ஓர் அழுக்கு தேசத்தவன்......

விஷமூற்றிப் பெருக்கிய
கண்ணாடிப் பொதிவுகள்
வீசியிறைக்கிறது.......
ஓலைக்கூடை ஏந்திய
அடையாளக் கூடுகளை.......

தெறித்து வீழ்ந்த
தீக்கனல் சிலதும்
சாம்பல் துகள்களாய்க்
கரைந்தோடுகிறது
ஏளனக் கழிவுகளிநூடே......

திளைத்த கள்ளும்
திகட்டிய சாறுமாய்
நிமிர்ந்தேறித் திமிறியது....
காலிக் குப்பிகளின்
கடைசிச் சொட்டுகளுக்காய்
கைகூப்பிக்
குழைந்தாடுகிறது........

எந்திரச் செதுக்கங்களின்
வன்புணர் வலிகளோடு
சுண்ணாம்பு பரவல்களினுள்
புதைந்தழுகிறது
சேற்று வாசப் பதுமைகள்....

துகிலுரிந்த பெண்மையும்
தொலைத்தழித்த
சுயங்களுமாய்க் கடந்து
இன்னும் பிரயாணிக்கிறேன்
அடையாளம் தொலைத்த
ஓர்
அழுக்கு தேசத்தவனாக.........

எழுதியவர் : சரவணா (8-Jan-13, 7:39 pm)
பார்வை : 93

சிறந்த கவிதைகள்

மேலே