வெகு அருகிலாவது வாருங்கள் !
வீண் விடயத்தை
வான் அலற - பெருத்த
ஊன் கண்ட - வன
விலங்காய் மாறி...
உண்மை உறித்து
பொய்மை உடுத்தி
வரியாககவோ - காணும்
ஒளியாகவோ - பரப்பி
பரபரப்பை பம்பரமாய்
சுற்றவிடும் சூத்திரதாரிகளே !
விடிந்ததும் வந்துவிழும்
விருந்தாளிகளே...
புரட்டு தவிர்த்து புரட்டினால்
வெறும் தாள்களே...!
கல்வியை ஓரம்கட்டி
கள்ளகாதலுக்கு கட்டம்
கட்டும் - சட்ட வியாதிகளே !
வாய்களில் ஆங்கிலம்
ஒட்டிக்கொண்டு - ஓடி
ஓடி செய்தி பொறுக்கி...
காணொளியின் காலடி
துப்பும் - தொலைக்காட்சிகளே...
தேவையான செய்தியை
தேவையின்றியும் - அன்றி
மற்றதை தேவையுடனும் - காதில் பூ
சுத்தும் - தொல்லைக் காட்சிகளே !
சர்ச்சைக்குரிய
தலைவனோ - மூர்ச்சையாகிய
ஒருவனோ - முற்றுமோ
அன்றி அரை முற்றுமோ
துறந்த நடிப்புத் தாரகையோ...
இல்லாமல் இல்லை - உங்கள்
புத்தகத்தின் ஒரு பக்கமும் !
அடித்தொண்டையின்
ஆழத்திலிருந்து - தூய
தமிழை தூசுத் தட்டி
எடுத்து வீசும் - கோபிகளுக்கே
ஆங்கிலக் குழாய்களும்
குல்லாய்களும் அவசியமாவதில்
இருக்கிறது அதிசயம் !
நடந்தேறிய பலாத்காரம் - உம்
வாய்களுக்கோர் பலகாரம் !
கொன்றுகுவிப்போ - குண்டுவெடிப்போ
பேரழிவோ - பெருவிபத்தோ
பிறவி பத்தோ - மட்டைப் பந்தோ
எதுவாயினும் - உங்கள் வாய்க்கு
சோளப்பொறியே - அடங்காது
உங்கள் தாகம் - தாக்காமல் !
காசு வாங்கிக் கொண்டு
எதை வேண்டுமானாலும்
திரித்து எழுதியும்,
திரிந்து பேசியும் வாழ்பவனா
பத்திரிக்கையாளன் ?
செய்தி உறித்து
செந்தோள் கிழித்து
வரும் தகவலின்
குரல்வளை நெறித்து
கொன்றுவிட்டு - நெறிமாறி
புத்துயிர் புனைந்து
பெயர் சூட்டி மகிழ்ந்து
செய்தியை தீமூட்டி
செய்"தீ "யாக்கி - என் மூளையை
குப்பைதொட்டியாக்க வேண்டாம்...
உண்மைகூட வேண்டாமெனக்கு
வெகு அருகிலாவது வாருங்கள் !