பெயரற்றுத் திரிந்த கடவுள்....

ஒரு பெயருமில்லாத கடவுள்....
தனது முகம் காட்டாமல்
அலைந்து கொண்டிருந்தார் ...
எங்களின் தெருக்களில்..சில காலமாய்.


எதிர்பார்ப்புகளும்...ஏமாற்றங்களுமாய்
திரிந்து கொண்டிருந்த
எங்களைத்
தனது குறிப்பேட்டில்
அவர் குறித்து வைத்துக் கொண்டிருக்கலாம்.


கருவறைக்குள்...ஒளிந்து கொண்டிருந்த
தெய்வங்களை விமர்சித்த
எங்களின் கவிதையை
அவர் தெருக்களில் திரிந்த காலத்தில்
படித்திருக்கலாம்.

எமது புன்னகைகள்
இன்னொருவனுக்கான பள்ளங்களாயும்...
எமது கை குலுக்கல்கள்...
இன்னொருவனின் எலும்பு முறிப்பதாயும்
இருக்கும் செயல்களை...
அவரது கடைக்கண்கள்
கவனித்துக் கொண்டுதானிருந்தன.


திக்கற்றவர்கள்..
தொட்டில் குழந்தைகள்..
முதியோர் இல்லங்கள்...
நடைபாதைக் குடும்பங்களை...
அவரது குறிப்பேடுகள்
எழுதிக் கொண்டிருக்கலாம்...
அவரே... உகுத்த
கண்ணீரைத் துடைக்க இயலாதபடி.


அரசியல்...வியாபாரங்கள்...
என எளிய மனிதனை ஏமாற்றும் யுக்திகள்...
ஆறாம் அறிவில் எங்கே வந்தது
என்பதை அறிய
அவருக்கிருந்த அறிவு
பயன்படுவதாய் இல்லை.


சில நாட்களாய்....
எனது தெருவில்
பெயரற்று திரிந்த கடவுள்...
நேற்று திடீரெனக்
காணாமல் போன விஷயம்..
உங்களைப் போலவே...என்னாலும்
அறிய முடியாமல் போனதைத்தான்..


அவர் தலை குனிந்து
பூமியில் கிழித்துச் சென்ற
காகிதத்திலிருந்து எழுதிவைக்கிறேன்...
இந்தக் கவிதையாக.

எழுதியவர் : rameshalam (22-Jan-13, 7:21 pm)
பார்வை : 109

மேலே