அம்மாவின் மழை

காலையில சூரியன
காணும் முன்ன
கண் விழித்து
வாசலில
சாணி தெளித்து கோலமிட்டு...

பஞ்சார கூடை திறந்து விட்டு
அஞ்சாறு கோழிகளுக்கும்
கம்பு தானியமிட்டு...

ஆடுகளுக்கு தழைஇட்டு
மாடுகளுக்கு கூளமிட்டு...
தோட்ட செடிகளுக்கு நீர் விட்டு...

உரலிலிட்டு
இடிச்சு வச்ச சோளத்தை
உலையிலிட்டு
கூழாக்கி வச்சு...

காட்டு வேலைக்கு
கூட்டமாக சனம் கிளம்பி
உனை அழைக்க..

தாயக்கா...
இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு...
நீங்க முன்ன போங்க
நான் பின்னாலே வந்துடுறேன் என சொல்லி
மிச்சமிருக்கும் பாடு முடித்து

ஒத்தைல கண்மாய் கரை கடந்து
ஆளு உசரம் தாண்டி வளந்து கிடக்கும்
சோள தட்டகாடு பல கடந்து

பருத்தி காடு சேர்ந்து...
பகிர்ந்து போட்ட
நிரை களை களைந்து
வேலை முடித்து

சுள்ளி பொறுக்கி
அறுவாளின் கருக்கு தீட்டி
மாட்டுக்கு புல் அறுத்து
சுள்ளியோடு சேர்த்துக்கட்டி
பிஞ்சு போன செருப்பெடுத்து
பெருஞ்சுமை கட்டோடு சேர்த்து கட்டி

பொழுதோடு போட்டியிட்டு
வீடு வந்து சேறு முன்ன
விரஞ்சு வந்த மழை

கூரை வேய்ந்த
வீடெல்லாம் வெள்ளகாடாக்கி
முட்டு வரை தண்ணி
முந்தி நிக்க
பார்த்த கண்ணு தண்ணி
பொங்கி நிக்க

அழுவதற்கு நேரமில
ஆக்க பொறுக்காது பிள்ளை குட்டிகஎன
ஒழுகாத இடம் பார்த்து எங்களை
உட்கார வச்சு

செத்த நேரம்
தைப்பாற நாதியத்து
சட்டி வச்சு
நீர் இறைச்சு தெருவில் தள்ளி

விறகடுப்பு ஈரமதை
ஊதி ஊதி நெருப்பு கூட்டி

உலை வைக்க அரிசி இன்றி
கடைக்கார முத்துராசுகிட்ட
கடனாக பேச்சு வாங்கி
பெரு மூச்செறிந்து
நீ சமைச்சு பரிமாறி

ஒழுகாத இடம் பார்த்து
உறங்க வச்சு
இரவெல்லாம்
அடிச்சு பெஞ்ச மழையோட
உன்
இமைஎல்லாம் வழிஞ்ச மழை...

எழுதியவர் : வெள்ளூர் ராஜா (8-Feb-13, 11:07 pm)
பார்வை : 214

மேலே