திக்...திக்...இரவில்...!
இன்னிக்கு ராத்திரி நான் மட்டும் வீட்ல தனியா தங்கணும் அவ்வ்வ்வ்வ்வ்! எல்லா நண்பர்களும் விடுமுறைக்காக ஊருக்குப் போயிருக்கும் இந்த சீக்கிரமே இருட்டி ரொம்ப லேட்டாய் விடியும் மார்கழி மாத சென்னையில் காமராஜபுரம் உள்ள ரொம்பவே ரிமோட்டா இருக்குற ஏரியாவுல வீடு பாக்க வந்தப்பவே ப்ரண்ட்ஸ் கிட்ட சொன்னேன்.... டேய்.. என்னங்கடா இது ஒரு வீட்டுக்கும் இன்னொரு வீட்டுக்கும் ஒரு தொடர்பே இல்லை... தள்ளி தள்ளி தூரமா இருக்குன்னு...எவனாவது காது கொடுத்து கேட்டானா...?
எனக்கு வேணும்..? எனக்கு வேணும்...? திமிராவே எப்பவும் பேசிப்பேசி அந்த பில்டப் என்னைய கொண்டு வந்து விட்டு இருக்க இடத்த பாத்தீங்களா? பக்கத்துல ஒரு பழைய வீடு கொஞ்சம் தள்ளி, அதுவும் தெருவுல இருந்து கால நேர அந்த வீட்டுக்குள்ள வச்சிடலாம். அந்த வீட்டுக்கு பின்னால பெரிய காடு மாதிரி மரம் மட்டை எல்லாம்..இருக்கறது எல்லாம் பிரச்சினை இல்லைங்க அந்த வீட்ல ஒரு ரெண்டு மூணு வருசமா யாருமே இல்லையாம்....!
செம பழைய வீடு...! அதோ அந்த தெரு முனையில இருக்கு பாருங்க ஒரு பெரிய வீடு அந்த வீட்ல இருக்க எஸ்தர் ஆண்ட்டி சொன்னாங்க அங்க யாரோ தூ.....க்க்க்க்கு போட்டு செத்துப் போய்ட்டாங்களாம்...அதனால யாரும் தங்கறது இல்லப்பான்னு... இது எல்லாம் அப்போ நாலஞ்சு பேரு ப்ரண்ஸோட இருந்தப்ப நினைவுக்கு வந்து தொலைக்குதா.. ங்கொய்யால தனியா இருக்கும் போது சரியா குறிபார்த்து பிரெய்ன அட்டாக் பண்ணுது...
நாங்க இருக்குற வீட்டுக்கு முன்னால பெரிய காலி இடம்.. வெளியில கல் ஊன்றி கம்பி போட்டு இருப்பாங்க.. அந்த எடத்துக்கு சொந்தக்காரங்க. சேலையூர்ல இருக்காங்க வாரவாரம் இல்ல ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை வருவாங்க வந்து செடி கொடிய எல்லாம் எண்ணிட்டு யாருகிட்டயுமே பேசாம உர்ர்ர்ர்ன்னு போய்டுவாங்க... அதுவும் பேச்சிலர் பசங்க தங்கி இருக்காங்கன்னா.. ஏந்தான் இந்த பேமிலி மேன்ஸ்க்கு எல்லாம் இப்புடி டக்ஸ்ட்டன் ஆகுதோ...???!!!!!
தப்பானவங்க எங்க இருந்தாலும் தப்பானவங்கதான்... அவனுக்கு கல்யாணம் ஆச்சா? ஆகலையா? ஆம்பளையா, பொம்பளையா, வயசாளியா, இளந்தாரியா அது ஒண்ணுமே மேட்டர் இல்ல பாஸு..... ச்ச்ச்சும்மா கல்யாணம் ஆகாத பசங்களா..அப்போ வீடு தரமுடியாதுன்னு சொல்ற ஹவுஸ் ஓனர்ஸ எல்லாம் பாத்த.. என்னங்கடா உங்க ஸ்ட்ட்ரேட்டஜின்னு கேக்கத்தோணும்...! என்ன பண்ணி தொலைக்கிறது அவன், அவன் அனுபவம் அப்புடி...? நாம எல்லாம் எங்க பொறந்தோம் எப்புடி வளர்ந்தோம்னு வரலாற எடுத்து படிச்சாத்தானே இவிங்களுக்குத் தெரியும்...(கொஞ்சம் ஓவரா போய்ட்டேனோ பாசு.. ?ஹி ஹி போற போக்குல கண்டுக்காதீங்க..!!!!)
அவ்வ்வ்வ்வ்வ்வ் நான் பாட்டுக்கு உளறிகிட்டு இருக்கேன் பாருங்க... மணி ஒன்பதே முக்கால் ஆச்சு.. நானும் எம்புட்டு நேரம்தான் தைரியமா இருக்க மாதிரியே நடிக்கிறது... ! எங்க தெருவுல (தெருவாம் தெரு.. காடு சார்..அது...!!!!!) இருக்குற ரெண்டு வீட்ட பத்தி சொல்லிட்டேன்.
இன்னும் ரெண்டு வீடு எங்களுக்கும் உனக்கும் எந்த ஒட்டும் உறவும் கிடையாதுன்ற மாதிரி மூஞ்சிய திருப்பிகிட்டு அங்கிட்டு இருக்கு.. அந்த ரெண்டு வீட்லயும் காலேஜ்ல படிக்கிற பொண்ணுங்க இருக்கதால.. எங்க கூட அன்னம் தண்ணி பொழங்க மாட்டோம்னு அவுங்க கொல தெய்வத்துக்கு சத்தியம் பண்ணி இருக்காய்ங்க...(என்னமோ அந்த புள்ளைகள கட்டி நாங்க ஊருக்கு கூட்டிக்கிட்டு போவோம்னு கங்கணம் கட்டிகிட்டு மெட்ராசுக்கு வந்த மாதிரி....அட..அட்லீஸ்ட் நாங்க அப்டீ இல்ல சார்னா நம்பவா போறாய்ங்க...!!!!)
வரும் போதே காமராஜபுரம் பஸ்டாண்டல மாரிமுத்து அண்ணன் கையேந்தி பவன்ல வஞ்சனை இல்லாம சாம்பாருக்குள்ள இட்லிய முக்கு, முக்குனு முக்கி மொக்கு, மொக்குன்னு மொக்கிட்டு வந்துட்டேன்.. இன்னிக்குனு எனக்கு பர்ஸ்ட் ஷிப்ட் டூட்டி.....(என்ன வேலை பாக்குறேன்னு சொல்ல ஆரம்பிச்சா கதை படிக்க முடியாது பரவாயில்லையா...!!! ஹி ஹி) நைட் ஷிப்டே போட்டு இருக்கலாம்னு தோணிச்சு....
வீட்டுக்குள்ள வரும் போதே காம்பவுண்ட் கேட் எல்லாம் பூட்டி, வெளிக்கதவையும் பூட்டி... எல்லா ஜன்னலையும் பொத்தி பொத்தி அடைச்சு.. கொல்லைக் கதவை பத்து தடவை தாப்பால அழுத்திப்பார்த்து மோடிட்டு லைட்ட எல்லாம் அணைச்சுட்டு டிவி பாத்துட்டு இருக்கும் போதே பத்து தடவை ஜன்னல் கிளாஸ் வழியா வெளியில தெரு விளக்கு வெளிச்சம் எட்டிப்பாக்குறத பாத்து பாத்து.. அந்த ப்ரோஸ்ட்டட் கிளாஸ் வழியா ஒண்ணும் வெளிய தெரியலேன்னாலும்.. கதவ தொறந்து தொறந்து எல்லாம் ஓ.கேயான்னு பாத்துட்டே இருந்தேன்...
ஏண்டா நீ என்ன லூசா... போர்வைய போத்திகிட்டு தூங்க வேண்டியதுதானேன்னுதானே நீங்க கேக்குறீங்க.. எப்டி சார் தூங்க முடியும்...? மைடியர் லிசா வீடு மாதிரி வீடு சார்.. மேல் போர்சன் ஹவுஸ் ஓனர் பூட்டி சாவிய கொண்டு போய்ட்டாரு.. அங்க யாருமே இல்லை.. ரெண்டு பெட்ரூமும் ஆளுக இல்லாம.... ஹா.. ஹான்னு பி.எஸ். வீரப்பா மாதிரி சிரிச்சுகிட்டு இருக்கு....
கிச்சன் பக்கம் போகவே பயமா இருக்கு.. இந்த டிவி மட்டும் இல்ல அவ்ளோதான், அவ்வ்வ்வ்வ் மாரநாட்டு கருப்பு என் தலை மாடு நின்னு காப்பாத்து சாமின்னு நெத்தி நிறைய விபூதி அள்ளி பூசிகிட்டு.. போர்வைய போத்திகிட்டு.. சன்டிவி, ராஜ்டிவி, ஜெயா டிவி...விஜய் டிவி, சன் நியூஸ்ன்னு மாத்தி மாத்தி எம்புட்டு நேரம் பாத்துகிட்டு இருக்கறது...
கை தவறி எச். பி. ஓ சேனல வச்சு தொலைச்சுட்டேன்... அதுல ஒரு கொலைகார மூவிய போடுற நேரமா இதுன்னு தெரியாம போட்டுகிட்டு இருந்தாய்ங்க... ஆணியே புடுங்க வேணாம்னு பெட்ரூம்ல படுக்காம ஹால்லயே இழுத்து போத்திகிட்டு டிவிய அமத்திட்டு.... மெல்ல மேல விட்டத்த பாத்தேன்... ஃபேன் சுத்துற சுத்துல ஃபேனோட நடு மையத்துல..ஹி ஹி ந்னு ஒ எப்பவோ எங்கயோ பாத்த ஒரு பேய்படத்துல வந்த பேய் மாதிரியே.....அவ்வ்வ்வ்வ்வ்
பேய் இருக்கோ இல்லையோ .....அது பத்தி பிரச்சினை இல்ல.... இருந்தா அது சாமிக்கு பயப்பட்டுத்தான் ஆகணும்... இல்லையா... நான் தலை மாட்ல முருகன் படமும் சிவன் படமும் வச்சு இருக்கேன்.கழுத்துல ருத்ராட்சம் போட்டு இருக்கேன்.....ஆ...ஆவ்....கொட்டாவி வந்துடுச்...ச்ச்ச்ச்ச்சு.............
சத்தம் கேட்டு நான் முழிச்சப்போ..... டக்குன்னு மணி எத்தனைன்னு பார்த்தேன்.. இரண்டே முக்கால்...வீட்டு வாசல்ல ஏதோ பேச்சுக்குரல் கேட்குது....மெல்ல எழுந்து போய் ஜன்னலை தொறக்க போனேன்.... நோ......டோண்ட்ன்னு உள்ள இருந்து ஒரு எச்சரிக்கை மணி அடிக்க எனக்குள்ள இருந்த அசகாய சூரன் ஜன்னல் கதவை தொறக்க என்னை அனுமதிக்கல...
ஒரு ஏழு எட்டு பேரு என் வீட்டுக் காம்ப்வுண்ட் பக்கம்.. நின்னுகிட்டு எங்க வீட்ட காட்டி காட்டி ஏதோ பேசிட்டு இருந்தது.. ப்ரோஸ்டட் விண்டோ க்ளாஸ் வழியா அசங்க மசங்கலா தெரிஞ்சுது...! போச்சுடா வந்துட்டாய்ங்க.. ஆளு இல்லாத வீடுன்னு தெரிஞ்சு, இல்ல நாம மட்டும் இருக்கோம்னு நோட்டம் பாத்துட்டு வந்துட்டாய்ங்க.. அவங்க அத்தனை பேரு.. நான் தனியாளு....என்ன பண்ண போறேன்....???? எப்படி சமாளிக்கப் போறேன்...?
உடம்பு வியர்க்கத் தொடங்கியது...நடு ராத்திரி.. யாருக்காச்சும் போன் பண்ணனும்னு பயத்துல தோணவே இல்லை.. ! நான் எப்டி தப்பிக்கிறது..? இல்லை உள்ள வந்து இங்க இருக்குற டிவிக்கும், பிரிட்ஜுக்கும் காம்பரமைஸ் ஆகாம என்கிட்ட எவ்ளோட பணம் இருக்குனு கேட்கலாம்.. நானும் என் பர்ஸ்ல இருக்குற மூவாயிரத்து முன்னூத்தி முப்பத்தி ஆறு ரூபா எழுவத்தஞ்சு காச எடுத்து கொடுக்கவும் செய்யலாம், என் வாட்ச், கழுத்துல இருக்க செயின் இதையும் கொடுத்துடலாம்... ஆனா என்னடா வேற ஒண்ணும் இல்லயான்னுனு சொல்லிட்டு கத்தியால குத்த வந்தா.........சார் வெளில நிக்கிற என் பைக்கையும் என் ப்ரண்டோட பைக்கையும் எடுத்துக்குங்க சார்னு சொல்லலாம்....
ப்ரண்டோட கப்போர்ட்-குள்ள என்ன இருக்குன்னு தெரியல அதையும் எடுத்துகிட்டு என்ன விட்டுட்டு போவாய்ங்களா..? 24 வயசுல என் ஆயுசு இப்டி காமராஜபுரத்துல அனாதையா ஒத்த வீட்ல திருட்டுப்பய கையாலயா போகணும்....? நெஞ்சு படக்.. படக் என்று அடிக்க...
பேன் காத்தை எல்லாம் சட்டை பண்ணாமல் பனியன் நனையத் தொடங்கி இருந்தது....வெளில இருந்து பேசிட்டு இருந்த ஆளுல வாட்ட சாட்டமா இருந்த ஒரு ஆளுகிட்ட கொஞ்சம் குட்டையா கட்டையா இருந்தவரு..நம்ம வீட்டை காட்டி என்னமோ சொல்ல...அவரு வெளி கேட் கிட்ட வந்து அதை திறக்க ட்ரை பண்ணிட்டு இருந்தாரு....
ஹ்ம்ம்ம்.. இனிமே பாத்துட வேண்டியதுதான் வாழ்வா சாவான்னு.... உடம்புக்குள் ஒரு சூடு பரவ.. திலீப் ரூமுக்குள்ள போயி அவனோட கிரிக்கெட் பேட்ட கையில எடுத்துக்கிட்டேன்.. ஐ திங்க் இவனுக தில்லான திருடனுக போல...., கதவை உடைச்சு நேராவே வராய்ங்க.. பிக்காஸ் பக்கதுல யாரும் இல்லன்னு தைரியம்..
லெட் சீ... கதவை உடைச்சு உள்ள வரும் போது உள்ள வர்றவனுக்கு தலையில்ல டமால்னு ஒரே அடி.... இடது பக்கம் செவுள்ள ஒரு அடி பேட்டால.. அடுத்து செகண்ட் பர்சன் .. தேர்ட்.....எப்படியும் ஒரு மூணு பேரை அடிச்சுட்டு... வெளில ஓடிட வேண்டியதுதான்....
வாழ்வா.. சாவா? வீட்ல வச்சிருக்க ஒரே ஒரு கத்தி பச்சை மிளகாய கூட சரியா வெட்டாம இருக்கறது இப்போ எனக்கு எரிச்சலா இருந்துச்சு.....! ச்ச்சே ஒரு ஆயுதம் கூட இல்லாம தங்கி இருக்கோமேன்னு முத முறையா ஒரு வன்முறை புத்தியில ஏறி நின்னு கேள்வி கேக்க...
மெல்ல முன் ஜன்னல் வழியா வெளியில பாத்தேன்.. ஒரு ஆளு காம்பவுண்ட் ஏறி குதிச்சுட்டான்....ம்ம்ம்... வாடா... வா.நீ எனக்கு எமனா ? நான் உனக்கு எமனா பாத்துடலாம்....காம்பவுண்ட் உள்ள வந்தவன்.. நேரா வந்து கதவை தட்ட ஆரம்பிச்சுட்டான்...
ம்ம்ம்ம்ம்ம்ம் அவன் கதவை தட்டினா நான் தொறந்துடுவேனா......ராஸ்கல்! நான் ரெடியாகி நின்றேன்..! உடம்பு முழுதும் அந்த மார்கழி மாத அதிகாலை மூணு மணிக்கும் வியர்வை ஊற்றியது....
கதவை தட்டி பார்த்தவன்.. மறுபடி கொஞ்ச நேரம் நின்னுட்டு.. காம்பவுண்ட் ஏறி வெளில போயி... மிச்ச இருக்க ஆளுங்க கிட்ட ஏதோ சொல்ல...
கூட்டமா எல்லோரும் மறுபடி வந்த வழியில திரும்பி போனாங்க....!!! மறுபடி என்ன பிளானோட வரப்போறங்கன்னு தெரியலை.. மே பி டோர உடைக்க ஏதாச்சும் மெட்டிரியல் எடுத்துட்டு வருவாங்கன்னு என் புத்தி சொல்ல...
கதவு ஓரமா குத்துக்காலிட்டு பேட்டோட உட்கார்ந்தேன்.. அழுகையும் ஆத்திரமுமா வந்துச்சு....!!! தனியா தங்கினது எவ்ளோ தப்பு.... அம்மா...சட்டென புத்திக்குள் வந்து போனாள்....
கதவு ஓரமா காலை நீட்டி உட்கார்ந்த படியே.......ரொம்ப அலார்ட்டா....
...
....
...
...
மறுபடி கதவை டமால் டாமல்னு தட்ற சத்தம்....ஓ.....மை காட் ரொம்ப சத்தமா தட்றாய்ங்க.... தே ஆர் பேக்ன்னு சொல்லிட்டு கண்ண முழிச்சு பாத்தா பங்குனி வெயிலு பல்ல கழட்டிகிட்டு அடிக்கிற மாதிரி ஒரே வெளிச்சம் வீடு புல்லா....! அட இது என்னாது இது....வால் கிளாக்ல மணி பார்த்தேன்.. மணி பத்தரைன்னு பளீச்ச்னு செவுள்ள அறைய....ஞாயிற்றுக் கிழமை காலை என்னை எந்திரிடா நாயேன்னு மனசுக்குள்ள ஒரு உதை உதைக்க..
அட எப்போ தூங்கினேன்.? எங்க அந்த திருடங்க.. ? பக்கத்துல கிரிக்கெட் பேட் பவ்மயா படுத்து இருந்துச்சு....
அட கதவை யாரோ தட்றாங்களே... இன்னும்... ! டக்குன்னு பேஸ் வாஸ் பண்ணிட்டு தைரியாம கதவை தொறந்தேன்.. வெளியில மத்திம வயசுல ஒருத்தர் நின்னுகிட்டு இருந்தாரு... காம்பவுண்ட் வெளியில ஒரு ஆறு, ஏழு பேரு நின்னுகிட்டு இருந்தாங்க... பக்கத்துல ஒரு லாரி....
தம்பி காம்பவுண்ட் கதவை கொஞ்சம் தொறங்களேன்.... மத்திம வயதில் இருந்தவர் சொல்ல.. சரிங்கண்ணே என்று சொல்லி விட்டு கதவை திறந்தேன்...
" இந்த பக்கத்து வீடு நம்ம வீடுதேன்... நான் சிங்கப்பூர்ல இருந்தேன்... இப்பத்தான் வந்து ரெண்டு மூணு நாளாச்சு...! வீட்ட இடிச்சுபுட்டு புதுசா கட்டப் போறோம் தம்பி... அதான் செங்கல இறக்கி வைக்க நம்ம வீட்டு முன்னாடி எடம் இல்ல தெருவுல இறக்கி வச்சா பயலுக களவாண்டுட்டு போயிடுவாய்ங்க...
நம்ம வீட்டு காம்பவுண்ட் உள்ள விசாலமா எடம் இருந்துச்சு... நேத்து ராத்திரி போன... போட்டு சல்லிசா செங்கல் வந்து இருக்கு ரெண்டு லோடு போட்றுவம்னு சொன்னாய்ங்க.. ! உங்க கிட்டயும் பெர்மிசன் கேக்க பகல் நேரத்துல முடியல நீங்க எல்லாம் வேலைக்கு போய்டுறீங்க... சரி ஞாயித்து கிழமை லீவு நாளு பெர்மிசமன் கேட்டுகலாம்னா.. நேத்து நைட் பன்னெண்டு மணிக்கு திடீர்னு லோடு வந்துடுச்சு...
நைட் வந்து கதவை தட்டிப் பாத்தோம்...! தம்பி நல்ல தூக்கத்துல இருந்து இருப்பீக போல....மன்னிச்சுடுங்க தம்பி அவசரம்..."ன்னு சொல்லிட்டு அந்த கருப்பையா அண்ணன் சிவகங்கை பக்கம்தான் சொந்த ஊரு அவருக்குன்னு சொல்லவும்...
கைய கொடுத்துப்புட்டு....சரிங்கண்ணேன்னு சொல்லிகிட்டே...... நான் தலைய சொறிஞ்சுகிட்டு.....ரொம்ப நேரம் ஏன் கேன மாதிரி நின்னுகிட்டு இருந்தேன்னு கருப்பையா அண்ணனுக்குத் தெரியாது.......
ஆனா....
ஒங்க எல்லாருக்கும் தெரியும்.....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !
வெளில சொல்லிடமாட்டீங்களே.......