தை மகளே வருக (பொங்கல் கவிதை போட்டி)
தரணியெல்லாம் தழைத்தோங்க
தங்கமணி நெல்லுடனே
தித்திக்கும் கரும்பு தந்த
தை மகளே வருக...!!
பெண்களெல்லாம் பெருமையுடன்
பாங்காய் அரிசி வெல்லமிட்டு
பொங்குமந்த பொங்கலோடு
பொங்கும் இன்பம் தருக..!!
தொன்று தொட்டு வந்த வழக்கம்
தொலைந்து போன போதும் கூட
தொலைகாட்சி வழி வந்த
தை மகளே வருக..!!
அன்று போல் இன்று இல்லை
ஆனந்தத்தின் அளவு அது
ஆனபோதும் அள்ளி அள்ளி
அமைதியை நீ தருக..!!
மண்ணோடு வளம் தங்க
மழையென்ற வரம் தருக
மாறாத மகிழ்ச்சி கொண்டு
மாசிக்கு முன்னே வருக..!!
பழைய பொருள் பின்னோடு
பழுதான பழக்கமெல்லாம்
போகியோடு போனபின்னே
பண்போடு புதுமையினை தருக..!!