எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

குறிப்பு: வாசகர்களின் கவனத்திற்கு, வரலாறு என்று நான் இங்கு குறிப்பிடும் கருத்துக்கள் சாதி, மதம் சார்ந்தவைகளைப் பற்றியதல்ல. தமிழ் என்ற ஒரு மொழியைப் பின்பற்றும் ஒரு இனம் அதாவது தமிழன்(ர்) என்ற மரபு மற்றும் அவ்வினத்தாரின் பழக்கவழக்கங்களின் அடிப்படையில் ஆராயப்பட்ட கருத்துக்களாகும்.
வாசகர்கள் இப்பதிவின் நீளத்தைப் பார்த்து ஒதுக்குவார்களோ என்ற ஐயப்பாடு என்னுள் எழுகிறது. இருப்பினும் சொல்ல வந்த கருத்துகளைச் சொல்லியே தீரவெண்டும் என்ற உறுதியுடன் இங்கு பதிவிடுகிறேன்.  
இன்றைய காலகட்டத்தில் நாமனைவரும் அறிவியலின் அசுர வளர்ச்சியில் இணைந்து பயணிக்கவே விரும்புகிறோம். ஒவ்வொரு நாளும் புதுப்புது தொழில்நுட்பங்களும் கண்டுபிடிப்புகளும் நடந்த வண்ணமுள்ளன. செங்கல்கட்டி போலிருந்த கைப்பேசி இன்று ஸ்மார்ட்ஃபோன் (சரியான தமிழ் பெயர் தெரியவில்லை) என்று வளர்ச்சியடைந்து பயனுள்ள பல நுட்பங்களுடன் உள்ளது. (மறுமுனையில் தொழில்நுட்பங்களால் நமது வாழ்வும் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது என்பது வேறு)
மாட்டுவண்டியில் சென்ற காலம் மறைந்து, பேருந்தில் சென்ற காலம் போய் இன்று புல்லட் ரயிலில் பயணிக்கும் காலத்தில் இருக்கின்றோம். குருகுலக் கல்வி, அரச மரத்தடியில் கல்வி, எழுத்துப் பலகை, பள்ளிக்கூடக் கல்வி என்ற நிலையிலிருந்து, இன்று இணையக் கல்வி என்று வளர்ந்துள்ளோம்.  
மருத்துவத்துறையில் கண், காது, வாய், இருதயம், சிறுநீரகம், சர்க்கரை, புற்றுநோய் என்று பல்வேறு நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளோம். மரபணு சார்ந்த பல்வேறு வகையான ஆராய்ச்சிகளும் நடந்தவண்ணம் உள்ளன.
இந்த அவசர உலகத்தில் படித்துத் தெரிந்து கொள்ள பல பயனுள்ள விஷயங்கள் இருக்கும்பொழுது கடந்த காலத்தைக் கூறும் வரலாறு நமக்குத் தேவையா? பள்ளிக் குழந்தைகளிடத்திலும், மாணவர்களிடத்திலும் கணிதத்தையும், அறிவியலையும் கற்றுக்கொள்ளச் சொல்லாமல், வரலாற்றை ஒரு பாடமாகத் திணிப்பதில் நியாயமென்ன? இன்று பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் அதிகப் பாடசுமை உள்ளது, இதில் தேவையில்லாத இந்த வரலாற்றுப் பாடம் அவசியம்தானா? அப்படியே பள்ளித் தேர்வில் வரலாற்றுப் பாடத்தில் முதலிடம் பெற்றாலும் கிடைப்பதென்ன? இன்ஜிரியிங் கவுன்சிலிற்கும் மருத்துவ படிப்பிற்கும் போக முடியுமா, இல்லை விண்வெளி ஆராய்ச்சியாளனாகத்தான் ஆகமுடியுமா? இப்படி இருந்தால் வரலாற்றின் மீது நமக்கு வெறுப்புதான் வளரும்.
சரி ஓகே, நீங்கள் சொல்வதுபோல் வரலாற்றைத் தெரிந்துகொண்டால் விளையும் நன்மைதான் என்ன?
சோழர்கள் மரம் நட்டார்கள், சாலை அமைத்தார்கள், கோயில்களைக் கட்டினார்கள், குளம் வெட்டினார்கள், கப்பலோடிய தமிழன் வ.ஊ.சி/பாரதி/காந்திஜி சிறை சென்றார் என்று வரலாற்று வகுப்பில் எத்தனை முறைதான் இதைப் படிப்பது? சேர, சோழ, பாண்டியர்களுக்கிடையே எவ்விடத்தில்போர் நடந்தது? அப்போரில் யார் வெற்றி பெற்றார்? ராஜராஜ சோழன் யார்? அவன் அப்பா பெயர் என்ன? எத்தனை ஆண்டுகள் அவன் ஆட்சி செய்தான்? அவர்களின் முன்னோர்களின் வரலாறு என்ன?
தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டியவன் யார்? மாமல்லபுரம் சிற்பங்கள் எந்த அரசன் காலத்தில் உருவாக்கப்பட்டது? அன்றைய அரசர்களுக்கு எத்தனை மனைவியும் மக்களும் இருந்தனர் என்பதைப் பற்றிப் படிப்பதால், இன்று நமக்கு என்ன பயன்? போர் நடந்த வருடங்களை மனமம் செய்து தேர்வெழுதுவதில் என்ன பயன்? இதுபோன்ற செய்திகளும் கருத்துக்களும்தானே இன்று வரலாற்றுப் பாட புத்தகத்தில் உள்ளது.
இப்படி கற்கும் வரலாறு நமக்கு சோறு போடுமா? இல்லை நம் மொபைல் பில்லைதான் கட்ட உதவுமா? அலுவலகத்தில் வருமானம் பெருக்கி பதிவுயர்வு கிடைக்க வழி செய்யுமா?
இப்படி நாளை என்ன நடக்கும் என்பதை ஆராயாமல் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த விஷயங்களைப் பற்றி எண்ணுவதிலும் ஆராய்வதிலும் என்ன பயன்? வரலாற்றைத் தெரிந்து கொள்வதினால் நம் வாழ்வில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படுமா? அல்லது நம் தினசரி வாழ்வுக்குத் தான் வரலாறு உதவுமா?
மேற்குறிப்பிட்ட வினாக்களை ஆராயும்பொழுது, நம்மில் பெரும்பாலோனருக்கு வரலாறு அவசியமில்லை என்றே தோன்றும். ஆனால் என் பார்வையில் வரலாறு படிப்பது அவசியம் என்று தோன்றுகிறது.
என் ஆசான் பாரதி பாடியதுபோல், `பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்பதை ஏற்றுக்கொள்ளாவிட்டால், நாம் எதிர்காலத்தில் பின்தங்கி நிற்போம் என்பது உறுதி (பழையன என்று இங்கு பாரதி குறிப்பிட்டது பழமையான மூடபழக்கவழக்கங்களை என்பதை நன்கறிவேன்). இப்படி நாளும் ஓடிக்கொண்டிருக்கும் நாம், நமது அடையாளங்களையும், பல உண்மைகளையும் தொலைத்துவிட்டோம் என்பதே என் குற்றச்சாட்டு.
வரலாறு முக்கியம் அமைச்சரே’ என்று வடிவேலு சினிமாவில் நகைச்சுவையாகச் சொல்வதுபோல், இன்று நம்மிடமிருப்பது பெரும்பாலும் மறைக்கப்பட்ட உண்மைகளின் பிம்பமே! வரலாறு என்பது பெரும்பாலும் வெற்றி பெற்றவர்களால் எழுதப்பட்டவையாகும். அதனால் இன்று நம்மிடம் வரலாறாக உள்ளவற்றை முற்றிலும் உண்மை என்று சொல்லிவிட முடியாது.

பொதுவான நிகழ்வுகளைக் குறிப்பிட்டு, மறைக்க வேண்டிய உண்மைகளை நீக்கி காலச் சுழற்சிக்குத் தகுந்தாற்போல் இயற்றப்பட்ட பல்வேறு தொகுப்புகளின் வெளியீடுகளே இன்று வரலாறாக உள்ளது. அதே நேரத்தில் நம்மிடம் இன்றிருக்கும் வரலாற்றுத் தகவல்களனைத்தும் புனைக்கப்பட்டது அல்லது திரிக்கப்பட்டது என்றும் கூறிவிட முடியாது.
இன்று பள்ளிகளில் வரலாற்றுப் பாடம் ஏன் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பதை முதலில் அலசுவோம். வரலாறு என்பது ஒரு பொதுவான ஒரு பாடம், ஒரு மனிதனின் வாழ்வு என்பது அவனைச் சுற்றியுள்ள சுற்றம் அதாவது சமூகத்தை உள்ளடக்கியது. அந்தச் சமூகத்தின் இன்றைய வளர்ச்சி, நேற்றைய வரலாற்று முடிவின் தொடர்ச்சியாகும். பண்பட்ட அல்லது பக்குவப்பட்ட வாழ்க்கை முறைக்கு, நாம் நம் சுற்றத்தைப் பற்றித் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகிறது. எனவே ஆரம்ப காலத்திலிருந்தே பள்ளிசெல்லும் குழந்தைகளிடத்தில் வரலாற்றுப் பாடம் கட்டாயமாக்கப் பட்டுள்ளது.
இவ்வாறு சிறுவயதில் தன்னைச் சுற்றியுள்ளச் சமூகத்தைப் பற்றி தெரிந்து கொள்ளும் குழந்தைகள், பின்னாளில் தனக்கு வேண்டிய துறையை அவர்களாகவே தேர்வு செய்ய உதவுகிறது. அறிவியல் அல்லாத வரலாற்றையும், வரலாறில்லாத அறிவியலும் சாத்தியமில்லை. வரலாறு என்ற தாய் இருந்தால்தான் வளர்ச்சி என்ற ஒரு குழந்தைப் பிறக்கும். முன்னர் என்ன நிகழ்ந்தது என்று தெரிந்தால்தான், இனி என்ன செய்ய வேண்டும் என்ற எண்ணம் பிரசவிக்கும்.
உதாரணத்திற்கு, வட்டமான கற்பாறைகள் உருண்டோடியதாலேயே சக்கரம் என்ற ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. கற்களை உரசியாதால்தான் நெருப்பு உருவானது, இது தெரிந்திருக்காவிட்டால் உலகம் தோன்றிய நாட்களிலிருந்தே கேஸ் இருந்ததாக நம்பப்படும். இதுபோன்ற வரலாற்று நிகழ்வுகளே அடுத்த சந்ததியினரை சிந்திக்கத் தூண்டும் பொரியை ஏற்படுத்தும்.
எதுவும் அதுவாக நிகழவில்லை, கால மாற்றத்தாலும் வரலாற்று நிகழ்வுகளாலுமே ஏற்பட்டது என்பதை மாணவர்களுக்குப் புரியவைக்க வேண்டும். அதுபோல நம் தமிழின வரலாற்றை அடுத்த தலைமுறையினருக்குக் கட்டாயமாகச் சொல்லித்தர வேண்டும். அது நமது கடமையாகும்.
அலுவலகத்தில் ‘ஆர்கனைஷேசன் ச்சார்ட்’ ஐயும், கம்பெனியின் MD, CEO, COO, GM, HOD, HEAD OFFICE & BRANCHES என்று அனைத்தையும் தெரிந்து வைத்துத்திருக்கும் நாம், நம் முந்தைய சந்ததியினரைப் பற்றி தெரிந்து வைத்திருப்போமா?
எதுக்கு நான் பாரதியையும், ஔவையாரையும், தமிழ் மொழியின் தொன்மையைப் பற்றியும் தெரிந்து கொள்ளவேண்டும்? நாளை இந்த பாரதியா என் கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் கோட் எழுதித்  தருவார்? எனக்கு இஷ்டமில்லை, தொந்தரவு செய்யாதீர்கள் என்று ஒதுங்குபவர்கள் தான் நாம்!
ஏழாம் அறிவு படத்தில் குறிப்பிடுவதுபோல், தொலைந்த குழந்தைக்கு தான் யார், தனது பெற்றோர் யார், வீடு எங்கிருக்கிறது என்று தெரிந்து கொள்வது எவ்வளவு அவசியமோ. அதேபோல் தான் நாம் நம் வரலாற்றைத் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. வரலாற்றை நாம் மறந்ததினால்தான் அறிவியலையும் மறந்துவிட்டோம். வெளியிலிருந்து வந்து இந்நாட்டை ஆண்ட பலர் நம் பொன் மற்றும் பொருளை மட்டும் எடுத்துச் செல்லவில்லை, நம்முடைய பொக்கிஷங்களாக இருந்த பல அரிய கலைகளையும், மருத்துவ நுட்பங்களையும் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். அத்தோடு நிற்காமல் பயனுள்ள பல தகவல்களையும் அழித்துவிட்டு சென்றனர்.
அறிவியலை மறந்ததால் இன்று வெளிநாட்டவரிடம் கையேந்தும் நிலையிலிருக்கிறோம். நம்முடைய வீரமும், பெருமையும் நமக்குத் தெரியக்கூடாது என்றெண்ணி நம்மை ஆண்ட ஒவ்வொருவரும் திட்டமிட்டு அழித்துவிட்டனர். தமிழர்களின் வரலாறு மற்றும் கண்டுபிடிப்புக்களை உள்ளடக்கிய ஆயிரக்கணக்கான ஆபூர்வ புத்தகங்களும் ஓலைச் சுவடிகளும் இருந்த யாழ்ப்பாண நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது.  மாமேதைகள், யோகிகள் வாழ்ந்த இம்மண்ணின் சிறப்பை நாம் உணரத் தவறிவிட்டோம்.
பிறநாட்டான் நம் சிறப்பை அழித்தது ஒருபுறமிருக்க, இங்கு நாமே நமக்கிடையில் மதமாற்றம், மொழிமாற்றம், இனமாற்றம் என்று பிரித்துக் கொண்டு ஒன்றுபட்ட தமிழினத்தையே அழித்துக் கொண்டிருக்கிறோம். தமிழர் மரபு மற்றும் வரலாறு என்பது இன்று சாதி, மத (இந்து, கிறித்துவர், இஸ்லாமியர்) அடிப்படையில் பிரித்து வைக்கப்பட்டுள்ளது.
சாதி/மத வழியில் பல பயனுள்ள தகவல்களும் கண்டுபிடிப்புகளும் வேதம் என்று கூறப்பட்டு ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கே உரியது என்று பிரித்துவிட்டனர். அத்தகவல்கள் வெளிநபர்களுக்குக் கற்பிக்கப்படவில்லை.
உதாரணத்திற்கு எழுத்தாளர் பாலகுமாரன் உடையார் நாவலில் குறிப்பிட்டதுபோல், பெரிய கோவில் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த கொல்லர் இனத்தைச் சார்ந்தவரை பாம்பு கடிப்பதும், அதற்கு மருத்துவம் பார்க்க அச்சாதியினர் பிராமணர்களை எதிர்பார்த்து நின்றனர். பிராமணரும் தன் இனம் வளரச் செய்வதற்காகவும், தன் இனத்தவர்கள் பெரியவர் என்பதை நிலைநடத்துவதற்காக விஷமுறிவு பற்றிய தகவல்களை வேற்று சாதியினருக்குச் சொல்லித்தருவதில்லை. இதனால் ஒரு குறிப்பிட்ட சாதியினரை/மதத்தினரை எதிர்பார்த்து நின்ற நிலை உருவானது. இவ்வாறு இரகசியமாகக் கற்றுத்தரப்பட்ட பல அறிய தகவல்கள், காலச்சுழற்சியால் அடுத்த தலைமுறையினருக்குச் சென்றடையாமல் அழிந்துவிட்டது.
பின் ஆரிய திராவிடம் என்ற வேற்றுமை நம்மை பிரித்து நின்றது.
தமிழ்மொழி ஒரு தனிமொழி, அது சமஸ்கிருதத்திலிருந்து பிரிந்ததல்ல. ஆந்திரா அல்லது கேரளாவில் அங்குள்ளவரிடம் உங்கள் தாய்மொழி தமிழ் மொழியின் ஒரு பிரிவுலிருந்து தோன்றியதாகக் கூறினால், மறுகணம் நம் கண்ணத்தில் பளார் என்று அறை விழும். எங்கள் மொழி ஆரியத்திலிருந்து அல்லது சமஸ்கிருதத்திலிருந்து வந்ததாகக் கூறுவர். அதுவே கொஞ்சம் கோபக்காரனாயிருந்தால் தமிழ் மொழி மலையாளத்திலிருந்து வந்தது என்பார். அப்படியே அவர்கள் சொல்வதை ஏற்றுக்கொண்டால் நமக்கு குடியா முழுகிவிடும். தமிழ் என்பது எங்கிருந்து வந்தால்தான் என்ன? என் மூதாதையர்கள் போர்ச்சுக்கீசிரியர்களாக இருந்தால் எனக்கு என்ன பிரச்சனை?
இப்படியே எல்லா நிலைகளிலும் பிறர் சொல்வதை ஆராயாமல் ஏற்பதால் நாம் அவர்களுக்கு அடிமையாகும் நிலை உருவாகும். வடநாட்டான் உயர்ந்தவன், ஆரியமொழிதான் வேதமொழி அதுவே பெரியது. தமிழ் மொழி ஆரிய மொழியான சமஸ்கிருதத்திலிருந்து தான் உருவானது என்று நம்பி நம்மை அடக்கி ஆளமுற்படுவார்கள். வரலாறு தெரியாத நாமும் நம் அடையாளங்களைத் தொலைத்துவிட்டு திராவிட நாடோடிகளாகவே அடுத்துவரும் சந்ததியினரால் அறியப்படுவோம். அப்படியே அவர்களின் பண்பாட்டையும் பழக்கவழக்கங்களையும் பலவந்தமாக ஏற்க வேண்டிய சூழ்நிலை வரும். அவைமட்டுமில்லாது பிற்கால சந்ததியினரும் அடிமை மனப்பான்மையிலேயே வளருவார்கள். இப்படி நம் இனம் அல்லது முன்னோர்களின் சிறப்பை அறியாமல், காலப்போக்கில் அது நம் DNA விலிருந்து மறைந்துவிடும். பின் அடையாளமில்லாமல் அழிந்த இனம் அல்லது சமூகத்தில் தமிழனமும் அடங்கும்.
மஞ்சளை உடலில் பூசுவதும், வாசலில் தெளிப்பதும் சாமியல்ல அது அறிவியல் (நோய் எதிர்ப்பு Antibiotic) என்று இன்றைய தலைமுறையினருக்குச் சொல்லித்தர வேண்டும். மாட்டுச் சாணம் தெளிப்பது கிருமி வராமலிருப்பதை தடுக்கவே என்பதையும், வீட்டில் துளசி செடியும், வாசலில் வேப்பமரமும் வைப்பதன் காரணத்தையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். சித்தர்கள் விட்டுச் சென்றது, ஆயுர்வேத மூலிகைகள், பிணிநீக்கி, நோய்கொல்லி பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும்.
வரலாற்றை முறையாக பின்பற்றாததினால் இன்று மருத்துவம், விவசாயம் சார்ந்த பல எண்ணற்ற தகவல்களைத் தவறவிட்டுள்ளோம்.
நம்மை மூடியிருக்கும் சாதி அல்லது மதம் என்ற போர்வையை கிழித்தெறிந்து கோவிலில் தோப்புக்கரணம் போடுவது, கை கால்களை நீட்டி குப்புற விழுந்து தொழுவது, நமாஸ் செய்வதும் உடற்பயிற்சியே என்பதை சொல்ல வேண்டும்.
பழனியில் கர்ப கிரகத்திலுள்ள முருகன் சிலை நவபாஷானத்தால் ஆனதையும், அதன் மருத்துவ சிறப்பையும் விவரிக்க வேண்டும். கோயிலைச் சுற்றி வருவதும், காலையிலெழுந்து ஊருக்கு வெளியே உள்ள கோயிலுக்குச் செல்வதும் உடற்பயிர்ச்சியே என்பதை விளங்க வைக்கவேண்டும். அன்று நாம் உருவாக்கிய யோகாசனக் கலை, இன்று வெளிநாட்டிலிருந்து வந்து நமக்கே பயிற்றுவிக்கப்படுகிறது.
செல்போன், கம்ப்யூட்டர் தொழில்நுட்பங்களுக்கு மதிப்பளிக்கும் நாம், நம் முன்னோர்கள் விட்டுவிட்டுச் சென்ற பல அரிய கலைகளை புறக்கணித்து/மறந்து உடல் உபாதைகளைப் பெறுகிறோம். பின் வைட்டமின் மாத்திரை, இரும்புச் சத்து, சோர்வு, சர்க்கரை, இதய நோய் போன்றவைகளுக்காக பல லட்சங்கள் செலவு செய்து சிகிச்சை செய்கிறோம்.
அடுத்த தலைமுறையினருக்குச் சொல்லித்தராததின் விளைவாக, பயனுள்ள பல அறிவியல் சூத்திரங்களும் கலைகளும் அழிந்துவிட்டன. இவற்றைப் பேணிக் காப்பாற்றத் தவறியதின் விளைவு, நம்மைவிட சிறிய நாடுகளின் வளர்ச்சியை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். உரத்திற்காகவும், மருந்துகளுக்காகவும் அவர்களின் இறக்குமதியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
பட்டப் படிப்பு மற்றும் மேனிலைப் படிப்பிற்கு வெளிநாட்டவரின் உதவியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அமெரிக்கா விசா தொகையை குறைத்துக்கொள்ள மாட்டானா என்று இறைவனிடம் வேண்டுகிறோம்.
இன்று பழந்தமிழ் வரலாறு நமக்கு எவ்வளவு முக்கியம் என்பதற்கான மிகச்சிறந்த எடுத்துக்காட்டு, சமீபத்தில் சென்னையில் பெய்த மழையும் அதனால் ஏற்பட்ட இயற்கைப் பேரழிவும்! வரலாற்றை நாம் புறக்கணித்ததால் விளைந்த அழிவேயாகும். அழிவிற்கான காரணம்தெரியாமல் அஃறிணையான மழையின் மீது பழி சொல்கிறோம்.
இப்பேரழிவிற்கான விடையை வெளியில் தேடவேண்டிய அவசியமில்லை, அது நம் வரலாற்றிலேயே உள்ளது. ஆம் வரலாறாக நாம் படிக்க மறந்த `பழந்தமிழரின் நீர் மேலாண்மை` என்பதுதான் அது. அன்றைய அரசர்கள் மழை நீரைச் சேமிக்க ஆற்று நீரைத் தடுத்து எழுப்பிய அணைகள், ஏரிகள், கண்மாய்கள், கரனை, தாங்கல், ஏந்தல், ஊரணி, குளங்கள் மற்றும் குட்டைகள் உருவாக்கியதே ஆகும்.
எனவே வரலாறு என்பது திரும்பத் திரும்ப நம்மிடம் நிகழும் தவறுகளை தடுக்க உதவுகிறது.    வரலாற்றைக் கற்பது அவசியமென்பதற்கான காரணங்களின் சுருக்கம்; தமிழ் மரபு மற்றும் பாரம்பரியத்தைக் காக்க தவறுகளைத் தடுக்க வாழ்விற்கு இன்றியமையாத, அன்றாடம் பழந்தமிழையும் பழந்தமிழரின் சிறப்பையும் அறிய மருத்துவம், அறிவியல் பற்றிய நம் சிந்தனையை மெற்கொண்டு செல்ல வரலாறு அவசியம் என்று ஏற்றுக்கொள்ளும் அதே நேரத்தில், இங்கு வரலாறு என்ற பெயரில் சொல்லித்தரும் பாடங்களிலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்களிலும் எனக்கு முழு உடன்பாடில்லை. ஆம், இன்று வரலாற்றுப் பாட புத்தகத்தில் இருப்பது உண்மைகள் மறைக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட நிகழ்வுகளின் ஒருசேர் பிம்பம்.
நமது அண்டை நாடான பாகிஸ்தானுடனான காஷ்மீர் பிரச்சனைப் பற்றியும், அதற்கான அடிப்படைக் காரணங்களென்ன என்பது வரலாற்றுப் பாடத்தில் கற்பிக்கப்படுகிறதா? சீனாப் போர் எதற்காக உருவானது, அதற்கான காரணங்கள் என்ன என்பது தெரியாவிட்டால் நாளை வடகிழக்கு மாநிலங்களனைத்தும் அவர்கள் வசம் செல்லும். நாமும் சந்தோஷமாக அதை ஏற்போம். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக நம் நிலம் பிறருடையாதாகும்.
எனவே வரலாறு என்னவென்பதை நாம் அடுத்த தலைமுறையினருக்குக் கட்டாயமாகச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதற்குமுன் எது சரியான வரலாறு என்பதை நாம் ஆராய்ந்து  தெரிந்துகொண்ட பின்னரே பிழையின்றி அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்.
இவற்றைச் செய்யத் தவறினால்,  நம் பழந்தமிழரின் வரலாறாகவுள்ள கலை, இலக்கியம், மருத்துவம், வேளாண்மை, அறிவியல் என்று மிஞ்சியிருக்கும் ஒருசில தகவல்களும் பேப்பரிலேயே அழிந்துவிடும்.
வரலாற்றை தெரிந்து கொள்வதால் பண்பட்ட ஒரு மக்கள் சமுதாயதம் உருவாக வழிவகுக்கும். மேலும் அது மனிதனை சிந்திக்கத் தூண்டுவதோடு மட்டுமில்லாமல், நாம் யார் என்ற தேடலையும், தன்னம்பிக்கையையும் நிச்சயம் வளர்க்கும். 
`மாற்றமொன்றே நிலையானது`, மாற்றத்தை ஏற்க வேண்டியது அவசியம். அதேநேரத்தில் நம் வரலாற்றுச் சிறப்புகளை உதறித் தள்ளிவிட்டு பிறர் கூறுவதை ஏற்க வேண்டிய அவசியமில்லை. நாம் அடுத்த தலைமுறையினருக்கு பணம், பொருள் போன்ற சொத்துக்களை விட்டுச் சென்றால் அது அவர்களுக்குப் பயனளிக்காது.
இன்றைய சிறுவர்களின் சராசரி IQ திறன் அதிகரித்துள்ளதாகப் படிக்கிறோம். அவர்களிடத்தில் காரணமில்லாமல் ஒரு காரியத்தைச் செய்ய சொன்னால் அவர்கள் விரும்பிச் செய்யமாட்டார்கள். என்வே வரலாறு கற்றலின் இன்றியமையாமையை முறையான சான்றுகளோடு எடுத்துரைத்தால், நாளை அவர்களாகவே ஒவ்வொன்றையும் பிரித்தறிந்து, ஆராய்ந்து கால மாற்றத்திற்குத் தேவையானவற்றைத் தேர்ந்தெடுப்பர்.
வரலாறு என்பதை பள்ளியில் வெறும் நூறு மதிப்பெண்களுக்காகக் கற்றுக் கொடுக்கப்படும் பாடமாகக் கருதாமல், படித்தால் வருமானம் வருமா? வேலை கிடைக்குமா என்று தர்க்கம் பேசுவதையும் தவிர்த்து – கலைகள் மற்றும் வரலாறு என்பது நம் ஒவ்வொருவரின் அடையாளங்களாக எண்ணி அவற்றை அடுத்தடுத்த தலைமுறைக்கு விளக்கிச் சொல்வது நமது கடமை. சொந்த அடையாளத்தின் மீது மரியாதை இல்லாதவர்களுக்கு தன் மேலும் மரியாதை இருக்காது.
இதைப் பற்றி எழுத இன்னும் எவ்வளவோ இருக்கிறது. இவைசார்ந்த கருத்துக்களை இன்னொரு பதிவில் எழுதுகிறேன்.
வாசகர்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன.

மேலும்

@KRR , நீங்கள் குறிப்பிட்டதைப் போல் பழமையான பயனுள்ள பழக்க வழக்கங்களை அழித்ததும் நாம், இன்று அவற்றைத் தேடி அலைவதும் நாமே. தங்களுக்குத் தெரிந்த, கிராமங்களில் கடைபிடிக்கப்படும் பல நல்ல தகவல்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். பல நாட்களாக எழுத வேண்டும் என்றெண்ணிய பதிவு. இத்தலைப்பில் எழுத இன்னும் எவ்வளவோ உள்ளது... கருத்துக்களுக்கு நன்றி. 19-May-2016 1:08 am
கருத்துக் களஞ்சியத்துக்கு பாராட்டுகள். கிராமியத்தவன் என்ற முறையில் எனக்குத் தெரிந்தவரை கிட்டத்தட்ட எல்லா பழமையான வழக்கங்களும் கிராமங்களில் நடைமுறையில் இருக்கிறது. தலைமுறை இடைவெளி என்ற வார்த்தையை கொண்டு வந்து அறிவியல் பூர்வமான பல பழமைக்கு வழியனுப்பு விழா கொண்டாடி விட்டு இப்போது நினைக்கிறீர்கள். இதுமட்டுமல்ல இன்னும் போகப் போக இருக்கிறது. 08-May-2016 11:08 am
@ nithyasree, தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி! வரலாற்றைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் நம்மிடம் மிகக் குறைவே. தமிழ் மொழி வழிக்கற்றலின் மறைவும், நம்மிடம் குறைந்துவரும் பொறுமையின்மையும் இதற்கு முக்கியக் காரணங்களாகும். இதுபோன்ற நண்பர்களின் கருத்துக்களே இன்னும் எழுதத் தூண்டுகிறது. நன்றி! 05-May-2016 12:11 pm
@ வேலாயுதம், தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி! நேரம் கிடைக்கும் பொழுது எனது வலைப்பக்கத்தையும் வாசித்துச் செல்லுங்கள். 05-May-2016 11:53 am

மேலே