விரிந்த புருவங்கள்

தமிழ்த்தேசியம் பேசிய
நண்பரின் மகன்
ஆங்கிலப்பள்ளிக்குச்
சென்றபோது
விரிந்த புருவங்கள்
சுருங்கின.....

பகுத்தறிவு பேசிய
நண்பரின் புதுமனை
புகுவிழாவில்
புரோகிதர் யாகம்
வளர்த்தபோது
விரிந்த புருவங்கள்
சுருங்கின ...

பெண்ணுரிமை பேசிய
நண்பரின் திருமணத்திற்கு
வரதட்சணைக்குப் பதிலாய்
காலிமனை கேட்டதாய்
காதில் விழுந்தபோது
விரிந்த புருவங்கள்
சுருங்கின ...

சாதிமறுப்பு பேசிய
நண்பரின் மகன் அவரைவிட
கீழ்சாதிக்காரப் பெண்ணை
காதலித்ததால் கண்டிக்கப்பட்டபோது
விரிந்த புருவங்கள்
சுருங்கின ...

புரட்சி பேசிய
என்னுயிர்த்தோழன்
பெருமுதலாளியிடம்
தேர்தல் நிதியைப்
புன்னகையோடு வாங்கி
திரும்பியபோது
விரிந்த புருவங்கள்
சுருங்கின ...

சிரித்தனர் தலைவர்கள்
புகைப்படங்களில்.....
சிலைகளில்...
புத்தகங்களில்....

எழுதியவர் : தாஹிர் பாட்சா (21-Feb-13, 9:35 pm)
பார்வை : 100

மேலே