பட்டத்து யானை !

முன்னொரு காலத்தில் மகத நாட்டு அரண்மனையில் பட்டத்து யானை ஒன்று இருந்தது. அதன் மீது அமர்ந்து செல்வதைப் பெருமையாக நினைத்தான் அரசன். அதற்கு எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டான். அரண்மனை லாயத்தில் அந்த யானை உண்டு கொண்டிருந்தது. பசியால் வாடிய நாய் ஒன்று அங்கே வந்தது. எலும்பும், தோலுமாகப் பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது அது.
யானை உண்ட போது சிந்திய உணவை அது பரபரப்புடன் உண்டது. இதைப் பார்த்து இரக்கப்பட்ட யானை அதற்கு நிறைய உணவைத் தந்தது. அதுவும் மகிழ்ச்சியுடன் உண்டது. அதன் பிறகு அது நாள்தோறும் அங்கே வரத் தொடங்கியது. யானையும் தன் உணவை அதற்குத் தந்தது.

நாளாக நாளாக அவை இரண்டும் நெருங்கிய நண்பர்கள் ஆயின. எப்போதும் இணை பிரியாமல் இருந்தன. நாள்தோறும் நிறைய உணவு உண்டதால் அந்த நாய் கொழுத்துப் பருத்தது. அழகாகக் காட்சி அளித்தது. அங்கே வந்த செல்வர் ஒருவர் அந்த நாயைப் பார்த்தார். அதைத் தன் வீட்டில் வளர்க்க விரும்பினார்.

பாகனிடம் அவர், “”இந்த நாய்க்கு விலையாக நூறு பணம் தருகிறேன்!” என்றார்.

பணத்தாசை கொண்ட அவன் அந்த நாயை அவரிடம் விற்று விட்டான். தன் நண்பனை நினைத்து அந்த யானை உணவு உண்ணவில்லை. எப்போதும் கண்ணீர் வடித்தபடியே இருந்தது. அதை அறிந்த அரசன் அரண்மனை மருத்துவர்களை அனுப்பி யானையை சோதிக்கச் சொன்னான். பட்டத்து யானையைச் சோதித்த அவர்கள் அரசனிடம் வந்தனர்.

“”அரசே! பட்டத்து யானைக்கு எந்த நோயும் இல்லை. அது ஏன் உணவு உண்ணவில்லை? கண்ணீர் வடிக்கிறது என்பது புரியவில்லை!” என்றனர்.

என்ன செய்வது என்று குழம்பிய அரசன் அமைச்சரை அழைத்தான். “”பட்டத்து யானைக்கு எந்த நோயும் இல்லை என்று மருத்துவர்கள் சொல்கின்றனர். நீங்கள்தான் எப்படியாவது அதைக் குணப்படுத்த வேண்டும்!” என்றான்.

அறிவு நிறைந்த அந்த அமைச்சர் லாயத்திற்கு வந்தார். உடல் மெலிந்து கண்ணீர் வடித்தபடி இருந்த யானையைப் பார்த்தார். அதன் முன் வைக்கப்பட்டு இருந்த சுவையான உணவு வகைகள் அப்படியே இருந்தன. “இந்த யானைக்கு ஏதோ துன்பம் நிகழ்ந்து உள்ளது. கண்டிப்பாக அது பாகனுக்குத் தெரிந்து இருக்கும்,’ என்று நினைத்தார் அவர்.

பாகனை அழைத்த அவர், “”அண்மையில் இந்த யானையைத் துன்பப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. அது உனக்குத் தெரிந்து இருக்கும். அது என்ன என்ற உண்மையைச் சொன்னால் நீ உயிர் பிழைப்பாய்,” என்று மிரட்டினார்.

வேறு வழியில்லாத அவன், “”இங்கே கொழு கொழுவென்று நாய் ஒன்று இருந்தது. அதுவும் இந்த யானையும் எப்போதும் ஒன்றாகவே இருந்தன. அந்த நாயைச் செல்வந்தர் ஒருவர் விலைக்குக் கேட்டார். நானும் விற்று விட்டேன். அன்றிலிருந்து இந்த யானை எதையும் உண்பது இல்லை. கண்ணீர் வடித்தபடி உள்ளது!” என்றான்.

“”அந்த நாயை மீண்டும் இங்கே கொண்டுவா!” என்றார் அமைச்சர்.

அவனும் நாயுடன் அங்கே வந்தான். படுத்து இருந்த யானை தன் நண்பனைப் பார்த்ததும் எழுந்தது. அந்த நாய் வாலை ஆட்டியபடியே யானையின் அருகே ஓடியது. மகிழ்ச்சியாகக் குரைத்தது. யானை அதைத் தன் துதிக்கையால் தடவிக் கொடுத்தது.

உணர்ச்சி மிகுந்த இந்தக் காட்சியைப் பார்த்து உள்ளம் நெகிழ்ந்தார் அமைச்சர். விலங்குகளுக்குள் இப்படி ஒரு நட்பா என்று வியப்பு அடைந்தார். அரசனைச் சந்தித்த அவர் நடந்ததை எல்லாம் சொன்னார்.

“”சில நாட்களில் பட்டத்து யானை பழைய நிலையை அடைந்து விடும்!” என்றார். அவர் சொன்னது போலவே அந்த யானையும் பழைய பெருமித நிலையை அடைந்தது.

எழுதியவர் : Ganesh (25-Jan-13, 5:10 pm)
பார்வை : 1250

மேலே