலயம், நுாலகம் எல்லாவற்றையும் உள்ளடக்கிய படத்தை முகப்போவியமாக கொண்டு அன்ரா பிறின்டேர்ஸ் அச்சகத்தில் அச்சிட்டு யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டிருக்கிற ”அனைத்தும்“ தமிழ் இலக்கியம் விரும்புகிறவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நுாலாகும்.

சேர்த்தவர் : Tharan
நாள் : 27-Jan-15, 9:25 am

Anaiththum தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே