நாளை மற்றும் ஒரு நாளே குறத்தி முடுக்கு

(Tamil Nool / Book Vimarsanam)

நாளை மற்றும் ஒரு நாளே குறத்தி முடுக்கு

நாளை மற்றும் ஒரு நாளே குறத்தி முடுக்கு விமர்சனம். Tamil Books Review
. நாகராஜன் எழுதிய இரண்டு நாவல்கள் நாளை மற்றும் ஒரு நாளே மற்றும் குறத்தி முடுக்கு. இந்த இரண்டுமே வித்தியாசமான சிந்தனையில் வித்தியாசமான கோணத்தில் எழுதப்பட்ட நாவல்கள் இதனை தவிர்த்து இவர் சில சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். இவருடைய படைப்புகள் எல்லாமே சராசரி மனிதர்களின் கனவில் கூட யோசிக்க முடியாத, பிடிக்காத பக்கங்கள்.
அவருடைய எழுத்து உலகத்தில் வேசிகளும், பொறுக்கிகளும், சாதரண குடிமகன்கள் மற்றும் மகள்களும் தங்கள் வாழ்வுக்கும் இருப்புக்குமான சகல நியாயங்களோடும் கௌரவங்களோடும் வாழ்வார்கள்.
நாளை மற்றும் ஒரு நாளே...
இந்நாவல் பல முடிச்சுகளை தன்னுள் கொண்டுள்ளது. காதல், காமம், ஏமாற்றம், கோபம், கிரைம் என எல்லாவற்றையும் ஒரே நாளில் கதையின் நாயகன் சந்திப்பதுதான் சிறப்பு. இது கந்தன் என்ற சராசரி மனிதனின் ஒருநாளைய வாழ்க்கை. இவன் காலையில் எழுந்தவுடன் சாரயத்திற்கு காசு தேடுபவன். காமத்தை தேடுபவன் என்று கந்தன் தன் இச்சைக்காக வாழ்பவன் என்பதை முதலிலேயே வாசகனுக்கு உணர்த்திவிடுகிறார்.
அவனுடைய மனைவி மீனாவை சோலை என்பவனிடம் காசு கொடுத்து வாங்கி இருப்பான். இறுதியில் அவனே மீண்டும் வாங்கியவனிடம் சென்று அவளுக்கு பொறுத்தமாய் வேறு ஒரு இடம் பார்க்க சொல்லுவது அவள் மேல உள்ள காதலை அழகாக்குகிறது.
விளிம்பு மக்களின் வாழ்க்கையை எந்தவித மினுக்கல்களும் இல்லாமல் இயல்பாய் சொல்லவும் முடியும் என்று வரம்புகளைத் தாண்டிக் குதித்திருக்கிறார் ஜி.நாகாராஜன். தனது காதல் மனைவி மீனாவோடு கூடியிருக்கும் போது அணில்களின் கூடல்களையும், யானையின் கூடல்களையும் பேசி சிரிக்கும் கந்தன், விகல்பமில்லாமல் அணிகள் மயங்கிக் கிடக்கிற இதே மாதிரி, உனது வாடிக்கையாளர்கள் எவரோடும் மயங்கிக் கிடந்திருக்கிறாயா என்று கேட்கிறான்.
அவள் ஒவ்வொருத்தராக விவரிப்பது உலுக்கி எடுக்கிறது. பேச்சியின் வீட்டில் வைத்து தொழில் நடத்துகிற மீனாவிடம் பொய் சொல்லி ரூபாய் வாங்குவது, அவளும் அதைக் கண்டும் காணாமல் இருப்பது, ஒரு மதிய வேளையில் தன்னந்தனியே படுத்திருக்கும் கந்தனிடம் ராக்காயி என்கிற மோகனா வருவதும், வெத்திலை பாக்கு வாங்கிக் கொடுக்கிறமாதிரி மச்சான் கந்தனுக்கு இஞ்சிச் சாராயம் வாங்கிக் கொண்டுவந்து கொடுப்பதுவுமாக வாழ்க்கை அவர்களுக்கு எந்த சட்டத் திட்டங்களுக்கும் கட்டுப்படாததாக இருக்கிறது.
“தம்பி, ஏமாத்துறவங்களும் ஏமாறவங்களும் இருக்கறது தான் உலகத்தின் தன்மை. அது அழகு என்று கூட எனக்கு படுது. எல்லாரும் நேர்மையா நடந்துகிட்டா, வாழ்க்கைல போட்டியோ முன்னேற்றமோ இருக்காது. சூழ்ச்சி செய்யும் போது தான் உசிரோட இருப்பதாகவே தெரியுது. சூழ்ச்சி செய்ற திறமை தான் மனுஷன மனுஷனாக்குது. அது தான் மனுஷனுக்கும் மிருகத்துக்கும் இருக்குற வித்தியாசம் – கதையில் வரும் இந்த வாக்கியம் நம்முடைய அனைத்து கட்டுமானங்களையும் நொறுக்கித் தள்ளும்.
இந்த நாவல் Non-linear என்னும் வகையினை சேர்ந்த்து எனலாம். இது வாசகனுக்கு சவாலான ஒன்று. காரணம் முழு நாவலும் நேரே இல்லாமல் கலைத்துப் போடப்பட்டு வாசகனிடம் தரப்படுகிறது.
கதையில் வரும் மற்றொரு உலுக்கும் வாக்கியம் “மனிதனைப் பற்றி பொதுவாக எதுவும் சொல்லச் சொன்னால் ‘மனிதன் மகத்தான சல்லிப்பயல்’ என்றுதான் சொல்வேன்.
ஜி. நாகராஜனின் ‘நாளை மற்றொரு நாளே’ நாவலை சி.மோகன் ஆங்கிலத்தில் ‘Tomorrow One more Day’ என்ற பெயரில் மொழி பெயர்த்துள்ளார்.
இந்த நாவல் தமிழ் நாவல்களுக்கான இயல்பான கதை களத்திலிருந்து விலகி வேறொரு பரிணாமத்தை நம் கண் முன் வைக்கும் ஒரு பொக்கிஷம்.
*******************************************************************************************************************
குறத்தி முடுக்கு:
நெல்லையின் வள்ளிக் குறத்தி முடுக்கு என்னும் பாலியல் தொழில் நடக்கும் பகுதியில், நடைபெறும் கதையை, குறைந்த பக்கவெளிக்குள்ளேயே காவியமாக பதியவைக்கும் ஜி. நாகராஜனின் எழுத்து அற்புதமானது. ஒரு பத்திரிகை நிருபருக்கும் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தங்கம் என்னும் பாலியல் தொழிலாளிக்கும் இடையிலான உறவைப் பற்றிய கதை. இந்தப் பத்திரிகையாளன் வாழ்க்கை பற்றி சில தெளிவுகள் கொண்டவன். காமம் ஒரு இச்சை தீர்ப்பு மட்டுமே அதில் காதலின் மாய சிறகுகள் முளைக்கும் முளைக்ககூடும் என்னும் சாத்தியங்களையே ஏற்க மறுப்பவன்.
ஆனால் தங்கதுடனான உறவில் இவனது அனைத்து தர்க்கங்களும் சிக்கலடைந்தபடியே வருகின்றன. இச்சை என்ற எளிய கோலத்தில் தொடங்கும் தங்கத்துடனான அவன் உறவில் மெல்ல மெல்ல காதலின் உயர்படி நிலைகளைக் கண்டடைகிறான். அனால் இவனது குணவார்ப்பின் எதிர் நிலைதான் தங்கம். அவள் இறுதி வரை சமநிலை குலையாத ஆளுமையுடையவள். அவளது காதல் எத்தகையது? அது உணர்ச்சிகளின் முகடுகளும் அகடுகளும் அற்ற ஒரு நேர்க்கோடாக இருக்கிறது. ஆனால் அவன் நாவல் முழுக்க இடறிக் கொண்டே இருக்க சலனமற்ற ஒரு புதிராக தங்கம் இறுதிவரை அவனை நிலைகொள்கிறாள். இந்த முரண் இவ்விருவருக்கிடையே வாழ்வின் அற்புதமான பகடையாட்டத்தை ஆடிக் காண்பிக்கிறது. இங்கு தான் ஜி. நாகராஜன் வாழ்க்கையை மிக அறிய கோணங்களை நமக்கு படம் பிடித்து காட்டுகிறார்.

ஜி. நாகராஜனின் கதை விவரிப்பு, நூலை கீழே வைக்கமுடியாத விறுவிறுப்பையும், அதிர்வலைகளை உண்டாக்கும் எதார்த்தத்தையும் நமக்குத் தருகிறது. பாலியல் தொழிலின் பிரச்சனையை அவர் நேரடியாகப் பேசவில்லை ஆனால், ஆழத்தில் அது தான் கதையாக்கப்பட்டிருக்கிறது. இதை ஒரு பிரச்சாரமாக சொன்னால் அதன் தாக்கம் குறைவு என்பதை உணர்ந்து அது உறவுகள் வழியாக வெளிப்படுத்தி இருப்பது நம்முள்ளே மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இரு நாவல்களையும் ஒரு சேர வாசித்தால் இரண்டும் எதிரெதிர் படிமங்கள் என நிதானமான புத்தி எடுத்துரைக்கலாம் ஆனால் வாசித்தபடி இரு களங்களையும் உணர்ந்தால் பல்வேறு மனிதர்கள் எதிரெதிர் நிலைகளிலேயே வாழ்ந்தும் சூழலுக்குத் தகுந்தவாறு மனம் பிளந்து ஒரு புள்ளியில் நிலை பெற்று நழுவுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.
இவருடைய நாவல் மற்றும் சிறுகதைகள் ‘ஜி நாகராஜன் ஆக்கங்கள்’ என்கிற பெயரில் முழுதொகுப்பாக வெளிவந்துள்ளது. ‘காலச்சுவடு’ பதிப்பகம் நவீனத் தமிழ் கிளாசிக் நாவல் வரிசையில் இந்த நூலை வெளியிட்டு உள்ளது.
ஒரு வித்தியாசமான நிதர்சன அனுபவங்களைப் பெற நண்பர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.

சேர்த்தவர் : SangeethaRG
நாள் : 9-Dec-15, 5:07 pm

நாளை மற்றும் ஒரு நாளே குறத்தி முடுக்கு தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே