புங்காவனம் களவுபோனது பற்றி
பூங்காவனம் களவுபோனது பற்றி
கு.றஐீபன்
ஒரு பூங்காவனம்
திருடுபோனது பற்றிய முறைப்பாடுகளில்
இதுவரை
தீர்வு எதுவும் எட்டப்படவில்லை
மதிலை உரசியபடியே
எட்டிப்பார்க்கும் செடிகள் மாதிரி
வலிய காவலையும் மீறி
சில வசந்தங்கள் வந்து போகின்றன
எனது மொழிபெயர்க்கப்பட்ட
உணர்வுகளைக் கொண்டு
இன்னும் உன்னால்
திசைகளை அடையாளப்படுத்த முடியவில்லை
கோடைகாணும் புல்வெளியாய்
எனது ஒவ்வொரு பசுமைகளும்
காணாமல் போகின்றன
ஒரு வண்ணத்துப் பூச்சியாய்
சிறகசைக்க முயல்கிறது எண்ணங்கள்
தோற்றுப் போன பாடலொன்றை
மீண்டும் மீண்டும் ஒலிபரப்புகிறாய்
உலகதந்திரங்களால்
ஒன்றாகச் செய்து முடிக்கப்பட்ட
செயற்கை ஊழியில் சிக்கி
திருடுபோனது எனது பூங்காவனம்