தந்தையின் தியாகம்

அண்டா குண்டாவை
அடகு வச்சு
நெலபுலத்த
ஒத்தி வச்சு
ஒத்த மகன
பட்டணத்துப்
படிப்புக்கு
அனுப்பிவெச்சோம்

அவனும் ஏதோ
வாயில நொழயாத
படிப்பு முடிச்சான்

காலணா
கூலியானாலும்
கவர்மெண்டு கூலியா
இருக்கணும்னு
ஏறாத
படிக்கட்டு இல்ல
மூணு கொடு,
அஞ்சு கொடுன்னு
காசு கேக்குறாக

கஞ்சிக்கே நாம
கஷ்டப்படுறப்போ,
லஞ்சத்துக்கு
எங்க போறது?

பேசாம
வீரண்ணஞ்சாமிகிட்ட
குறி கேக்கலாம்னு
வெள்ளாளப்பட்டி
போனேன்
நம்ம அடைக்கண்மேல
வீரண்ணன்
தச்சுரூவா வந்து
எறங்கிடுச்சு....

என் ஒத்தப் புள்ளய
கரை சேக்கபுடாதான்னு
கண்ணீ­ர் விட்டு
அழுதேன்

வெள்ளியிலே
வேல் செஞ்சு வையி
வேலைய நான்
கொண்டாறேன்னுச்சு

சாமியும் கூலி
கேக்குதே

பேசாம,
கல்லுப்பட்டு
கணபதி சேர்வை மகளுக்கு
நம்ம பயல
மாப்புள கேக்குறாக
ஒத்தப் பய
ஒசந்த படிப்புன்னு
ஒருவழியா
பேசி முடிச்சு

அம்பது சவரனும்
வட்டிக்கடையும்
வச்சுத் தாங்கன்னு
கேக்க வேண்டியதுதான்

சாமியே கேக்குறப்ப
நாம கேக்கப்புடாதா?

என்ன ஒண்ணு....
பயல
வீட்டோட மாப்புளயா
கூப்புடுறாக

விட்ற வேண்டியதுதான்

அவன
படிக்க வைக்க
சொத்து சொகத்த
இழந்தேன்

வாழ வக்கிறதுக்கு
புள்ளைய இழக்க
வேண்டியிருக்கே....

எங்குட்டோ
அவன்
நல்லா இருந்தா சரி

நமக்கு
கொள்ளி வக்க
ஒரு நாளு
வந்து போனா
பத்தாதா?

எழுதியவர் : தெரியாது (23-Feb-13, 6:42 pm)
பார்வை : 319

மேலே