வளையல்

“இந்த வளையல் நல்லா இருக்கா பாருடி அடுத்தவாரம் நம்ம ரீட்டாக்கு நிச்சயத்துக்கு போட்டுக்க வாங்கினேன்” என்று நீலா சொல்ல,
“ ஆஹா, அருமையா இருக்குடி, உன் கைக்கு இது இன்னும் அழகா இருக்கும் “ என்று மாலாவின் உதடுகள் சொன்னாலும் உள்ளுக்குள் தானும் இதைவிட அதிக விலையில் வைர வளையல்களை வாங்கி அந்த நிச்சயத்துக்கு அணிந்து சென்று தன் மதிப்பைக் காட்ட வேண்டுமெனத் தீர்மானித்தாள்.
தன்னிடமிருந்த சேமிப்பு,அதிக வட்டிக்கு கடன், அலுவலகத்தில் லோன் , என பணம் புரட்டி புது வைர வளையல்கள் வாங்கி அணிந்து சென்றாள்.
நீலா, மாலா இருவரின் வளையல்களையும் பார்த்த ரீட்டா புகழ்ந்து பேச, நீலா தன் வளையல்களை கழட்டி ரீட்டாவின் கைகளில் அணிவித்துவிட்டு வந்தாள்.
மாலாவோ நீலாவிடம் ”ஏண்டி உனக்குப் பைத்தியமா? அவ்வளவு விலை உயர்ந்த வளையலை ரீட்டாவுக்கு குடுத்துட்டியே?” என்று கேட்க....
”விலை உயர்ந்ததா? அது டி. நகரில் 200 ரூபாய்க்கு தானே வாங்கினேன்” என்று கூற தன் செயலுக்கு வெக்கித் தலைகுனிந்தாள் மாலா.

எழுதியவர் : * வெண்ணிலா * (8-Jan-13, 4:07 pm)
பார்வை : 277

மேலே