எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.


பறவைகளின் பிரார்த்தனை..!

சுதந்திரமென்ப தனைவருக்கும் பொதுவானால்
—சுதந்திரமாய்த் திரியும் பறவையின மதில்சேராதோ.?
அகத்தில் மனிதனை அடைத்தாலது பாவமெனில்
—ஜகத்தில் பறவைக்கது பரவலாய்ப் பொருந்தாதோ.?


பகையின்றி வாழ்ந்தோம் பகட்டாகப் பறந்தோம்.!
—பூவெழில் வனப்புடன் வட்டமாய்த் திரிந்தோம்.!
வகையாயெமைக் கூண்டிற்குள் அடைத்து விட்டான்.!
—பகையானான் பரந்த மனம்கொண்ட பறவைக்கே.!


அனைத் துயிருக்குமொரே நீதியெனில் பறவையை
—அடைத்து வைக்கும் செயலுக்கெனத் தனிநீதியா.!
அநியாயமாய்க் கூண்டுளடைத்தது? ஏனெனக் கேட்டால்
—அன்பு பாசமென்பார் அனைத்துமே பொய்யாகும்.!


கனியைப்பறித்தீர் காடுகளைக் கருணையின்றி அழித்தீர்.!
—கட்டுக்கடங்கா யெம்சுதந்திர மதைநீர் தட்டிப்பறித்தீர்.!
குற்றம்கண்டா? கூண்டிலே அடைத்தீர்? எனக்கேட்டால்
—பற்றுக்கொண்டே அடைத்து வளர்க்கிறே னென்பார்..!


பறவைகள் பூமிக்குக் கிடைத்ததோர் புண்ணியஜீவன்.!
—இயற்கையைக் காக்குமுயருளம் கொண்ட உயிரினம்.!
எம்மைச் சொந்தமாக்கக் கூண்டுக்குள் அடைத்தசெயலை..
எந்தமன்றத்தில் வழக்காடியாம் விடுதலை பெறுவோம்.!?


யாரிடம் கேட்பது பாவத்துக்கு மோட்சமுண்டாவென
—ஆரூடம் சொல்லென கூண்டுக்கிளியிடம் கேட்டேன்?
பந்தயம் வைத்து ஆரூடம் சொல்லி நம்மால் பிழைக்கும்
—பாவமனிதரும் பிழைக்கட்டுமெ யென்றான் சகோதரன்.!


வளமுடன் வாழ்கவென்பான் ஆரைப் பார்த்தாலும்.!
—வானிலே பறந்த எங்களை வலைவைத்துப் பிடிக்க..
அனுதினமும் வருவான் அருமையாய்ப் பேசுவானவன்.!
—அடிமை வாழ்வு கொடிதெனச் சற்றும் உணராதவன்.!


சிறுஅறையைச் சுத்தம்செய்ய நித்தமவன் வருவான்.!
—கறுப்புள்ளக் கயவனைக் கண்டுகொள்ள மாட்டோம்!
மிரண்டகண்ணுடன் மீளாத்துயரோடு வானை நோக்கிய
—இருண்ட வாழ்வெனும் பறக்கமுடியா பரிதாபநிலையுடன்.!


இறகோடுபிறந்து இரும்புச் சிறையில் வாழுமெமக்கு..
சிறகையேன் படைத்தாய்?சிந்திக்கிறோம் பலநாளும்!
கூண்டுக்குள் குடும்பம்செய்தே குறையிலா வாழ்வுபெற..
—குஞ்சொன்று வேண்டும் சிறகில்லாமல் அருள்வாயா.!இறைவா…

===============================================

வல்லமை மின் இதழ் நடத்திய படக்கவிதை போட்டியில், இன்றுமுதல் சனிக்கிழமை வரை சிறந்த கவிஞரென பாராட்டுபெற்ற கவிதை..

நன்றி பட உதவி:: கூகிள் இமேஜ்

மேலும்

கூண்டுக்குள் அடைப்பட்ட பறவைகளின் உள்ளத்தின் சுவாசங்களை ஆறறிவு மொழிபெயர்த்துள்ளது என்பேன் எத்தனை இனிமைக்குள் அடைப்பட்டு வாழும் அடிமை வாழ்நிலையில் பறவைகளை போல் மனிதர்களும் இன்றைய உலகில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் சுமைகளின் தேசத்தில் சுகங்களை தேடியலைகிறது இளவேனிற் காலம் 15-Jul-2017 8:03 pm
மேலான கருத்துப் பதிவுக்கு நன்றி..திரு ரஹ்மான்.. 15-Jul-2017 6:18 pm
அழகிய வரிகள், பறவைகளுடய மனதின் காட்சிப்பேழையாய் இக்கவிதை!!!! 14-Jul-2017 8:32 pm
கவிதைப்போட்டியில் இடம்பெற்ற இணையத்தின் லின்க்கை இங்கே காப்பி செய்ய முடியவில்லை, ஆதலால் அதில் இடம்பெற்ற முடிவுகளை மட்டும் இங்கே கொடுத்திருக்கிறேன். போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையுமபெற்றவர். இவருடைய வலைப்பூ...மணிமிடைபவளம். இக்கவிதை பற்றிய நடுவர் அவர்களின் கருத்து.. ============================================ ’சுதந்தரம் எனது பிறப்புரிமை’ என முழக்கமிடும் மனிதன் அதனைப் பறவையினத்துக்கு மறுப்பது ஏன்? குற்றவாளிகளை மட்டுமே கூண்டிலடைப்பது வழக்கமாயிருக்க, குற்றமேதும் செய்யாத அப்பாவிப் பறவைகளைப் பாவி மனிதன் கூண்டிலடைப்பது எதனால்? சிறைப்பட்டிருக்கும் பறவைகள் எமக்குச் சிறகுகள் எதற்காக? என்று புறாக்களின் கேள்விகளால் தன் கவிதையில் வேள்வி செய்திருக்கும் பெருவை திரு. பார்த்தசாரதி இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் எனும் சிறப்பைப் பெறுகின்றார். அவருக்கு என் பாராட்டு! 14-Jul-2017 7:10 pm

மேலே