மீள் பதிவு -- சாம்பல் காடு பகுதி 3
இங்கு வாசிக்க வந்த என் அன்பார்ந்த நெஞ்சங்களுக்கு என் நெஞ்சுருகும் ஒரு வேண்டுகோள்.
தயவு கூர்ந்து பொறுமை காத்து, இந்த தொடரின் வாசிக்கும் கருணையை இறுதிவரையில் தொடர்ந்து செல்வதில் காட்டவும்.
இது மனித குலத்தில் பிறப்பெடுத்த நம் அனைவரின் மனிதக் கடமையாகும் என்பதை கண்ணீர் மல்க வேண்டிக் கொள்கிறேன்.
1)
இந்தப் பகுதியில்
நூற்றி நாற்பத்தி நாலு
அமுலுக்கு வந்துள்ளதாம்.
நாற்பத்தி நாலு
மனிதப்பூக்களை
உயிரோடு
தீயிட்டுக் கொளுத்திய
அந்தக் காட்டு மிருகங்களைப்
பாதுகாக்க
நூற்றி நாற்பத்தி நாலை
அமுலுக்குக் கொண்டு வந்தார்கள்.
நாற்பத்தி நாலு மனிதப்பூக்களை
தந்தூரி அடுப்பிலெரித்த
காட்டு மிருகங்களை
போலீஸ்படை
அற்புதமாய்ப்
பாதுகாத்துக் கொண்டிருந்தது
வரலாற்றையே அழுக்காக்கிய
அந்த கோபாலகிருஸ்ண நாயுடு
ஊஞ்சலில் உட்கார்ந்து
பாதாம் பருப்புகளைச் சுவைத்துக் கொண்டே
ஆடிக்கொண்டிருக்கிறான்.
மின்விசிறி சுழல சுழல
ஆழ்ந்த சிந்தனையில்
மூழ்குகிறான்.
போலீஸ்படை
அவனுக்கான பாதுகாப்பில்
வேர்த்து விறுவிறுக்க
மூழ்கி கிடக்கிறது.
(2)
பிணக்காடாய் மாறியிருந்தது
அந்தச்சேரி.
அங்கேயொரு
குடிசை இருந்ததற்கு
அடையாளமாய்
மண்சுவர் மட்டும்
உயிர்த்திருந்த்து.
எலும்புத்துண்டுகளும்
சாம்பலும்
அந்தக்குடிசை முழுக்க
புதைந்திருந்தது.
கையகல மனிதக்குஞ்சுகள் கூட
கரிக்கட்டையாய்க்
கருகிப்போய்க்கிடந்தன.
அந்த
எரிந்து போன ஹிரோஷிமாவை
ஓரிரு ஜீவன்கள்
வந்து பார்த்துச் சென்றன.
குடிசையைச் சுற்றிக்
கூக்குரல்.
குழுமியிருந்த மக்கள் கூட்டம்
அழுது அழுது
எரிந்து போன
தங்கள் இதயத்தின் சாம்பலை
கண்ணீராய்
வெளியேக் கொட்டினார்கள்.
அந்த
அழுகின்ற கூட்டத்திற்கு மத்தியில்
ஒருத்தி மட்டும்
நம்பிக்கையேந்தி
நிமிர்ந்து நிற்கிறாள்.
அவள் பெயர் பொன்னம்மாள்.
அந்தச் சேரியையே
சுடுகாடாக்கிய
மனித அநாகரிகங்கள் வருகிறார்கள்.
பொன்னம்மாளிடம் கேட்கிறார்கள்
“செங்கொடி செங்கொடின்னு
கத்துனிங்களே
பார்த்தீங்களா இப்ப
செங்கொடி
உங்களுக்கு என்ன தந்திருக்கு”-ன்னு
அந்த வீராங்கனை
கொடுங்கோலர்களுக்கு
பதிலிறுக்கிறாள்
“போங்கடா நாய்களா!
ஆளும் வர்க்கத்தின் நிழலில்
உயிர் வாழ்வதைவிட
செங்கொடியின் நிழலில்
மரித்துப் போவதையே
பெருமையாக நினைக்கிறோம்”
ஆம்!
அழிப்பதற்கும் கிழிப்பதற்கும்
செங்கொடியொன்றும்
துணியால் நெய்யப் பட்டதல்ல
எங்கள்
துணிச்சலால் நெய்யப்பட்டது.
இன்னொரு பெண்
அந்த எரிந்த குடிசைகளையே
பிரமை பிடித்தவளாக
பார்த்துக் கொண்டே இருந்தாள்.
பதினோரு பேரைப்
பலி கொடுத்தவள் அவள்.
எரிந்து போனவர்கள்
மீண்டும் வருவார்களென்ற
எதிர்பார்ப்போடு
அந்தக் குடிசைகளையே
பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
அவள் கண்களில்
ஒரு நியாய தீர்ப்பு நாளுக்கான
எதிர்பார்ப்பு.
படைத்தவர்: சுந்தரபாண்டியன் (திருப்பூர்)
நாள்: 29-12-2012: நேரம்: 09:15:58
பார்வை: 43 ( 11-01-13 ன் படி)
இது கருணை யாசகம் கேட்கும் நோக்கில் படைக்கப்பட்ட படைப்பு அல்ல. உணர்வுகளை எழுதி காசாக்கும் வியாபார நோக்கான மீள் படைப்பும் அல்ல. மனிதகுலம் மனிதத்தில் தழைக்க வேண்டும்.
இனியாவது நாம் உயிர்த்தியாகங்களை பார்வையாளராக நோக்காதிருக்கும் சிந்தனை பெறுவது அவசியம் என்பதை எல்லோரும் உணரும் தருணத்திற்காக ஏங்கும் நினைவில் வந்த படைப்பும் மீள்பதிவும்.