அவளுடன் ஆவலுடன் ! (கே.எஸ்.கலை)

புல்லாங்குழலும் யாசிக்கும் உன்குரலில்
புள்ளினமும் இசை கேட்க யோசிக்கும்,
அந்தச் சோலையில் அந்தி மாலையில்
மலையடியில் பகலவன்….உன் மடியில் நான் !

புள்ளினமும் பூவினமும் சொக்கி நிற்க
கள்ளுண்ட இளமையது துள்ளித் தள்ளாட
பள்ளியறை வாயில்கள் பவ்வியமாய் தாழிட
பஞ்சணையில் நான்....நெஞ்சணையில் நீ !

தோல் விறைக்கும் கடும் குளிரில்
பால் சுரக்கும் உன் பேச்சு,
தோள் சாய்ந்து முணுமுணுக்க....
சுவாலையாய் நீ....துவாலையாய் நான் !

வெட்கத்தில் மெழுகொளி நெளிந்தாட
உன் மயிர்ச் செடிகள் சிலிர்க்க
என் உயிர்த் துளிகள் துளிர்க்க
வெட்கத்தில் நீ....வெட்பத்தில் நான் !

பொறுமை துறந்து மெழுகது கரைந்திட
மேகத் திரை விலக்கிய நிலவுன்னோடு
மோகம் தாக்கி இவன்- முற்றும் வீழ்ந்திட
வேர்வையில் நீ.... வேட்கையில் நான் !

கொஞ்சநாளில் நெஞ்சம் முழுதும் நெகிழும்
எந்த நேரமும் மஞ்சம் உன்னோடு மகிழும்
வஞ்சி உந்தன் வயிற்றில் நான் !
விஞ்சி நிற்கும் கொஞ்சலோடு நீ !

எழுதியவர் : கே.எஸ்.கலை (19-Jan-13, 2:11 pm)
பார்வை : 896

மேலே