இது தான் இறுதி முறை! (ரோஷான் ஏ.ஜிப்ரி.)

பனிப் படுகைகளில் உறைந்தும்
தீக் குழம்புகளில் உருகியும்
உனக்கு சாதகமாகவும்,சவாலாகவும்
இரண்டு முகங்களுடன்
என்னால் இருக்க இயலாது
திமிர்களாலான இறுக்கம் மிகு உன்
உள்ளங்கை பிடிக்குள் கிடந்து
உழலும் எந்தன்
ஒவ்வொரு அசைவுகளையும் நீ
கண்காணிக்கின்ற கணிப்பு
ஏழேழு ஜென்மங்களுக்கு
போதுமான புரிதல் அவை
என் வாழ்க்கையை கனவுகளால் நிரப்பி
உலகத்தை விட பெரிதாக
சிரிஷ்ட்டித்து வைத்திருந்த
எனக்கான வெளிகளில் நீ
அத்து மீறுவதை
அனுமதிக்க முடியாதென்னால்
ஒத்து வராத அணுகுதல்களோடு
ஊறி உமிழ்ந்து போக
உமியல்ல நான்
சாதனைகளின் சாசனம் எனது.
நெருக்குதல்களோ,அடக்குதல்களோ
நெருங்குகிற பொது
அனுமதிக்கவோ,அங்கீகரிக்கவோ
விருப்பம் வில்லை துளியும்
நீ அடைத்து சாத்தும்
கதவுகளுக்கு பின்னால்
சுவர்களுடன் ஒட்டிக்கொண்டு
இச்சுக்கொட்ட
பல்லி இன ஜந்து
படைப்பென்று நினைத்தாயா?
வியத்தகு
அதிசயங்களை உள்ளே
விதைத்து வைத்திருக்கிறேன்
அது முளைத்து நிழல் விரிக்கும் நான் அமர!
இத்தனை காலமும்
என் சுதந்திரத்தை நீ
தின்று தொலைத்தது போதும்
இனியாகிலும்
வாசலை திறக்க வழி விடு!
ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.