அரக்கனை அனுமதியோம்

----- அரக்கனை அனுமதியோம் ----

என் தாய் நாடே
நீ யார் பக்கம் ?

ராமருக்காக
மதசார்பற்ற மண்ணில்
மசூதியை இடிக்கிறாய் ?

ராவணனுக்கு உன்
ராணுவத்தை கொடுக்கிறாய் ?

நீ யார் பக்கம்?

கூட்டு சேரா நாட்டின்
குணம் இதுதானோ ?

இலங்கை தள
இந்து கோவில்களை இடித்தவர்
இந்தியா வருகிறார்.
சாமி கும்பிட

காதில் பூ வைத்தவன்
கேட்டு நம்பிட..

தொப்புள் கொடி எரித்தவனை
தோழனாக
தொழுது வணங்குகிறது
எங்கள் அரசு.

கருப்பு கொடி ஏந்தி
கண்டிக்கும் எங்களை
கண்டு சிரிக்கிறது
சிங்கள அரசு.

தமிழின உணர்வை
இலக்கியத்தைவிட
எங்களுக்கு
இலங்கைதான் புகுத்தியது.

கோசம் போட்டு நாங்கள்
கேட்டு எழுந்தது
தமிழின விடுதலையை

நாசம் செய்யும் கூட்டம்
நடத்தி முடித்து
தமிழின படுகொலையை

மரித்த மைந்தர்களுக்காக
மௌன அஞ்சலி செலுத்துகிறோம்
நீயோ எங்களை
ஊமையென்று உத்தேசிக்கிறாய்..

ஏழுகோடியும் எழுந்து நின்று
மூச்சு தேய கர்ஜிக்கிறோம்
நீயோ
கூச்சலென்று குறிப்பெழுதுகிறாய்

நடந்ததை காட்டி
நியாம் கேட்கிறேன்.
நீயோ
பழங்கதை பேசி
பழி தீர்க்கிறாய்....

உயிர் தப்பிய
உறவுகள்
ஊனமாய் பிணைகைதியாய்
விதவையாய் வேசியாய்
அனாதையாய் அரைஉயிராய்
அங்கே .....

அதில் சிலர்
அகதியாய் இங்கே

அவன்
ஈழம் கேட்டவரை எல்லாம்
வெட்டுகிறான்.

நீ அவனுக்கு
மேளம் தட்டி கொட்டுகிறாய்.

இன்னும் எத்தனை
நாட்களுக்குத்தான்
இதை பற்றி எழுதுவது?

இன்னும் எத்தனை
கால்களுக்குதான்
கண்ணீர் ஊற்றி கழுவுவது?

உலக நாடுகள்
உரைக்கிறது
போர் குற்றம் புரிந்தது
இலங்கையென....

சிங்கள நாடு
சிரிக்கிறது
அதற்க்கு இந்திய தேசம்
உடந்தையென...

திருப்பி அடிக்கும்
திமிருடையவர்கள்
தினம் கத்துகிறோம்
புரியலையா?

திருப்பதி உண்டியல்
உனக்கின்னும் ஏன் நிறையலையா?

வீர வரலாற்று
பேருள்ளவர்கள்
வீதியில் போராடுகிறோம்
தெரியலையா?

இந்திய எல்லைக்குள்
தமிழ்நாட்டை நீ வரையலையா?---- தமிழ்தாசன் -----
06.02.2013
(திரு. ராசபக்சே திருப்பதி வருவதை எதிர்த்து
எழுதிய கவிதை)

எழுதியவர் : ---தமிழ்தாசன்---- (6-Feb-13, 8:10 pm)
பார்வை : 143

மேலே