என்னைப் பற்றி…… பகுதி 17
மீனவருக்கு நேரும்
அவலநிலையால் நிலைகுலைந்து
என் மூச்சுத் திணறலை
நிவர்த்தி செய்ய
அரசு மருத்துவமனையில்
நான்!
நான் கண்ட
என் சகோதரியின்
நிலையால்
உருக்குலைந்து
என் மனம்!
தீவிர சிகிச்சை பிரிவில்
புன்னகை மாறாமல்
மனதின் உறுதி குறையாமல்
துணிவுடன் அவள்!
ஆம்!
எவரின் ஆறுதலையும்
உதவியையும்
எதிர்நோக்காமல், நோகாமல்
துணிச்சலுடன்
இயல்பாய்
அவள்!
ஊராட்சி உறுப்பினர்,
நகராட்சி தலைவர்,
காவல் துறை
தலைப் பொறுப்பாளர்,
கல்வி இயக்குனர்,
வாட்டாட்சியர்,
மாவட்ட ஆட்சியர்,
சட்டமன்ற உறுப்பினர்,
தலைமைச் செயலகர்,
மாநில அமைச்சர்கள்
முதலமைச்சர்,
எதிர்கட்சி தலைவர்,
மாநில ஆளுனர்,
நாடாளுமன்ற உறுப்பினர்,
மத்திய அமைச்சர்கள்,
பிரதமர், அவரின் ஏவலர்கள்,
குடியரசுத்தலைவர் அவரின்
படைவீரர்கள்,
கட்சிகளின் உறுப்பினர்கள்,
ஒன்றிய தலைவர்கள்,
வட்டச்செயலர்கள்,
மாவட்ட செயலர்கள்,
மாநில தலைவர்கள்,
மத்திய தலைவர்கள்
முந்நாள் தலைவர்கள்,
இந்நாள் தலைவர்கள்
தேர்தல் ஆணையர்கள்,
அவர்தம் அலுவலர்கள்,
இந்த சகோதரியின் கதையால்
சம்பாதிக்கும் ஊடகங்கள்,
எழுத்தாளர்கள், வியாபாரிகள்,
திரைப்பட இயக்குநர்கள்,
இசை அமைப்பாளர்கள்,
நடிகப் பெருந்தகையோர்,
பெண்ணுரிமை அமைப்பாளர்கள்,
மனித உரிமை ஆர்வலர்கள்
இன்னும் சொல்லப்போனால்
மிருகவதைத் தடுப்பு ஆர்வலர்கள்
தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்
மனிதாபிமானம் மிக்கவர்களாய்
தம்மை பறைசாற்ற நினைப்பவர்கள்
ஏன்,
அமிலத்தை
அறியாமையில் விற்ற
அந்த அரிய நபர்
இத்தனை பேர்களில்
ஒருவருக்கும்
நேரமே கிடைக்கவில்லை
என்பதை தவறாகவே
எடுத்துக்கொள்ளாது,
இயல்பாய், துணிச்சலுடன்
தீவிர மருத்துவ பிரிவில்
நிதிக்காகவும், நீதிக்காகவும்
நம்பிக்கையுடன்
புன்முறுவல் மாறாமல்
அவள்!
அதிகம்தான் ஆனது
என் மூச்சு திணறல்
இத்தனை பேர்களின்
நிலை கண்டு!
அவள் சொன்னாள்
எனக்கு ஆறுதல்
தனது விடாமுயற்சியான
தன்னம்ம்பிக்கை உணர்வு
புன்முறுவலால்!
இன்னும்
மூச்சு
விட்டுக் கொண்டுதான்
இருக்கிறோம்
நானும்
இந்த மற்றும் இது போன்ற
என் அநேக சகோதரிகளும்!
பிரபஞ்சத்தில் இல்லாத
உயிர்க்காற்று
இருந்தும் குறைகிறது
இந்த பூமியில்!
பிரபஞ்சத்தில் இருந்து
திரும்பி வந்து,
சிரமமான மூச்சுடன்…..
பூமியில் மங்காத்தா.